வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

# குறுங்கதை 006 #குழந்தை

 

மணிமாறன் அவசர அவசரமாய்க் குழந்தைவேலு அறைக்குள் நுழைந்தான். கோப்புகளில் மூழ்கியிருந்த மணிமாறன் அவனைக் கவனிப்பதாக இல்லை.

“டேய் குழந்த... விட்டா கோப்புக்குள்ள போயிடுவடா நீ!”

தூக்கிவாறிப் போட்டது குழந்தைவேலுக்கு.

“என்னடா நீ... கதவ தட்டிட்டு வரக்கூடாதா. பயந்திட்டேன் போ!” நெஞ்சைப் பிடித்துக் கொண்டே அதட்டலாய்ச் சொன்னான் குழந்தைவேலு.

“அதுவா முக்கியம்? உன் சொந்தக்காரன் சொன்னான்னு புட்போல் கேம் இன்வெஸ்ட்மென்ல என்னையும் சேர்த்தியே. அதப்பத்தி ஏதாவது கேள்விப்பட்டயா?” மணிமாறன் குரலில் படபடப்பு தாண்டவமாடியது.

“ஏன்? அதுக்கென்ன இப்ப?” புருவங்கள் உயர்த்தி மணிமாறனைப் பார்த்தான் குழந்தைவேலு. அவன் முகத்தில் குழப்ப ரேகை பரவிக்கிடந்தது.

“இப்ப என்னவா! செய்தி தெரியாதா உனக்கு? ரொம்ப பேரோட பணம் பேங்க எக்கவுண்லேர்ந்து காணாப் போச்சாம். நம்ம நவீன்னு இப்பத்தான் போன்ல சொன்னான். அவன் பணமும் காணமாம். நான் ஆடிப் போயிட்டேன் போ?” அவன் உடலும் சேர்ந்தே ஆடியது. 

குழந்தைவேலுவின் முகத்தில் கலவரம் தெரிந்ததே தவிர, பதிலேதும் வரவில்லை.

“நல்ல வேள. நாம ஐந்நூறு  வெள்ளியோட நிப்பாட்டிக்கிட்டோம்!” பெருமூச்சு விட்டான் மணிமாறன்.

“ஆமா... ஆமா. நல்ல வேள!” சுருக்கமாய் முடித்துக் கொண்டான் குழந்தைவேலு.

“குழந்த, சரி வேல கெடக்கு, நம்ம மேனஜரு எப்ப குறை சொல்லலாம்னு காத்துகிட்டு இருப்பான். நான் முதல்ல என் ரூமுக்குப் போறேன்! அப்புறம் பேசலாம்!” பதிலுக்குக் காத்திராமல் நடையைக் கட்டினான் மணிமாறன்.

அடுத்த  நொடி குழந்தைவேலுவின் அலைபேசி அலறியது. எதிர் முனையில் அவன் மனைவி காயத்திரி.

“என்னங்க நேத்து நகைய அடகு வச்ச பணம் பத்தாயிரத்த, ஏதோ புட்போல் கேம்ல இன்வெஸ்ட் பண்ணனும்னு சொன்னீங்களே... பண்ணிட்டீங்களா? மறக்காம பண்ணிடுங்க, சரியா?

 

ஆக்கம்,

உமாதேவி வீராசாமி,

பெந்தோங், பகாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...