வியாழன், 10 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 005 #எனக்கு நீ உனக்கு நான்

 

#குறுங்கதை 005

எனக்கு நீ உனக்கு நான்

தங்களை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் இருவரும்  கவனமாய் இருந்தனர். பூந்தோட்டத்தின் ஒரு மூலையில் பிறர் கண்களில் படாதவாறு அமர்ந்து கொண்டனர்.  தங்களின் உறவு பிறருக்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் இருவர் மனத்திலும் ஆழப் பதிந்திருந்தது.

“தங்கம், கவலப்படாத. நான் இருக்கேன். என்ன ஆனாலும் நீதான் என் மனைவி. அத யாராலும் மாத்த முடியாது!” தங்கத்தின் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டான் மருதப்பன்.

“வீட்டில தெரிஞ்சா என்ன  ஆகுமோன்னு பயமா இருக்கு!,” முகம் வாடி உடல் தளர்ந்து போனது தங்கத்திற்கு.

“அதப் பத்தி கவலப்படாத தங்கம். எந்த எதிர்ப்பு வந்தாலும் உன்ன விட்டுக்கொடுக்க மாட்டேன்! இது சத்தியம்!” மருதப்பனால்  குரல் நடுங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

மருதப்பனுக்குத் தங்கத்தைக் கடந்த ஆறு மாதங்களாகத்தான் தெரியும். பூர்வஜென்ம உறவோ என்னவோ, இருவருக்கும் இடையில் அப்படியொரு புரிதல். ஆழமான அன்பு. அளவிட முடியா அக்கறை. பார்த்த மாத்திரத்தில் எனக்கு நீ உனக்கு நான் என்ற உணர்வு  வேருன்ற ஆரம்பித்து விருட்சமாய் வளரத் தொடங்கியிருந்தது.

“தங்கம் இன்னைக்கே நம்ம குடும்பத்துகிட்ட இதப் பத்தி பேசுவோம். ஏத்துக்கிறதும் ஏத்துக்காமப் போறதும் அவங்க இஷ்டம். அதப் பத்தி நாம அலட்டிக்க வேண்டிய அவசியமில்லை!” உறுதியாய்ச் சொன்ன மருத்தப்பனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் தங்கம்.

“உங்க முடிவுதான் என் முடிவு,” தங்கத்தின் கண்கள் கண்ணீரோடு பேசின.

அலைபேசி அவர்களின் காதற்செய்தியை அவரவர் வீட்டிற்குக் கொண்டு சேர்த்தது.

ஒரு மணி நேரத்திற்குள் இருவரின் குடும்பத்தாரும் அலறி அடித்துக்கொண்டு அவர்களைத் தேடி வந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி. உள்ளே செல்ல நேரமில்லை. வாசலிலே வாக்குவாதம் தொடங்கி விட்டது.

“உங்களுக்கே இது அசிங்கமா இல்ல. காதல் பண்ற வயசா இது? சாகற வயசில காதல்!” மருதப்பனின் மூத்த மகன் அசிங்கப்படுத்தினான்.

“உங்கள அம்மான்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு!” தங்கத்தின் இளைய மகள் தாண்டிக் குதித்தாள்.

“நாங்க வேணும்னு நினைக்கிறவங்க இங்க இருங்க. வேணாம்னு நினைக்கிறவங்க தாராளமாகப் போங்க,” மருதப்பனின் அழுத்தமான பேச்சு யாரையும் மறுபேச்சுப் பேச இடந்தரவில்லை.

மருதப்பன், தங்கத்தின் வலது கரத்தை உறுதியாய்ப் பிடித்துக் கொண்டார். முதியோர் இல்லத்துக்குள் கம்பீரமாய் நுழைந்தார்.

 

ஆக்கம்:

உமாதேவி வீராசாமி,

பெந்தோங், பகாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...