ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 015 #தேநீர் விருந்து

 



“அனைவருக்கும் வணக்கம். நல்ல ஒரு காரியத்துக்காக எல்லாரும் இன்னைக்கு ஒன்றாய்க் கூடியிருக்கிறோம். ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு. இந்த நேரத்தில இந்தக் கோயில் செயலவை உறுப்பினர் திரு. பரந்தாமன் ஐயா அவர்களின் நல்ல உள்ளத்த பத்தி உங்ககிட்ட சொல்லியே ஆகணும். ஏழை மாணவர்களுக்கு உதவணும்னு எங்க சங்கம் முடிவெடுத்தப்போ, எந்த இடத்தில இந்த நிகழ்ச்சிய செய்யலாம்னு தெரியாம தவிச்சோம். இன்னொரு நண்பர் மூலமா ஐயாவோட போன் நம்பர் கிடைச்சது. உடனே அழைச்சுப் பேசினேன். எங்களுக்கு இந்த நிகழ்ச்சிய நடத்த நல்ல இடத்த பார்த்துக் கொடுக்கும்படி சொன்னேன். ஐயா பரந்தாமன் மறுப்பு ஏதும் சொல்லாம கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரே நாளில எங்க பிரச்சனையத் தீர்த்து வச்சாரு. இவர மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கிறதானாலதான் இன்னும் மழை பெய்யுது.

அதைவிட முக்கியமான ஒன்ன சொல்லியே ஆகணும். ஏறக்குறைய இருநூறு பேரு வருவாங்க,  தேநீர் விருந்து ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டேன். பரந்தாமன் ஐயா கொஞ்சம்கூட யோசிக்காம, தானே அத ஏற்பாடு செய்யறதா சொன்னாரு. அதற்கான பணத்த கொடுத்திடறோம்னு சொன்னப்ப ஐயா ரொம்ப கோபபட்டுப் பேசினாரு. ஏழை மாணவர்களுக்கு ஆயிரமாயிரமா செலவு செய்றீங்க. என் பங்கா இந்தத் தேநீர் விருந்த நான் ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாரு. இந்தக் காலத்தில இப்படி ஒரு மனுசனா? என்னால நம்பவே முடியல. பொதுநலம் உள்ள மனிதர்கள பார்ப்பதற்கே கஷ்டமா இருக்கிற இந்தக் காலத்தில, இப்படி ஒரு மனிதரான்னு வியந்து போனது உண்ம. உங்க நல்ல உள்ளத்துக்கு நீங்க நூறாண்டு காலம் நல்லா  இருப்பீங்க ஐயா.

இந்த நேரத்தில ஐயாவோட உதவிக்கு நன்றிக்கடனா அவருக்குச் சிறப்பு செய்ய விரும்புகிறோம். எங்கள் சங்கத் தலைவர் திரு. மணிமாறனை, ஐயா பரந்தாமனுக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவப்படுத்த  அழைக்கிறேன். தொடர்ந்து ஐயா அவர்கள எங்கள் சங்கத்தின் சார்பா, இந்த நினைவுச் சின்னத்தையும் பெற்றுக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி!

பரந்தாமன் தன் இடத்தை விட்டு எழுந்தார். கூட்டத்தைப் பார்த்துக் கும்பிடு போட்டார். மேடையில் பவ்வியமாய் ஏறிக் கொண்டார். சங்கத் தலைவர் நன்றிப் பெருக்குடன் பொன்னாடை போர்த்தினார். அழகிய சாமந்தி மாலையை அணிவித்தார்.

மேடையில் இருந்த பரந்தாமனின் கண்கள் யாரையோ தேடின. தேடியவர், கண்களில் படவில்லை. முகத்தில் வருத்தம் தெரிந்தது. அவரோடு சங்கத் தலைவரும் செயலவை உறுப்பினர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாராட்டிக் கரவொலி எழுப்பினர். மேடையிலிருந்து இறங்கினார் பரந்தாமன். தன் கைப்பேசியை எடுத்தார்.

“பெரியசாமி..! எங்க ஆளக் காணோம்? இன்னைக்கு நடந்த நிகழ்ச்சிக்குத் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யச் சொன்னாங்கன்னு சொன்னேன் இல்லையா! அதற்கான செலவை நம்ம கோயில் கணக்கில மறக்காம போட்டிருங்கய்யா! சரி, சரி... ரொம்ப சத்தமா இருக்கு. பிறகு போன் பன்றேன்.” அழைப்பைத் துண்டித்தார்  நிம்மதி பெருமூச்சோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...