வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 013 #அப்பொழுதே கேட்டிருந்தால்?

 

#குறுங்கதை 013

 

அப்பொழுதே கேட்டிருந்தால்?

 

வயது நாற்பத்தைந்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாள் பேசா மடந்தையாய் இருப்பது? எல்லோருக்கும் அடிமையாய் வாழ்வது? திருமணமாகி இந்த இருபது ஆண்டுகளில் மாமியார் வீட்டில் யாரையும் எதிர்த்துப் பேசியது கிடையாது. உடன் பிறந்தவர்களிடத்தில் குரல் உயர்த்தியது கிடையாது. உறவுகளைக் கடிந்து கொண்டது கிடையாது. இதற்குக் கட்டாயம் பயம் காரணமல்ல.

      பெற்றோரின் வளர்ப்பு அப்படி. விபரம் தெரிந்த நாள் முதலே சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். கடிந்து பேசுவதோ எதிர்த்து வாதிடுவதோ குடும்பத்தில் இல்லாத பழக்கமாயிருந்தது.  தவறிப் பேசிவிட்டால் தண்டனை உண்டு. இருநூறு முறை செய்த தவற்றிற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். பெற்றோரிடம் அல்ல. பூசையறையில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் பிள்ளையாரிடம். அதுவும் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டே. நினைத்தாலே இப்பொழுதும் கால்கள் நோகின்றன.

      ஆனால், வெளியுலக வாழ்க்கையில் இப்படிப் பேசா மடந்தையாய் இருப்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. நம் பொறுமையைக் கையாலாகாத்தனம் என ஒரு கூட்டத்தார் முடிவு கட்டும்போது மனம் வலிக்கிறது.

.    பக்கத்து வீட்டுப் பார்வதி வீணுக்கு வம்பிழுத்தபோது ரொம்பவே பொறுமையாய் இருந்து விட்டேன்.  அப்பொழுதே கேட்டிருந்தால் அடுத்த முறை என்னைச் சீண்டிப் பார்க்க அவளுக்குத் தைரியம் இருந்திருக்காது.

“மருமகளா வந்தப்ப என்ன கொண்டு வந்த? ஓட்டாண்டி குடும்பத்திலேர்ந்து பொண்ண எடுத்தது எங்க தப்புதான்!” என்று மாமியார் குத்திக்காட்டியபோது வாயைத் திறந்து கேட்டிருந்தால், இன்று அந்த வீட்டிலே அடிமையாய் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்காது.

உறவுகள் என்னைத் தாழ்த்திப் பேசியபோது தட்டிக் கேட்டிருந்தால் இன்று என்னைத்  துச்சமாக நினைத்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு சூழலிலும்  பதிலடி தந்து வம்புக்கு வந்தவர்களின் மூக்குடையச் செய்திருந்தால் நிம்மதியாவது மிஞ்சியிருக்கும்.

அப்படிச் செய்யாமல் போனது ஏன் என என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டேன். என் துன்பம் கண்டு  மனசாட்சி பேசியது “அப்பொழுதே கேட்டிருந்தால் உனக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது.”




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...