#குறுங்கதை 008
பரிசு
“என்னங்க.. நானும் தெரியாமத்தான்
கேக்கிறன்... ‘வெலன்டைன்’ அன்னிக்கு ஒரு
ரோஜாப்பூக்கூடவா வாங்கிக் கொடுக்க முடியாது?” துர்கா
கேட்டுவிட அவளை எரித்து விடுவது போல் பார்த்தான் அவள் கணவன் கருணாகரன்.
“வெலண்டைன் எல்லாம் வெள்ளக்காரன்
கொண்டாடறது.
நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!” அவன் அலட்சியப் பேச்சு அவளைச் சீண்டிப்
பார்த்தது.
“வாங்கிக் கொடுக்க
மனசில்லன்னு சொல்லுங்க. அதுக்கு ஏன் வெள்ளைக்காரன வம்புக்கு இழுக்கிறீங்க...”
துர்காவின் வார்த்தைகளில் வெறுப்பு தெரிந்தது.
“இதோ பாரு துர்கா, உன்ன வருசமெல்லாம் நல்லாத்தான் பாத்துகிறேன். வேற என்ன வேணும் உனக்கு? எனக்குப் புரியல!” முகம் வாடியது கருணாகரனுக்கு.
“ஜானகி புருசன பாருங்க!
ஒவ்வொரு வருஷமும் வித விதமா பரிச வாங்கிக் கொடுத்து அசத்துறாரு. நீங்க என்னன்னா, ஒரு ரோஜாப்பூ வாங்கிக் கொடுக்கிறதுக்குக்கூட கஷ்டப்படுறீங்க!”
வார்த்தைகளில் பொறாமை எட்டிப் பார்ப்பதைத் துர்காவால் தடுக்க முடியவில்லை.
“இப்ப பரிசுதான் உன்
பிரச்சனன்னு சொல்லு?” கருணாகரன் சீறினான்.
“ஆமா... அப்படியே
வச்சுக்குங்க!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் துர்கா.
“துர்கா…! நாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர ஆழமா நேசிக்கிறோம்னு நமக்கே தெரியும்.
அப்புறம் ஏன் இந்தப் பரிசெல்லாம்?”
தன் எதிர்பார்ப்பைப்
புரிந்துகொள்ள முடியாத கணவனை நொந்துகொண்டாள் துர்கா. ஐந்து ஆண்டுகளாய் இதுதான்
நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் பரிசு வாங்கித் தரவில்லையென்றால் சண்டை
கொடுத்து விட வேண்டும். முடிவெடுத்தாள் துர்கா.
அந்நேரம் பார்த்து அலைபேசி அழைப்பு. யாரெனப் பார்த்தாள். ஜானகிதான். உற்சாகமாய் அழைப்பை
எடுத்தாள்.
“ஏய் ஜானகி! உன்னப் பத்திதான் நினச்சிகிட்டு இருக்கேன். இந்த
வருஷம் உன் வீட்டுக்காரு என்ன பரிசு வாங்கிக் கொடுத்தாரு?” முந்திக்கொண்டு கேட்டாள்.
“விவாகரத்து!” ஒற்றை
வார்த்தையில் பதில் சொன்னாள் ஜானகி. மறுமுனையில் அழுகைச் சத்தம்.
ஒரு கணம் ஆடித்தான்
போனாள் துர்கா. அவள் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் காதலாம். ஜானகியை விவாகரத்துச்
செய்ய முடிவெடுத்து விட்டானாம். இன்று அன்பர் தினத்திற்கு அவளுக்குக் கிடைத்த
பரிசு இந்தச் செய்திதானாம். துர்காவிற்குத் தலை சுற்றிப்போனது. உடைந்து போயிருந்த ஜானகிக்கு
ஆறுதல் கூறினாள். ஆசுவாசப்படுத்தினாள். மீண்டும் ஓர் அழைப்பு வர, விருப்பமில்லாமல் எடுத்தாள். கருணாகரன்தான் பேசினான்.
“ஹெப்பி வெலண்டைன்
துர்கா. இந்த வருஷமாவது உனக்குப் பரிசு
வாங்கிக் கொடுக்கலாம்னு நெனைக்கிறேன். சொல்லு... உனக்கு என்ன வேணும்?”
“ஒன்னும் வேணாங்க. நீங்க
மட்டும் வந்தா போதும்!”
ஆக்கம்:
உமாதேவி
வீராசாமி
பெந்தோங், பகாங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக