திருமண வாழ்க்கைக்கான முதலடி எடுத்து
வைத்திருக்கின்ற இளஞ்சிட்டுகள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். எங்கோ பிறந்தீர்கள். இறைவனின் அருளால் இன்றைய இனிய
நாளில் இணையராக நிச்சயிக்கப்பட்டுள்ளீர்கள். பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து உங்களை அன்போடும்
ஆசிர்வாதத்தோடும் இணையராக அறிவிக்கும் இந்த நாள், இனிய நாளாக
நிலைத்திருக்க வாழ்த்துகள். இன்றைய தினம் உங்கள் இருவரின் காதலை, அன்பை உலகம் அறியும் தினம்.
இந்தக் காதலும் அன்பும் என்றென்றும் நிலைத்திருப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இன்று
தொடங்கி இறுதிவரை இருவரும் கைகோர்த்து ஒன்றாய் இருங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுங்கள். உங்கள்
மணவாழ்க்கையை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள மனமொத்துத் திட்டமிடுங்கள். நல்ல
மணவாழ்க்கைக்குப் புரிதல் மிக அவசியம். புரிதல் இருந்து விட்டால் அன்பு பெருகும். அன்பு
பெருகினால் வாழ்க்கை அழகாகும். வாழ்க்கை அழகானால், மகிழ்ச்சி
ததும்பும். இளமை மாறி முதுமை அடைந்தாலும் கூட இந்த மாறாத அன்பும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும்
கொண்டு ஒன்றாகக் கலந்திருங்கள். வாழ்க்கையை இனிமையான தருணங்களாக மாற்றி
அமைத்திடுங்கள். இன்பத்தில் இணைந்து துன்பத்தில் தோள் கொடுத்து
உதவுங்கள். இன்று இருக்கின்ற இதே அன்பு, இதே பாசம், இதே சந்தோசம்
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள்
மகிழ்ச்சிக்காகப் பிராத்தனை செய்யும் உங்கள் உறவுகளை மறந்து விடாதீர்கள். அவர்கள்
உங்கள் உறவின்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடமை
உங்களுக்கு உண்டு என்பதை மனத்தின் ஆழத்தில் பதியச் செய்யுங்கள். இறுதியாக, நீங்கள்
நினைப்பதை விட உங்கள் வாழ்க்கையின் இந்தத் தொடக்கம் மகிழ்ச்சியானதாக அமைய மனதார
வாழ்த்துகிறேன்.
எழுதி முடித்ததும் பேனாவைக் கீழே வைத்தாள் பாரதி. நேற்றைய தினம் கணவன் விட்டுச்
சென்ற விவாகரத்து கோரல் மனு அவள் கையொப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக