பழிக்குப் பழி
“டேய் மச்சான், எனக்கென்னமோ
ரொம்ப பயமா இருக்குடா? இந்த நேரத்தில நாம இங்க வரது சரியாப் படல” என்று
சொல்லிக்கொண்டே எச்சிலை விழுங்கினான் கரும்புலி கந்தன். “ஏய்,
நிறுத்துடா பயந்தாங்கொள்ளி, ஏன் இப்படி பயந்து சாகற,” கோபத்திலும்
கிசுகிசுத்தான் பாலா.
இன்று
அனிதாவை உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக்
கொண்டிருந்தான் பாலா. “என்ன திமிர் இருந்தால் என்ன பொறுக்கின்னு சொல்லும் அந்தக்
கழுதை. அனித்தா… இன்னிக்கு நான் யாருன்னு காட்டுறேன். ஜென்மத்துக்கும்
நீ இந்த நாள மறக்கக் கூடாது. ஏன்டா இந்தப் பாலாவைப் பகச்சிக்கிட்டோம்னு
வருத்தப்படனும்,” பகைமைத்தீயில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாலாவிற்கு
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைத்தாலே பற்றிக் கொண்டு வந்தது.
அனித்தா, தோட்டத்தொழிலாளியின்
பெண். நல்ல அழகி. சாமர்த்தியசாலி. கெட்டிக்காரி. பாலாவிற்கு அவள் மேல் ஏனோ ஓர்
ஈர்ப்பு. ஒரு தலை காதல் முளைக்கத் தொடங்கி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. பல முறை பல
சூழல்களில் தன் காதலை அனித்தாவிடம் பறைசாற்றி ஆகிவிட்டது. ஆனால்,
அனித்தா பக்கத்திலிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பொறுமை இழந்தான் பாலா.
இன்று தன் காதலியின் முடிவைத் தெரிந்துகொண்டே ஆக வேண்டுமென முடிவுக்கு வந்தான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அனித்தாவை வழிமறித்தான்.
“ஏய்...அனித்தா,
எவ்வளவு நாளா நான் உன் பின்னால நாயாட்டும் அலையறேன். ஏன் என்ன கண்டுக்க மாட்ற.
கெஞ்சுனா ரொம்பத்தான் மிஞ்சுற. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்ந்தா
உன்னோடத்தான் வாழனும்னு முடிவு பன்னிட்டேன். ஒழுங்கா இன்னிக்கு உன் முடிவைச்
சொல்லு. இதுக்கு மேல என்னால காத்திருக்க முடியாது,”
கதாநாயகன் தோரணையில் பேசிய பாலாவிற்கு அலட்சியப் பார்வை ஒன்றை மட்டுமே பதிலாகக்
கொடுத்தாள் அனித்தா.
“இவ்வளவு
திமிரு உனக்கு நல்லதில்ல அனித்தா,” கண்கள் சிவந்து வில்லன் அவதாரம் எடுத்த பாலாவை அவமான
உணர்வும் கௌவிக்கொண்டது.
“இங்க
பாரு பாலா, நான் இப்பத்தான் எஸ்.பி.எம். படிக்கிறேன். வாழ்க்கையில
நிறைய சாதிக்கனும். நிறைய சம்பாதிக்கனும். மூத்த பிள்ளையா நான் செய்ய வேண்டிய
கடமைங்க நிறைய இருக்கு. காதல் கத்தரிக்கான்னு சுத்த எனக்கு நேரமில்ல. தயவு செஞ்சு
நீ வேற ஆள பாரு,” பதின்ம வயதிலும் அனித்தாவின் வார்த்தைகளில் முதிர்ச்சி
தெரிந்தது. தனக்குப் பின்னால் தன் தம்பியின் வாழ்க்கையைப் பற்றியும் அவள் என்றும்
மறந்ததில்லை.
“இப்ப
என்னதான் சொல்ல வர. என்ன பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லு. ஏன் கண்டதெல்லாம் பேசற,” ஆறாம்
அறிவுக்கு விடுப்புக் கொடுத்திருந்தான் பாலா.
“சொன்னா
புரிஞ்சிக்கோ பாலா. காதலிக்கிறதுக்கு வயசு இருக்கு. என்ன வற்புறுத்தாத,” பேச்சுக்கு
முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவளைப் பாலா விடுவதாக இல்லை.
