திங்கள், 7 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 002 #தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டேனா!

 என்னமோ தெரியவில்லை, இந்தக் கோபாலனைப் பார்த்தாலே கோபம் கோபமாய் வருகிறது. இன்று அல்ல நேற்று அல்ல, பல காலமாய் அவன் அப்படித்தான் இருக்கிறான்.

“டேய் கோபாலு,  உன் சங்கத்திலேர்ந்து நேத்து வீடு வீடா வந்து என்னமோ உதவியெல்லாம் செஞ்சாங்களாலாமே, ஏன் சொல்லல? சொல்லியிருந்தா நானும்  உதவி தேவைப்படுபவர்களோட ‘லிஸ்ட்டு’ கொடுத்திருப்பேன்ல!”

“அப்படியா!  தெரிஞ்சா சொல்லியிருக்க  மாட்டனா!” வழக்கம்போல் அவன் பேச்சில்  அலட்சியம். 

“நீயும் அந்தச் சங்கத்திலதான இருக்கிற, எப்படி உனக்குத் தெரியாம போச்சி?” குரலை உயர்த்தினேன்.

“சங்கத்தில இருந்தா எல்லா தெரிஞ்சிருக்கனுமா என்ன? எனக்கு வேற வேலை இல்ல?” அதே அலட்சியம் மீண்டும் எட்டிப் பார்த்தது.

மண்டைக்குள் வண்டு குடைந்தது. நேற்றும்கூட அப்படித்தான். அவன் கம்பனியில் வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கேள்விப்பட்டேன். கோபால் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. கடந்த சில மாதங்களாகவே நான் வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மனம் தாங்கவில்லை. அவன் வீட்டிற்கே சென்று விட்டேன். 

“ஏன்டா, உன் கம்பெனியில ஆள் எடுக்கிறாங்கன்னு சொல்லவே இல்ல?” கோபத்தை வெளிக்காட்டாமலேயே கேட்டேன். 

“என்னடா பேசறா! தெரிஞ்சா சொல்லியிருக்க  மாட்டனா!” கோபாலின் வழக்கமான பதில் என்னைச் சீண்டிப் பார்த்தது.

அவனை ஒரு நண்பனாய் நினைக்கவே மனம் மறுத்தது.

வேறு வழியில்லை. மீண்டும் சந்திந்தபோது தெரியாமல் போக மனமுமில்லை எனக்கு. இதோ என் அருகிலேயே நிற்கிறான். அவன் நிற்கும் இடத்தின் பக்கத்தில்                            மூடப்படாத சாக்கடைக் குழி. ஓரடி பின்னால் எடுத்து வைத்தால் கட்டாயம் இன்று அவனுக்குச் சாக்கடை நீர் குளியல்தான். சொல்லவா, வேண்டாமா? அல்லது கீழே விழுந்த பின் அவன் கேட்டால் இப்படிச் சொல்லலாமா?

“தெரிஞ்சா சொல்லியிருக்க  மாட்டனா!”

 யோசித்துக் கொண்டிருக்கிறேன்...


ஆக்கம்,

உமாதேவி வீராசாமி, 

பெந்தோங், பகாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...