மொட்டை
மாடி சிலுசிலு காற்றுக்காகவே பிரம்பு நாற்காலிகளை அடம் பிடித்து வாங்கிக் கொண்டதை நினைக்கும்போது
ரஞ்சினிக்குப் பெருமையாய் இருந்தது.
“ரஞ்சினி,
இப்ப இந்த நாற்காலி எதுக்கு? தண்டச் செலவு தேவையா?” சலித்துக் கொண்ட பிரபுவை அவள் கண்டு
கொள்ளவில்லை.
ஆ மேங்
கடையில் வாங்கிய நாற்காலிகளை அழகாய் வட்டமாய் அடுக்கினாள். சுற்றிலும் மூங்கில் செடிகளை
வைத்து அழகு பார்த்தாள். ஏதோவொன்று குறையாய்ப் பட, மீண்டும் செடிகளை இருந்த இடத்திலே
வைத்துவிட்டு கைகளைக் கட்டி மொட்டை மாடியைத் தீவிரமாய் நோட்டமிட்டாள்.
“டியர்!
இங்க கொஞ்சம் வாங்களேன். இந்த எடத்த செட் பண்ணனும்.
ஐடியா கொடுங்க ப்லீஸ்!” அறையில் அலுவலக வேலையில் மூழ்கிக் கிடந்தவனைக் கைகளைப் பிடித்து
இழுத்து வந்தாள்.
“ஏய்
ரஞ்சினி! என்ன பண்றே? இந்தப் பைல நாளைக்கு அனுப்பனும்! ஆள விடு!” மீண்டும் அறைக்குள்
புகுந்து கொண்டவனைத் தேடிச் சென்று வம்பிழுத்தாள்.
“என்
மேல உங்களுக்குக் கொஞ்சம்கூட பாசம் இல்ல! நான் ஆச பட்டுக் கேட்டா, சலிச்சுக்கிறீங்க!”
முணகிக் கொண்டு மெத்தையின் விளிம்பில் கால்களைக் குறுக்கி அமர்ந்து கொண்டாள்.
“நீ
பண்றது உனக்கே நல்லாயிருக்கா? என்கிட்ட அவசரத்துக்கு இருந்ததே அந்த மூவாயிரம் வெள்ளிதான்.
நீ என்னடான்னா...”
“ஏன்
இப்படி கஞ்சப் பிரபுவா இருக்கீங்க! போறப்ப என்னத்த எடுத்திட்டுப் போவப் போறோம்!” அலுத்துக்
கொண்டாள்.
அதற்குமேல்
பேசி ஜெயிக்க முடியாது என்பது தெளிவாய்த் தெரிந்து போக மீண்டும் கோப்புகளுக்குள் மூழ்கிப்
போனான் பிரபு.
தன்
ஆசைகளைப் புரிந்துகொள்ளாத கணவனை நினைத்தபோது மனசெல்லாம் வலித்தது. மெத்தையை விட்டு
எழுந்தாள். மீண்டும் மொட்டை மாடிக்குச் சென்றாள். காற்று சிலு சிலுவென வீச அப்படியே
பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அம்மாவிடம் பேசினால் தேவலம் எனத் தோன்றியது.
கைப்பேசியை எடுத்து எண்ணைத் தட்டவும் அவள் அம்மா அழைக்கவும் சரியாக இருந்தது.
“ரஞ்சும்மா!
உங்க அப்பா நம்மல ஏமாத்திட்டுப் போயிருவாரோன்னு பயமா இருக்குடா. திடீன்னு நெஞ்சு வலின்னு
சொன்னவரு, அப்படியே மயக்கம் போட்டு விழுந்திட்டாரு. உன்ன விட்டா எங்களுக்கு யாருடா
இருக்கா! ஈப்போ ஸ்பெசலிஸ்ட்டுக்குக் கொண்டு போயிட்டு இருக்கோம். சீக்கிரம் வாடா!” அழைப்பு
அவசரமாய்த் துண்டிக்கப்பட்டது
“போறப்ப
என்னத்த எடுத்திட்டுப் போவப் போறோம்!” அவள் கேள்வி அவளைப் பதம் பார்க்கத் தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக