சனி, 12 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 007 # முதல் முத்தம்

 

ஏனோ தெரியவில்லை. தயாளனுக்கும் அவன் அப்பாவிற்கும் எந்த விசயத்திலும் ஒத்துப்போனது கிடையாது. காரணத்தைத் தேடியவனுக்குப் பதிலும் கிடைத்ததில்லை.தன்னைக் கண்டாலே எரிந்து விழுந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்காமல் ஒதுங்கிப் போக ஆரம்பித்தான் தயாளன்.ஆனால், அவனைத் தேடி வந்து அவர் வம்பிழுத்த தருணங்கள் பல. அது ஏன்? அவனுக்கு இன்றுமே அது புரியாத புதிராய்த்தான் இருந்து வருகிறது.

பொம்பள பிள்ள மாதிரி அம்மா வால பிட்டிச்சுகிட்டே சுத்து,

“டேய் தயா, காடிய கழுவச் சொன்னனே, செஞ்சியா? சோம்பேறி. அம்மா பிள்ள, பின்ன எப்படி இருக்கும்?”

“பசையாட்டம் உங்க அம்மா கூடவே ஒட்டிக்கோடா!”

கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தைகள் இவை. சின்ன தவறுகளையும் பெரிதாக்கித் தண்டனை கொடுத்த அப்பா, தயாளனனின் பரம எதிரியானார். முப்பது வயதிலும்கூட அவரை மன்னிக்க அவனுக்கு மனம் வரவில்லை.

நேற்று பிறந்த தன் குழந்தையின் முகத்தைப் பார்க்கிறான் தயாளன். பிஞ்சு கைகளைத் தன் கைகளில் ஏந்துகிறான். தன் அப்பாவைப் போல் நடந்துகொள்ள மாட்டேன் எனப் புரியாத மழலையிடம் சத்தியம் செய்கிறான். வாசல் அழைப்பு மணி அடிக்க, அவன் மனைவி கதவைத் திறக்கிறாள். வாசலுக்கு வெளியே அவன் அப்பா. உள்ளே வரச்சொல்லக்கூட மனமில்லாமல் அறைக்குள் நுழைந்துகொள்கிறான்.  சில நிமிடங்களில் கதவு தட்டப்படுகிறது. மீண்டும் அவர்.

“தயா, உள்ள வரலாமா?”

“ம்ம்ம்”

“எப்படி இருக்க?”

“ஏதோ இருக்கேன்!”

“தயா...!”

“ம்ம்ம்... சொல்லுங்க!"

“என்ன மன்னிச்சி...டுடா!” வார்த்தை உடைந்து பெரிய அழுகையோடு அவன் காலில் விழுகிறார்  அப்பா. இதை எதிர்ப்பார்க்காத தயாளன் ஓரடி பின்னால் செல்கிறான்.

சிரமப்பட்டு அவர் மேலே எழ முயற்சிக்கிறார். நொடியில் தடுமாறி கீழே விழ, அவரைத் தாங்கிப் பிடிக்கிறான் தயாளன். எழுந்தவர் அவனை அப்படியே அணைத்துக் கொள்கிறார்.

“என்னை மாதிரி அப்பாவா இருக்காதடா! உன்னால, உங்க அம்மாவோட காதல் குறைஞ்சிட்டதா நெனைச்சேன். உன்ன வெறுத்தேன். அது எவ்வளவு பெரிய சுயநலம்னு இந்தக் கிழவனுக்கு இப்பத்தான் உறைக்குது!”

“........................”

“தயா, என்னையும் உன் பிள்ளையா ஏத்துக்கடா!” குலுங்கிக் குலுங்கி அழுத அப்பாவை ஆரத்தழுவிக் கொண்டான். இதயம் கனத்தது. அப்பாவின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். அப்பா குழந்தையாய் மாறியிருந்தார்.

 

ஆக்கம்:

உமாதேவி வீராசாமி

பெந்தோங், பகாங்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...