“அனித்தா, என்
பொறுமைய சோதிக்காத. என் காதல ஏத்துக்கோ. இல்ல ரொம்ப வருத்தப்படுவ,”
எச்சரித்த பாலாவைத் துச்சமாய்ப் பார்த்தாள் அனித்தாள். பெண்களுக்கே உரிய தன்மான
ஒளி அவள் கண்களில் மிளிர்ந்தது.
“பாலா, நீ
என்ன எப்படி வற்புறுத்தினாலும் இதான் என் பதில். தேவையில்லாம உன் நேரத்தை
வீணாக்காத,“ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கணக்காய்ப் பேசினாள்
அனித்தா. பொறுமை இழந்தான் பாலா. அவள் கையைத் தாவிப் பிடித்தான். அனித்தா அதை
எதிர்ப்பார்க்கவில்லை.
சிங்கப் பெண்ணாய்ச் சீறிப் பாய்ந்தாள் அனித்தா. பாரதியின் புதுமைப்பெண்ணாய் ஒரு கணம் உருவெடுத்தாள்.
மின்னல்
வேகத்தில் அவளையும் அறியாது அவள் கை பாலாவின் வலது கன்னத்தைப் பதம் பார்த்தது. விழுந்த
அறையால் சற்றே நிலை தடுமாறித்தான் போனான் பாலா. ஆனால், அதைக்
காட்டிக்கொள்ள அவன் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
“அனித்தா...
தப்பு பண்ணிட்டே. நீ இதுக்குப் பதில் சொல்லித்தான் ஆகனும்,”
கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டவனை வெறுமையாய்ப் பார்த்த அனித்தாவிற்கு, அவன்
மேல் கோபத்தைவிட வருத்தமே மிகுதியானது.
“பொறுக்கி
மாதிரி பேசாத பாலா. உங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க,”
என்றவளை அடித்துவிடுவது போல் பார்த்தான் பாலா.
“ஏய்
அனித்தா..., நீ என்ன ரொம்ப அழகுன்னு நினைப்பா. உன்ன விட்டா எனக்கு
வேற ஆளு கிடைக்காதுன்னு நெனைக்கிறீயா?” எகிறினான் பாலா.
“வேற
ஆளைப் பார்த்துக் காதல் பண்ணுதான் நானும் சொல்றேன்!” தெளிவாய்ச் சொன்னாள் அனித்தா.
“ஒன்னு
மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. என் காதல ஏத்துக்கல, உன்ன
நிம்மதியா வாழ விட மாட்டேன்,“ அதட்டி அடக்கப் பார்த்தான் பாலா.
“இந்த
அதட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேணாம். ஒழுங்கா என்னை விட்டு விலகிடு,” கோபம்
தலைகேற அவ்விடத்தைவிட்டு உடனே நீங்கப் பார்த்தாள்
அனித்தா. ஆனால், பாலா
விடுவதாய் இல்லை.
“உருப்பிடியா ஒரு வேல இல்ல. உங்க அப்பா அம்மா காசுல வாழ்ற. வெட்கமா இல்ல? போ பாலா. போயி உருப்பிடற வழிய பாரு,” வார்த்தைகளை அனலாய்க் கக்கினாள் அனித்தா.
“ஔவையாரு
மாதிரி அறிவுர சொல்றத நிப்பாட்டு. அஜித்து மாதிரி அழகா இருந்திருந்தா உடனே சரின்னு
சொல்லியிருப்ப. நான் அழகா இல்ல. படிப்பு இல்ல. அதான வேண்டாம்னு சொல்ற. உங்கள பத்தி
எனக்குத் தெரியாதா?” தன்னுள் தான் நினைத்து நினைத்து வருந்தியதை எல்லாம்
குற்றச்சாட்டாய் முன் வைத்தான் பாலா. வழக்கு மன்றம் இல்லாதது மட்டுமே குறையாய்த்
தெரிந்தது.
பெண்களைப்
பற்றிய தப்பான கருத்துகளைப் பாலா போன்றவர்கள் கொண்டிருப்பதை நினைத்து அனித்தா பல
சமயங்கள் வருந்தியதுண்டு. பெண்கள் சுயநலக்காரர்களாகச் சித்தரிக்கப்படுவதை அவளால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகில் பல மூலைகளில் தங்கள் மானத்தைக் காக்க,
குடும்ப மானத்தைக் காக்க ஒவ்வொரு பெண்ணும் எப்பபடியெல்லாம்
போராடிக்கொண்டிக்கிறார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால்,
அதையெல்லாம் அவனிடம் பேசுவதில் அர்த்தமில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
“போதும்
நிறுத்து பாலா. இதுக்கு மேல உன் கிட்ட பேச எனக்கு விருப்பமும் இல்ல நேரமும் இல்ல.
உன்ன போல லட்சியம் ஏதும் இல்லாம, காதல் பண்ணிக்கிட்டு என்னால வெட்டியா வாழ முடியாது.
உன்னால முடிஞ்சத நீ பாத்துக்கோ. நான் போறேன்,” என்ற கதாநாயகி
கணக்காய்ப் பேசிய அனித்தாவை அவன் தடுக்க நினைத்தும் தடுக்க முடியவில்லை.
அசிங்கப்பட்டுப்
போனான் பாலா.
அன்று
பாலாவிற்கு ஏழரை போலும். அவனைச் சுற்றிச் சுற்றி அடித்தது.
அதன்
விளைவு இன்று பாலா கரும்புலி கந்தனுடன் அனித்தாவின் வீட்டின் கொல்லைப்புறத்தில் பூனை
போல பதுங்கி உட்கார்ந்திருக்கிறான். கரும்புலி கந்தன் என்னமோ பெரிய புலி
என்றெல்லாம் கற்பனை செய்துவிட வேண்டாம். அவன் நிறத்திற்குக் கிடைத்த பட்டப்பெயர்
அது. பாலாவின் பால்ய சிநேகிதன். தன்
நண்பன் பாலாவின் வாக்கே தெய்வ வாக்காகக் கொண்டு வாழ்பவன். பாலா வெள்ளைக் காகம்
பறக்கிறது என்றால் உடனே “ஆமாம் ரெண்டுல பறக்குது,”
என்பான். சுயபுத்தி இல்லாதவன்.
பாலா
இன்று அனித்தாவை அசிங்கப்படுத்திவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான். தோட்டப்ப்புறம்.
தோட்டப்புறப் பெண். எளிதாய் முடித்து விடலாம். தன்னம்பிக்கை எவரஸ்ட் சிகரம் அளவில்
இருக்க, தன் திட்டத்தை நிறைவேற்ற எண்ணினான்.
“டேய்
பாலா.. டேய்... எங்கடா இருக்க? எனக்கு இந்த இருட்ட பார்த்தா பயமா இருக்குடா.
பக்கத்துல ஏதோ நிக்கிற மாதிரியே இருக்கு!,” பாலாவின்
மௌனம் கரும்புலி கந்தனின் திகிலை அதிகரித்தது.
“ஸ்ஸ்ஸ்...
“ பாம்பாக இருக்குமோ என்று அரண்டு போனான் கரும்புலி.
“பாலா...!
பாலா...! பேசுடா...”
“ஸ்ஸ்ஸ்...”
மீண்டும் அதே சத்தம்.
சில்லுன்னு
காற்று வேறு. காற்றோடு சேர்ந்து வந்தது மல்லிகையின் மணம். தமிழ்ப்படத்தில் மோகினி
வரும்போது இப்படித்தானே மல்லிகை வாசமெல்லாம் வரும். நினைக்கும்போதே மயக்கமாய்
வந்தது கரும்புலிக்கு. பயத்தின் உச்சத்தில் இருந்த கரும்புலிக்கு விட்டால் ஓடிவிட
வேண்டும்போல் இருந்தது. பாலாவின் நண்பன் ஆனதற்கு இன்று முதல்முறையாக
வருத்தப்பட்டான்.
பயத்திலே
செத்து விடுவான் போல் இருந்தான். திடீரென யாரோ தலையைத் தடவ, அலறத்
தொடங்கியவன்ன் வாயைப் பொத்தி அடக்கினான் பாலா.
“டேய்
மச்சான்... யாரோ என் தலைய தடவுறாங்கடா. பயமா இருக்குடா...வாடா போயிடலாம்,” காலில்
விழாத குறையாய்க் கெஞ்சினான் கரும்புலி.
“ஸ்ஸ்ஸ்...
வாய மூடு. சத்தம் போடாத. இன்னொரு முறை சத்தம் வந்துச்சு.. செத்த...,”
பல்லைக் கடித்தான் பாலா.
“உன்ன
விட மாட்டேன். இன்னிக்கு வசமா மாட்டின, உன்னை வச்சு செய்யப் போறேன்,”
மனதிற்குள் பேசுவதாக நினைத்துச் சத்தமாகவே பேசினான். இன்றைய சம்பவத்திற்குப் பின்
அனித்தாவின் நிலையை எண்ணியவனின் மனத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது.
“என்னடா
பேசுற...? யாருகிட்ட பேசற?”
குழப்பமும் பயமும் ஒருசேர கேட்ட கரும்புலிக்குத் தகுந்த பதில் வரவில்லை.
“கரும்புலி...!
கரும்புலி...! வந்துட்டியா. ஹா...ஹா...ஹா... வாடா உனக்காகத்தான் காத்திருக்கிறேன்.
வாடா... வா...,” முந்தைய நாள் தூக்குப்போட்டுச் செத்துப் போன பொன்னம்மா
அக்காள் குரல் போலவே இருக்க, போட்டிருந்த காற்சட்டை ஈரமாவதை அவனால் தடுக்க
முடியவில்லை. சுடுநீராய் சிறுநீர் வழிந்தோட செய்வதறியாது விழித்தான்.
“கரும்புலி… என் கன்னுக்குட்டி. என் ராசா. என் செல்லம். பாட்டிய
பார்க்க வந்திருக்கியா? உன்ன விட்டுட்டுப் போனப்ப எப்படியெல்லாம் அழுத! மனசு
தாங்கலடா ஐயா. என் கூடவே வந்திடு,” செத்துப் போன அப்பத்தாவின் குரல் காதருகே ஒலிக்க
வெடவெடத்துப் போனான் கரும்புலி.
அந்தக்
குளிரிலும் கரும்புலிக்கு வியர்த்துக் கொட்டியது.
“டேய்
மச்..சான்... என்னால இதுக்..கு மேல கொஞ்ச நேரங்கூட இங்க இருக்...க முடியாது. பயத்துல
நெஞ்செல்லாம் அடைக்கு..து,” கரும்புலியின் குரல் விம்மி விம்மி வந்தது.
ஆனால்,
கரும்புலியைப் பற்றிய கவலை பாலாவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
எவ்வளவு
நேரம் அனித்தா வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுங்கி இருந்தார்கள் என்றே
தெரியவில்லை. பாலாவும் நேரத்தைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. நினைத்த காரியத்தை
இன்றே முடித்தாக வேண்டும். திமிர் காட்டுகின்ற பெண்களுக்குப் பாடம் புகட்ட
வேண்டியது தன் உன்னத கடமை என எண்ணிக் கொண்டான் கடமை வீரன் பாலா. தன்னைப் போன்ற எத்தனை இளைஞர்கள் காதலித்த
பெண்ணால் அவமானப்படுத்தப்பட்டு உள்ளம் நொந்து போயுள்ளனர். தற்கொலை முயற்சியிலும்
இறங்கியுள்ளனர். உயிரையும் இழந்துள்ளனர். அவர்களைப் போல் தான் இருக்கப்போவதில்லை
என உறுதி பூண்டான் பாலா. காதலில்
தோற்றவர்கள் சார்பாக இன்று ஒரு பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பிக்கவே தான் இந்தப்
பிறப்பை எடுத்துள்ளதாக நினைத்துக் கொண்டான். ஆனால், அதில்
துளி அளவும் உண்மை இல்லை என்பது அவனுக்கே தெரியும். இந்தப் பலிவாங்கல் படலம்
முழுக்க முழுக்க சுயநலத்தின் காரணமாகவே உருவானது என்பதே உண்மை.
அனித்தாவின்
வீட்டின் பின் கதவு திறக்கப்படுவதைப் பார்த்த பாலா விசமச் சிரிப்பு சிரித்தான்.
“கரும்புலி...
ரெடியா இரு. நான் சொன்னதும் வீடியோவ ஓன் பண்ணு. சொதப்பிறாத. புரியுதா,”
பதிலுக்குக் காத்தருக்கவில்லை பாலா.
“நான்
இப்ப அந்தத் திமிர் பிடிச்சவளைக் கட்டிப்பிடிச்சி
முத்தம் கொடுப்பேன். நீ வீடியோ எடு. என்
முகம் மட்டும் தெரியக்கூடாது. அவள சத்தம் போடாம நான் பாத்துக்கிறன்.
இன்னையோட அவ வாழ்க்கை குலோஸ். நாளைக்கு ஊரே அவள பத்திதான் பேசப்போது,” நம்பியார்
பாணியில் வெறித்தனம் மேலிட முரட்டுக் குரலில் பேசினான் பாலா. அவன் முகத்தில்
வெற்றிப்புன்னகை பரவத் தொடங்கியது. அவனைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் ஒளி தந்து வட்டமடிப்பதை
இரசித்தான். தன் தலைக்கு மேலே நட்சத்திரத் தோரணங்கள் தொங்குவதாய் உணர்ந்தான். இருளிலும்கூட அந்த
இடம் தேவலோகமாய்த் தெரிந்தது. வெற்றிக்கனியைப் பறிக்கும் தருணம் தூரமில்லை என்பதனை
நினைனக்கும்போது அவன் இதயக் தடாகத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப்
பறந்தன.
அதே
பூரிப்போடு மானைத் தாக்கக் காத்திருக்கும் புலியாய்ப் பாலா பதுங்கிய
இடத்திலிருந்து பதுசாய் எழுந்தான். சத்தம் சந்தடி இல்லாமல் அனித்தாவை நெருங்கினான்; கட்டிப்
பிடித்தான். முரட்டுத்தனமாக முத்தமழை
பொழிந்தான். வாயெல்லாம் பிசுபிசுத்தது. எரிச்சலும் கூடவே சேர்ந்து கொண்டது,
அதைப்பற்றியெல்லாம் பாலாவிற்குக் கவலை இல்லை.
“செத்தடி..,” ஆணவச்
சிரிப்பு சிரித்தான் பாலா. முரட்டுக்காளையை அடக்கிய வீரனுக்கு உரிய பாவனையும்
இறுமாப்பும் அவனை அப்பிக்கொண்டது. அவன்
நினைத்தது போல் அவள் திமிரவில்லை. விட்டு விடும்படி கதறவில்லை. உதவிக்கு
யாரையும் அழைக்கவும் இல்லை. பெண்ணுக்கே உரிய மென்மை அவளிடம் இல்லை. அனித்தா உடலை
மரக்கட்டைபோல் விறைப்பாக வைத்திருந்தாள். இருந்தாலும்
எடுத்த முடிவில் குறியாய் இருந்தான் பாலா.
தன்
எண்ணம் நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி. வெற்றியைக் கொண்டாட மனம் எண்ணினாலும் யாரும்
வரும் முன் இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்பதில் மும்முரமாய் இருந்தான்.
கரும்புலியைத் தேடினான். கண்ணில் படவில்லை. மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கினான். தன்னோடு
வந்த கரும்புலி என்ன ஆனான் என யோசிக்கக்கூட
அவனுக்கு நேரமில்லை. எண்ணமும் இல்லை.
உசேன்
போல்டையும் மிஞ்சி விடுவானோ என்று எண்ணும் அளவுக்குத் தன் வீட்டை நோக்கி ஓடினான். அம்மா
அப்பா தேடுவதற்கு முன் வீட்டில் தஞ்சமடைய நினைத்தான். எங்குச் சென்றாலும்
பதினோரு மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட
வேண்டும். அது அவன் வீட்டில் எழுதப்படாத சட்டம். அவன் வீட்டின் கதவைத்
தட்டுவதற்கும் அம்மா கதவைத் திறப்பதற்கும் சரியாக இருந்தது. பின்னால் கரும்புலி
மூச்சிறைக்க நின்றுகொண்டிருந்தான்.
“என்னடா
இப்படிப் பண்ணிட்ட?” கரும்புலி நொந்து கொண்டான்.
