“எங்க இன்னைக்கும் தமிழ்க்கொடிய காணோம்?”
“தெரியலீங்க சார்,” வகுப்பே ஒன்று சேர்ந்து பதில் சொன்னது.
“சார், இந்த வாரம் கொடி ஸ்கூலுக்கே வரலீங்க சார்!” மாறன் முந்திக் கொண்டான்.
“ம்ம்ம், சரி... சரி நான் பாத்துக்கிறன். நீங்க
பக்கம் முப்பதைஞ்ச திறங்க,” மாணவர்களின் கவனத்தைப்
பாடத்தில் திருப்ப முயன்றேன்.
இரண்டு நாட்களாகத் தமிழ்
வகுப்பில் தமிழ்க்கொடியைப் பார்க்க
முடியவில்லை. சீனப்பள்ளி மாணவியாக இருந்தாலும் அவளுக்கு தமிழ் மீது அப்படியொரு
ஆர்வம். இரண்டாம் படிவத்தில்தான் அந்த பள்ளிக்கு அவள் மாற்றலாகி வந்தாள். இந்த
மூன்று மாதங்களில் வடிவாக எழுத்துகளை எழுதக் கற்றுக்கொண்டிருந்தாள். பிரமிப்பாய்
இருந்தது. தெரிந்துதான் பொருத்தமாய் அவளுக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறார்களோ
என்னமோ! அவள் பெற்றோரை மனதாரப் பாராட்டத் தோன்றியது.
“யாராவது தமிழ்க்கொடிய
பார்த்தா எனக்குப் போன் பண்ணச்சொல்லுங்க, சரியா!” வகுப்பை
முடித்துக் கொண்டு வெளியே வந்தேன்.
மனமெல்லாம்
தமிழ்க்கொடியின் நினைவு. அவள் தமிழார்வத்திற்கு நான் இரசிகன். எப்படியாவது இந்த ஆண்டிற்குள் தமிழ்க்கொடிக்குத்
தமிழை நன்முறையில் எழுத வாசிக்கக் கற்றுகொடுத்து விட வேண்டும். நான்கு பேருக்கு
இதைச் சொல்லி தமிழ்மீது ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும். மனத்தில் உறுதி
எடுத்துக்கொண்டேன்.
ஆசிரியர் அறைக்கு
வந்தவுடன் முதல் வேலையாய்த் தமிழ்க்கொடியின் தொடர்பு எண்ணை அவள்
வகுப்பாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். காலம் தாழ்த்த மனமில்லை. உடனே
அழைத்தேன். பதில் இல்லை. ஏமாற்றம் கௌவிக்கொள்ள மீண்டும்
மீண்டும் அழைத்தேன். யாரும் எடுக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையாய்ப் புலனத்தில்
சின்னதாய்த் தெளிவாய் ஒரு குரல் பதிவு அனுப்பினேன்.
அடுத்த நொடி புலனத்தில் பதில்
குரல் பதிவு.
“சார்..! என் பிள்ள சீனம்
படிக்கனும். அதனாலதான் சீன ஸ்கூலுக்கு அனுப்புனோம். ஆனா, இப்ப அது தமிழ்தான் படிப்பேன்னு அடம் பிடிக்குது. மூனு மாசமா என்ன
ஏமாத்திகிட்டு இருந்திருக்கு. நாளைக்கு ஸ்கூலுக்கு வரும். தமிழ் எடுக்க வேணாம்னு சொல்லிடுங்க
சார்!”
என்னை அறியாமலேயே என் விழியோரத்தில்
கண்ணீர்த்துளிகள்.
ஆக்கம்:
உமாதேவி
வீராசாமி
பெந்தோங், பகாங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக