புதன், 9 பிப்ரவரி, 2022

# குறுங்கதை 004 # ஜன்னல்

 

“கனகம்..!. அந்தப் பொம்பள பிள்ளைங்கள பாரேன். அதுங்களும் அதுங்க போட்டிருக்கிற உடுப்பும்,” சலித்துக் கொண்டாள் மாதவி.

“ஆமாக்கா, நானும் அதான் பாத்துகிட்டு இருக்கேன். கோயிலுக்குச்  சேல கட்டாம, இறுக்கமா தோப்ஸ் போட்டுகிட்டு வருதுங்க, இதுல லேகீங் வேற. சகிக்கல”! சப்பைக்கட்டுக் கட்டினாள் கனகம்.

“அப்பா அம்மா சரியில்ல. அதான் இப்படியெல்லாம் உடுத்திகிட்டு வருதுங்க!” மாதவியின் கோபம் வார்த்தைகளில் தெரிந்தது.

“படிச்ச பிள்ளைங்க மாதிரி இருக்குங்க. ஆனா, கோயிலுக்கு எப்படி வரனும்னு தெரியல, கலிகாலம்,” தன் பங்கிற்கு உசுப்பேற்றினாள் கனகம்.

மாதவிக்கு நிலைகொள்ளவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தீர்க்கமாய் முடிவெடுத்தாள். விசயத்தைக் கனகத்தின் காதில் ஓதினாள். கனகம் சம்மதத்தின் அடையாளமாய்த் தலையைப் பலமாய் ஆட்டிக் கொண்டாள்.

பூசை முடிந்து பூசாரி தீர்த்தத்தைக் கொடுக்க ஆரம்பித்ததுகூட தெரியாமல், அந்தப் பெண்களையே கழுகாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி.

“இதோ இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்குங்க... உங்களுக்கு இன்னைக்குச் சிறப்புப் பூச நிச்சயம், இந்தப் பூசையை உங்க வாழ்க்க முழுக்க மறக்க மாட்டீங்க! உள்ளுக்குள் வந்த ஏளனச் சிரிப்பு வெளிப்படாமல் பார்த்துக் கொண்டாள்.

அந்த இளம் பெண்கள் கோயிலின் மூலையில் இடம் தேடி வசதியாய் அமர்ந்து கொண்டனர். ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். மாதவிக்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்தது. அவள், பாயும் புலியாய் அவர்களை நோக்கிப் போனாள். அவர்களுக்கு மிக அருகில் மாதவி. தன் கையில் இருந்த அர்ச்சனைத் தட்டைக் கனகத்தின் கையில் திணித்தாள்.

அடுத்த கணம் மாதவி அக்காவின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் கனகம். உள்ளூர ஒரு பயம் வந்து போனது.

“மாதவி அக்கா... உங்க ஜாக்கெட் செம்மையா இருக்கு. இதப் பார்த்தா ஒரு பாட்டு நெனவுக்கு வருது. ஜன்னல் வச்ச ஜாக்கட் போடவா தென்றல் அடிக்க,” மெல்லிய குரலில் பாடிக்கொண்டே சென்றாள் பக்கத்து வீட்டுப் பரிமளம்.

தரையில் அமர்ந்திருந்த இளம்பெண்கள் பார்வையால் சிரித்துக் கொண்டதை நல்ல வேளை மாதவி பார்க்கவில்லை!

 

ஆக்கம்,

உமாதேவி வீராசாமி

பெந்தோங், பகாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...