சனி, 19 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 014 #மைதிலி

 

நீண்ட யோசனைக்குப் பின் மைதிலி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். வேலை முடிந்தவுடன் நேரே முடி திருத்தும் நிலையத்திற்குச் சென்றாள். தன் அழகின் அடையாளமாய் இருந்த நீண்ட கூந்தலைத்  தோள்பட்டை அளவு வெட்டச் சொன்னாள். மனம் வலித்தது என்னமோ உண்மைதான். வேறு வழியில்லை. ஆனால், அந்தக் கட்டை முடியிலும் அவள் அழகாய்த்தான் இருந்தாள். இன்னும்கூட கட்டையாக  வெட்டலாம். ஆனால், தன் குடும்பத்தார் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே! குறிப்பாகப் பழைமையின் திருவுருவாய் இருக்கும் தன் கணவன் அவள் புதிய தோற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டுமே! 

காலையில் எழுந்து  காலைச் சிற்றுண்டியைத் தயார் செய்ய வேண்டும். நீண்ட கூந்தலைச் சீவி சடை பின்னி, கொண்டை போட்டு வேலைக்குக் கிளம்ப வேண்டும்.   பல வேளைகளில் அதுவே பெரும் போராட்டமாக இருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள். கிளம்பிய வேகத்தோடு  இலகு இரயில் நிலையத்திற்கு மூச்சிறைக்க நடந்து போக வேண்டும். அந்த இலகு ரயிலை விட்டு விட்டால் வேலைக்குத் தாமதமாகச் சென்று அசடு வழிய தலைமைத் தாதி முன் நிற்க வேண்டும்.  பாட்டு வாங்க  வேண்டும். அதையெல்லாம் நினைக்கும்பொழுது முடியை வெட்டுவதில் தவறேதும் இல்லையென உறுதியாய் நம்பினாள் மைதிலி.

இதோ முடியை வெட்டியாயிற்று. அவளது பெரும் பிரச்சனை ஒரு வழியாய்த் தீர்ந்தது. ஆனால், அடுத்த  ஒரு மணி நேரத்தில் வீட்டில் நடக்கப்போகும் கலவரம் பற்றிய சிந்தனை மனத்தில்  அழுத்தமாய் ஒட்டிக்கொண்டது. அதே சிந்தனையோடு இலகு இரயிலில் ஏறிக் கொண்டாள்.  வீட்டை அடைந்தவள் வரவேற்பறையைத் தாண்டிச் செல்லவே அதிகம் யோசித்தாள். குடும்பமே அங்குதான் கூடி இருந்தது.  அவளை முதலில் பார்த்து அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றது அவள் கணவன் நந்தகுமார்தான்.

“மைதிலி...!  என்ன பண்ணி வச்சிருக்க? என்ன தைரியம் உனக்கு! ஒரு வார்த்தகூட கேட்காம முடிய வெட்டிகிட்டு வந்திருக்கிற? என் கண்ணு முன்னுக்கு நிக்காத மைதிலி. தயவு செஞ்சு போயிடு!” கத்தி ஆர்ப்பாட்டம் செய்த கணவனுக்கு அவள் விளக்கம் தர விரும்பவில்லை.

    அடுத்து,  அவள் நாத்தனார் அவளை நக்கலாய் ஒரு பார்வை பார்த்து விட்டுத்  தன் அம்மாவிடம் கண்களால் ஏதோ சாடை காட்டினாள். தாயும் பிள்ளையும் களுக்கெனச் சிரிக்க, அவர்களை அலட்சியமாய்ப் பார்த்தாள் மைதிலி.

அடுத்த நொடி கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டாள். அருகிலுள்ள முடி திருத்தும் கடைக்கு நடையைக் கட்டினாள். தன் விருப்பம்போல் இன்னும் கொஞ்சம் கட்டையாய் முடியை வெட்டிக்கொள்ள.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...