கனகத்தின் மனம்
கனத்துப் போனது. துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. அழுது அழுது ஓய்து போனாள்
கனகம். முகமெல்லாம் வீங்கி வீட்டின்
மூலையில் தஞ்சம் புகுந்தவளைத் தேற்றுவார்
இல்லை. அன்பு மகளைக் காணவில்லை. அதை நம்புவதற்கே அவளுக்கு இரண்டு நாட்கள்
தேவைப்பட்டன.
அவள் கணவன் மணிமாறன்
அவளைவிட மனத்தளவில் அதிகம் பாதிப்படைந்திருந்தான். அவன் பார்வையில் ஒளி இல்லை.
பேச்சில் தெம்பில்லை. உடைந்து போயிருந்தான்.
ஒரே ஒரு மகள். அதுவும் அவன் செல்ல
மகள். பொத்திப் பொத்தி வளர்த்த மகள். அவள்
உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று யோசிக்கும் போதே உடலெல்லாம் நடுங்கியது.
யாராவது கடத்திச் சென்றிருக்கக் கூடுமோ என எண்ணியபோது மனமெல்லாம் பதறியது.
வரவேற்பறைக்கு வரும்போதெல்லாம் சுவரில் தொங்கிய மகளின் படத்தைப் பார்த்துத்
தேம்பித் தேம்பி அழுதான்.
ஆசை மகள் காணாமல்
போய் இன்றோடு நான்கு நாட்களாகி விட்டன. என்ன ஆனதோ ஏதானதோ?
புரியாமல் மனம் குழம்பிப் போயிருந்தார்கள். பெண் பிள்ளை ஆயிற்றே! மகளோடு
நெருக்கமாய் இருந்த நண்பர்களையெல்லாம் துருவில் குருவிக் கேட்டு விட்டார்கள்.
எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காவல் துறையிடம் புகாரும் கொடுத்து விட்டார்கள்.
இன்று வரை நல்ல செய்தி வரவில்லை?
வேண்டாத
தெய்வமில்லை. அழுது புலம்பாத நாளில்லை. அதன் பலனோ என்னவோ புதிய அலைபேசி எண்ணிலிருந்து
காணொளி ஒன்று அவர்களைத் தேடி வந்தது. தலை மேல் வைத்துக் கொண்டாடிய மகள் அகிலாதான்
காணொலியில் பேசியிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் ஓவென அழுதுவிட்டாள் கனகம். அவள்
கணவன் செயலற்று சிலையாய் நின்று கொண்டிருந்தான்.
“நான்தான் அகிலா
பேசறன். நான் காணாம போகல. நான் பாதுகாப்பாத்தான் இருக்கேன். என்ன யாரும் தேட
வேணாம். என்ன(னை) புரிஞ்சிக்காதவங்ககூட என்னால இருக்க முடியல. அதனாலதான் வீட்டை
விட்டு வெளிய போயிட்டேன். சோறு போட்டா மட்டும் பத்தாது. பிள்ளைங்க மனசில என்ன
இருக்குன்னு தெரிஞ்சிக்கனும். இனி என்ன ஆனாலும் வீட்டுக்கு வர மாட்டேன்! ப்லீஸ்
என்ன(னை) தேடாதீங்க!” பசுவென இருந்த மகள்
பாயும் புலியாய் மாறி, இதயத்தைக் கீறிக் கிழித்தெடுப்பவதை எந்தத் தாய்தந்தையால்
தாங்கிக் கொள்ள முடியும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்ட மகளை நினைக்க நினைக்க
இருவர் மனமும் வலித்தது. ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்ட அவர்களுக்கு அந்த இறைவன்தான்
பதில் சொல்ல வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக