இரண்டு மணி நேரக் கார்ப் பயணம். உடம்பை அடித்துப்
போட்டது போன்ற உணர்வு. சரியாய்ப் பிற்பகல் நான்குக்குத் தங்கும் விடுதி அறைக்குள்
நுழைந்ததும் காலணிகளைப் பொறுப்பில்லாமல்
கழற்றி வீசினேன். கொண்டு வந்த பயணப் பைகளையும்
ஒரு புறமாய் வைத்தேன். கைப்பையைச் சோபாவின் மேல் தூக்கி வீசினேன். கால்கள் தானாய்
மெத்தையை நோக்கி நடை போட்டன. விட்டால் தூங்கிவிடுவேன். ஆனால், அதற்கு
வழியில்லாமல் செய்தது அடுத்துக் காத்திருந்த சந்திப்புக் கூட்டம். ஓய்வெடுக்க ஒரு
மணி நேரம்தான் உள்ளது. மெத்தை மேல் சாய்ந்தேன்.
அடுத்து எப்படியும் மூன்று மணி நேரமாவது கூட்டம் நடக்கும். பிறந்தநாள் அதுவுமாக
இது தேவையா? என்னை நானே நொந்துகொண்டேன்.
உடல் அசதி வாட்டி எடுத்தது. இந்நேரம் என் அன்புக் கணவர் பக்கத்தில்
இருந்திருந்தால் சூடாய் ஒரு கப் காப்பி என் கைக்கு வந்திருக்கும். பத்து
நிமிடங்கள் கூட நிம்மதியாய்த் தூங்க மனம் வரவில்லை. எழுந்து கொண்டேன். துண்டை எடுத்துக் கொண்டேன். குளியல் அறைக்குள்
வேண்டா வெறுப்பாய் நுழைந்தேன். சும்மா சொல்லக் கூடாது! சொகுசு தங்கும் விடுதி
என்பதால் குளியலறையிலும்கூட அற்புதமான வேலைப்பாடுகள். நம் வீட்டிலும் இப்படிக்
குளியலறை இருந்தால் எப்படி இருக்கும்! கற்பனைக் குதிரை,
கடிவாளம் இல்லாமல் விரும்பியபடி ஓட ஆரம்பித்தது. சதைத் தடை செய்யும் வகையில் ஏதோ
ஒரு மணம் குளியல் அறைக் கதவையும் தாண்டி வந்தது. எனக்குப் பரிச்சயமான மணம்.
என்னைக் கட்டிப் போடும் மணம். நான் அதற்கு அடிமை. ஆம்... காப்பி. காப்பியேதான். ஆனால், எப்படி,
எங்கிருந்து வருகிறது? அடுக்கடுக்காய்க் கேள்விகள். உடல் சிலிர்த்தது.
துண்டைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தேன்.
அலங்காரக்
கண்ணாடிக்கு முன் ஒரு கப் காப்பி. என்னை எப்பொழுதும் கட்டிப் போடும் காப்பியின்
மணம், இப்போது ஏனோ என் உடலையும் உள்ளத்தையும் சில்லிடச்
செய்தது. பரபரப்பாய் உடையை மாட்டிக்கொண்டேன். அரை மணி நேரத்திற்கு முன்பே கூட்ட
அறைக்குள் நுழைந்து கொண்டேன். மனத்தின் போராட்டம் அடங்குவதாய் இல்லை. கூட்டம்
எட்டு மணிக்கு ஒரு வழியாய் முடிய, மீண்டும் அதே போராட்டம். தனியாக அறைக்குச் செல்ல
மனமில்லை. தைரியமில்லை என்றும்கூட சொல்லலாம். யாரிடம் சொல்வது?
குழப்பத்துடன் கூட்ட அறையை விட்டு வெளியே வந்தேன்.
“ஹேப்பி
பேர்ட்டே டூ யூ.... ஹேப்பி பேர்ட்டே டூ யூ.... ஹேப்பி பேர்ட்டே டூ மை டியர்
டார்லிங்... ஹேப்பி பேர்ட்டே டூ யூ....” ரோஜாப் பூக்கொத்தோடு கணவர்
கண்சிமிட்டியபோது எல்லாம் புரிந்து போனது.
“ரொம்ப
மோசம் இவரு. கொஞ்ச நேரம் என்னென்ன எல்லாமோ கற்பனை பண்ணிட்டேன்,”
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
“டார்லிங்…! வா சிக்ரட் ரெசிப்பியில
கேக்க வாங்கி வெட்டிட்டு அப்படியே ஜாலான் ஜாலான் போவோம்!” என்னைவிட கணவர் உற்சாகமாயிருந்தார்.
எல்லாம் கணவரின் திட்டபடி நடந்தது.
மறுநாள்
வேலை என்பதால் அவர் புறப்பட, மனமில்லாமல் வழியனுப்பி வைத்தேன். அறைக்கு வந்தேன்.
காப்பி ஆறிப் போயிருந்தது. இந்தக் காப்பி என்னைப் படுத்திய பாட்டை நினைத்துப்
பார்த்தேன். குபீரெனச் சிரிப்பு வந்தது. கொஞ்ச நேரத்தில் கணவரிடமிருந்து அழைப்பு.
“டார்லிங்...
மன்னிச்சிக்கோ. ரூமுக்கு வர முடியா போச்சி,”
அப்படியென்றால்
இந்த ஒரு கப் காப்பி?
ஆக்கம்,
உமாதேவி
வீராசாமி
பெந்தோங், பகாங்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக