“இன்னும்
ரெண்டு வருஷம்தான். காய் காய்க்க ஆரம்பிச்சிடும்ல!” சொல்லும்போதே அவன் கண்கள் ஒளி
வீசத் தொடங்கின.
“அது
காய்க்கிறப்ப காய்க்கும். அதுக்குள்ள ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்!” சொன்னதும் அவன் முகம்
வாடிப் போனது.
“பேரப்பிள்ளைங்களுக்குன்னு
நட்டது. அதுங்க வந்தா சந்தோசமா சாப்பிடுங்க இல்லையா?”
“சரிதான்,
யார் இல்லன்னு சொன்னா? அதுக்குன்னு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணனுமா?” சலித்துக்
கொண்டாள்.
மறுவார்த்தை
பேசாமல் மாமரத்தை வருடிக் கொண்டே அப்படியே கீழே உட்கார்ந்துகொண்டான். கையால் குப்பைகளைக்
நகர்த்திவிட்டு அவளும் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சின்ன
மரம்தான். உச்சி நேரம் வந்தால் இப்படி உட்கார
முடியாது. வெயில் சுட்டெரித்து விடும்.
அவன்
அமைதியாய் அவள் தோளில் சாய்ந்துகொண்டான். அவள் மெதுவாய் அவன் முடியைக் கோதி விட்டாள்.
தனி வீடு. யாரும் பார்க்க வாய்ப்பில்லை. பார்த்தாலும் பயப்படுவதற்கு ஒற்றுமில்லை.
அவன் பார்வை முழுக்க மரத்தின்மேல் இருந்தது.
“காய்ச்சிடும்ல
அஞ்சல!” ஏக்கமாய்க் கேட்டான்.
“எத்தனை
முறை சொல்றது? காய்க்கிற நேரத்தில காய்க்கும்? சும்மா அதப் பத்தியே பேசினா
எப்படி?” குரலில் கொஞ்சம் அதட்டல் தெரிந்தது.
அவளை
வெறித்துப் பார்த்தான். கண்களில் ஒளி காணாமல் போயிருந்தது. மிரட்சி, வருத்தம், எதிர்பார்ப்பு, கவலை மட்டுமே
குடிகொண்டிருந்தது.
“சரி,
சரி, கவலப்படாதீங்க! சீக்கிரம் காய்ச்சிடும். காய்ச்சதும் பேரப்பிள்ளைங்க வருவாங்க,
சாப்பிடுவாங்க. உங்க தாத்தா நட்ட மரம்னு நான் பெருமையா சொல்லுவேன். இப்ப சந்தோசம்தான?”
குழந்தைபோல முகத்தை வைத்துக் கொண்டு பேசினாள். அடுத்த கணம் அவன் கண்கள் உயிர்ப் பெற்றன.
“அஞ்சல,
நாளைக்கு பூ உரம், காய் உரம் எல்லாம் வாங்கிடலாம். என்கூட வரயா! அதப் போட்டா சீக்கிரம்
பூ பூக்குமாம். சீக்கிரம் பூ பூத்தா சீக்கிரம் காய் காய்க்கும் இல்லையா!” அவள் கைகளை
இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு உற்சாகமாய்ப் பேசியவன் முகத்தைப் பார்த்தாள்.
“சரி
வரேன்!” அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.
கருவோடு
கருகிப்போன மகளை அவள் நினைவுபடுத்த விரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக