“என்னங்க உங்களுக்கு மூள மழுங்கிப் போச்சா என்ன?“ பார்வதியின் சுடுசொற்கள் மாறனைப் பலமாய்த் தாக்கின.
“ஆமா, மூள மழுங்கித்தான் போச்சு... உன்ன கல்யாணம் பண்ண நாள்லேர்ந்து எனக்கு மூள
மழுங்கித்தான் போச்சு!“ மென்று
விழுங்கினான் மாறன்.
“சொல்றத சத்தமா சொன்னா
நல்லா இருக்கும்... வாயிக்குள்ள மொனகனா யாருக்குப் புரியும்!” பார்வதியின்
வார்த்தையில் அனல் பறந்தது.
திருமணமாகி பத்து
ஆண்டுகளில் அவளது நெஞ்சைப் பிழியும் வார்த்தைகளைக் கேட்டுப் பழகிப் போயிருந்தாலும், இன்று அவை அவன் இதயத்தைக் கிழித்துப் பதம் பார்த்தன. மனத்தில் ஏற்பட்ட வலியைத்
தனிமையின் துணையுடன் ஆற்ற முயன்றான். அறைக்குள் புகுந்து கொண்டான்.
“கேள்வி கேட்டா பூன மாதிரி
ரூம்குள்ள போயி அடஞ்சிக்குங்க! உங்கள கட்டிகிட்டு நா படுறபாடு எனக்குத்தான் தெரியும்!”
மாறன் காதில் விழ வேண்டுமென்றே உரக்கக் கத்தினாள்.
“நானா உன்ன தேடிகிட்டு வந்தேன்.
நீதான என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லித் தொல்ல பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட!“ மீண்டும்
தனக்கு மட்டுமே கேட்கும்படி முணுமுணுத்துக் கொண்டான். உடல் சூடேறியது. பின்தலை விண்விண்
என வலித்தது. பைத்தியம் பிடித்து விடும்போல இருந்தது.
அறைக்கதவைத் திறந்து வெளியே
வந்தான். சிலிப்பரை மாட்டிக் கொண்டான். இ.எக்ஸ்.பைவ்.
மோட்டாரில் ஏறி மனம் போன போக்கில் போனான்.
தன்னை மதிக்காத, தன் கோபத்தை
ஒரு பொருட்டாகக் கருதாத கணவனை நினைத்துக் கோபத்தின் உச்சத்தைத் தொட்டு வந்தாள் பார்வதி.
சூழ்நிலை தெரியாமல் கைப்பேசி அழைப்பு வேறு தொல்லைப்படுத்தியது. கணவனின் கைப்பேசியில்தான்
அழைப்பு வந்திருந்தது. புது எண். எடுத்துக் காதில் வைத்தாள்.
“ஹலோ... என்ன நீங்க... என்ன(னை)
பாக்க வரன்னு சொல்லி அரை மணி நேரம் ஆகுது. இன்னும் காணோம். என் மேல கொஞ்சங்கூட பாசம்
இல்ல. உங்ககூட பேச மாட்டேன் போங்க!” அழைப்பு முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டது.
பார்வதி ஊமையாகிப் போனாள்.
அவள் கோபம் கலவரமானது. அப்படியே சோபாவில் சாய்ந்துகொண்டாள். அரை மணி நேரத்தில் அமைதியே
உருவாய் வீட்டிற்குள் நுழைந்தான் மாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக