மகிழ்ச்சி, கவலை, பாராட்டு, தூற்றல், மனநிறைவு, மனவுளைச்சல்
எல்லாம் கலவையாய் முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவனின் எண்ணமும் செயற்பாடும் மனோகரன் சாருக்கு அத்துப்படி.
அவர்கள் பார்வையை வைத்தே முழு ஜாதகமும் சொல்லி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவம். பல நாட்கள்
மகிழ்ச்சியில் மிதந்திருக்கிறார். சில நாட்கள் துன்பத்தில் துவண்டிருக்கிறார். நினைக்கும்போதே
பிரமிப்பாய் இருந்தது அவருக்கு.
“ப்பா!
அறுபது வயது வரைக்கும் நீங்க வேலை செய்யனும்னு அவசியம் இல்ல. பேசாம ரிதையர் பண்ணுங்க.
நாங்க இருக்கோம். உங்க பென்சேன் பணம் இருக்கும். அப்புறம் என்ன கவலை? யோசிக்காதீங்கப்பா!”
ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது மூத்த மகள் சொன்னது நியாயமாய்ப் பட்டது.
முப்பது ஆண்டுகளை ஆசிரியர்ப் பணிக்காக அர்ப்பணித்தாகி விட்டது.
இனி வரும் காலங்கள் குடும்பத்திற்கு. யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. தீர்க்கமாய் ஒரு நாள்
முடிவெடுத்தார் மனோகரன் சார். மனைவிக்கும் இந்த முடிவில் முழுச் சம்மதம்.
“இன்னைக்குப்
போயி ரிதையர்மெண்டுக்கு எப்லை பண்ணப்போறேன்மா. நீங்க நெனைச்ச மாதிரி உங்களுக்காக வாழப்போற
நேர வந்திடுச்சி!” காலையிலேயே மகளுக்கு அழைத்துச் சொன்னபோது மகள் மகிழ்ந்து போனாள்.
சின்னவளுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளலாமென முடிவெடுத்தார்.
வழக்கம்போல காலை மணி ஏழுக்கெல்லாம் பள்ளியை அடைந்து விட்டார்.
நடையில் சிறுபிள்ளையின் குதூகலம் தெரிந்தது. முகத்தில் நிலவின் பொழிவு தெரிந்தது. அலுவலகத்தில்
வருகையைப் பதிவு செய்து விட்டு அதே உற்சாகத்தோடு நடைபோட்டார்.
“ஹாய்
செக்கு மனோ! நம்பாக் ஹேப்பி ஹரி இனி!” எதிரில் வந்த மாணவர்நல ஆசிரியர் இப்ராஹிம் கேட்டபோது
ஒன்றுமில்லையெனச் சிரித்துக் கொண்டே தலையாட்டிக் கொண்டார்.
“செக்கு
மனோ! பொலே சக்காப் சிக்கிட் தாக்?” இப்ராஹிமின் தயக்கம் அவரின் சிரிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அரை மணி நேரத்தில் இந்திய மாணவர்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்பு,
சவால்கள் குறித்து இப்ராஹிம் பேசத் தொடங்கியபோது மௌனமாய்க் கேட்டுக்கொண்டார் மனோகரன்
சார். அவரது மௌனத்திற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள், போராட்டங்கள்.
“ப்பா...!
ரிதையர்மெண்ட் எப்லை பண்ணிட்டீங்களாப்பா? ஸ்கூல்ல என்ன சொன்னாங்க? எப்ப ரிதையர் பண்ணுவீங்க?”
மதியம் அழைத்த மகளின் கேள்விகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாய்த் தந்தார் மனோகரன் சார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக