திங்கள், 14 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 009 #மாநாடு

 

மாநாட்டு இடைவேளை. மண்டபத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த கடைகளை வலம் வர முடிவெடுத்தேன். முதலில் புத்தகக் கடை. என் அறிவுப் பசிக்குத் தீனி போடக்கூடிய கடை. புத்தகங்களை ஒவ்வொன்றாய் கையில் எடுத்தேன். புரட்டிப் பார்த்தேன். சில நிமிடங்களில் பின்னால் யாரோ நெருக்கமாய் நிற்பதை உணர தலையைச் சற்றே திருப்பிப் பின்னால் பார்த்தேன். என் மாணவியின் அப்பாவான மூர்த்தி, வாயெல்லாம் பல்லாய்த் தெரிய  நின்றுகொண்டிருந்தார்.

“முத்து சார்... புத்தகம் வாங்க வந்தீங்களா?” உரிமையாய்க் கேட்டார். ஆமாம் என்பதன் அடையாளமாய்த் தலையை ஆட்டினேன்.

“நீங்களும் நல்லா கதை எழுதுறீங்க. உங்க கதைய நிறைய படிச்சிருக்கேன். ரொம்ப நல்லாயிருக்கு!” பாராட்டு மழையில் நனையச் செய்தார் மூர்த்தி. என் மனமெல்லாம் மல்லிகை மலர்ந்து மணம் வீசியது.

இந்த மூர்த்தி மட்டுமல்ல, எத்தனையோ பேர் வாயிலிருந்து இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து சில ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன்.

“ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து படிங்க. முடிஞ்சா கருத்து சொல்லுங்க,” பணிவாய்ச் சொல்லி புத்தக வேட்டைக்கு மீண்டும் தயாராக  எத்தனித்தேன். அவர் விடுவதாய் இல்லை.

“சார், உங்க கதையெல்லாத்தையும் புத்தகமா போடுங்க சார், நாங்க ரொம்ப சந்தோசப்படுவோம்.

நான் நினைத்ததை அப்படியே சொன்ன மூர்த்தியை எனக்குப் பிடித்துப் போனது. என் இதயத்தில் உற்சாக ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடியது.

“புத்தகம் போடுங்க சார். நாங்க இருக்கோம்”. அவர் சொன்ன  வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலிக்க, பரவசமாகிப் போனேன்.

இந்த வருடமாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு விட வேண்டும். முத்து போன்ற வாசகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தீர்மானித்துக் கொண்டேன்.

“நம்ம நாட்டுல எழுதறவங்க எண்ணிக்கையில எனக்குத் திருப்தியே இல்லீங்க சார். பழைய ஆளுங்களேதான் எழுதுறாங்க. உங்கள மாதிரி இளைஞர்கள் எல்லாம் எழுதத் தயங்குறாங்க சார்!” உச்சுக் கொட்டிக் கொண்டார் மூர்த்தி.

“நெறைய புத்தகங்கள எழுதினாதான் சார் நம்ம இலக்கியம் வளரும். சொன்னா எங்க கேக்கிறாங்க போங்க!” அலுத்துக் கொண்ட மூர்த்தியை ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது.

“சரிங்க சார், நீங்க வாங்கிட்டு இருங்க. அப்புறம் பார்ப்போம்” விடைபெறப் போன மூர்த்தியைத் தடுத்து நிறுத்தினேன்.

“கொஞ்ச நில்லுங்க. நீங்க புத்தகம் ஏதும் வாங்கலையா?”

“அப்புறம் பாக்கலாம் சார். என் வைவ்நல்ல ரகத்தில கம்மல் கிடைச்சா வாங்கிகிட்டு வரச் சொன்னாங்க. அதுக்கே காசு பத்துமான்னு தெரியல!” சலித்துக் கொண்டு நடை கட்டிய  மூர்த்தியை வெறுமையாய்ப் பார்த்தேன்.

 

ஆக்கம்:

உமாதேவி வீராசாமி,

பெந்தோங், பகாங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...