பரந்தாமனுக்குப் பரம திருப்தி. எல்லா செடிகளுக்கும் உரமிட்டாகிவிட்டது. நீர் பாய்ச்சியாயிற்று. அதை விட முக்கியமான விசயம், செடிகளுக்கு வேலி அடித்தாயிற்று. நினைத்தாலே மலைப்பாக இருந்தது பரந்தாமனுக்கு. கத்தரி விதைகள் போட்ட நாள் முதல் அவற்றின் வளர்ச்சியை அணு அணுவாய் இரசித்த தருணங்களை மறக்க முடியுமா என்ன! விதை முளையிட்டு உலகை எட்டிப் பார்த்தபோது மனமெல்லாம் பூரிப்பு. ஒவ்வொரு இலையாய்த் துளிர்விடத் தொடங்கியபோது மனத்திலே பெருமிதம். மூன்று வாரங்களில் கன்றுகள் செழித்து வளரத் தொடங்கியதுபோது பேரானந்தம். அவற்றை எடுத்து மிக மிகக் கவனமாய் நிலத்தில் நட்டு வைத்தபோது ஏதோ சாதித்து விட்டதாய் ஓர் உணர்வு.
நட்டு வைத்த கன்றுகள் வளர வளர,
பரந்தாமனின் பிரமிப்பும் வளர்ந்து கொண்டே போனது என்னமோ உண்மைதான். ஆனால், இரண்டு
மூன்று நாட்களாய்த் திடீர் பயம் அவனைக் கௌவிக்கொள்ள உடனடி நடவடிக்கையில் இறங்கி
விட்டான். வளர்ந்து வரும் கன்றுகளை அப்படியே விட்டுவிட்டால் பாதுகாப்பு இருக்குமோ இருக்காதோ
என்ற அச்சம். ஆடுகள் வந்து மேய்ந்து விட்டால்! வருவோர் போவோர் யாராவது கன்றுகளைத்
தங்கள் சொந்தமாக்கிக் கொண்டால்! நினைப்பே பயத்தை உண்டு பண்ண, வேலி
அடித்தே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான். இதோ
இன்று தன் கத்தரிக்கன்றுகளுக்குப் பலமான பாதுகாப்புத் தயார். இனி பயப்படுவதற்கு
ஒன்றுமில்லை.
மீண்டும் ஒருமுறை தன் கத்தரித் தோட்டத்தை நோட்டமிட்டான்.
எல்லாம் பிரமாதமாய் அமைந்திருந்தது. குறை சொல்ல ஒன்றுமில்லை. “சபாஷ் பரந்தாமா!”
தன் தோளைத் தானே தட்டிக்கொடுத்துக் கொண்டான்.
களைப்பாக இருந்தாலும் மனத்திருப்தியோடு வீட்டிற்குள்
நுழைகிறான். மனைவியைத் தேடுகிறான்.
காணவில்லை. சற்று நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பதை அவள் குரல்
காட்டிக் கொடுத்துவிட தன் மகளைத் தேடுகிறான். அவளும் கண்ணில் படாமல் போக, அவள்
அறைக்கதவைத் தட்டுகிறான். பதில் இல்லை. படிக்கும்
பிள்ளை கண்ணயர்ந்து தூங்கியிருப்பாள் என்ற முடிவுக்கு வருகிறான். தன் மகளுக்காகப் பரிதாபப்படுகிறான்.
அறைக்குள் தன் முகநூல் நண்பனுடன் அவள் இரகசியமாய்க் கொஞ்சிக்
குலாவிக்கொண்டிருப்பது அவனுக்குக்கெங்கே தெரியப்போகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக