திங்கள், 21 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 016 # இறப்பின் மடியில்....

 


நேற்றிலிருந்தே  பிள்ளைகளின்  ஆர்ப்பாட்டம் தாங்கவில்லை. என் பிறந்தாளுக்காகப்  பிள்ளைகள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். அது எனக்குத் தெரியாது என்ற தோரணையில்  செயல்பட்டுக் கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. நானும் தெரியாதது போலவே செயல்படத் தொடங்கி விட்டேன்.

ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. சித்தப்பா  பையனின் இறப்புச் செய்தி பிள்ளைகளின் திட்டத்திற்குத் தடையாய் அமைந்தது. அவன் ஒண்டிக் கட்டை. கட்டாயம் போய் ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். பிள்ளைகளுக்கு அதில் விருப்பம் இல்லை.

“டேய் விடுங்கடா. இறப்புக்குப் போயிட்டு வந்திட்டுக்கூட கேக் வெட்டிக்கலாம். இதுக்கு  ஏன்டா  இவ்ளோ அப்செட் ஆவறீங்க? உறவுங்க முக்கியம் இல்லையா?” சமாதானப்படுத்த முயற்சித்த என்னைக்   கலங்கிய கண்களோடு பார்த்தனர். அவர்களின் வருத்தம் புரிந்தது. 

பாலன் சித்தப்பாவின் வீட்டில் வைத்து எடுப்பதாய்த் தகவல் சொல்லப்பட்டது. மதியம் மணி பன்னிரண்டு மணிக்கெல்லாம் என் மனைவியோடு இறப்பு வீட்டை அடைந்து விட்டேன்.  பெட்டியைச் சுற்றி ஐந்து பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், மனத்தில் ஏதோ நெருடல்.

“அண்ணே உங்கள உள்ள கூப்பிடறாங்க. சீக்கிரம் வாங்கண்ணே!” கையைப்  பிடித்து இழுக்காத  குறையாய்ய் பாலன் சித்தப்பாவின் பையன் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்றான். சமையல் அறையில் ஆரேழு பேர் கொண்ட கூட்டம் கூடியிருந்தது. பாலன் சித்தப்பாவும் இருந்தார். ஒரே சலசலப்பு.

“வாங்க அண்ணே! நாங்க குமாரோட பிரண்ஸ். இங்க பெரிய பிரச்சன ஓடிக்கிட்டு இருக்கு. நீங்கதான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு சொல்லனும்,” கூட்டத்தில் ஒருவன் வாயைத் திறந்தான்.

“குமாரு செத்திட்டான்னு எங்க கூட்டாளி மூலமா செய்தி வந்திச்சிண்ணே. அவன எங்க வச்சி எடுக்கிறதுன்னு உங்க சொந்தக்காரங்ககிட்ட கேட்டோம். யாரும் பதில் சொல்லல. அனாதப் பொணமாவா அனுப்புறது? அப்புறம் சொந்தன்னு சொல்லிக்கிறதுல என்னண்ணே அர்த்தம் இருக்கு?” மற்றொருவன் தொடர்ந்தான்.

“அப்புறம்தான் உங்க சித்தப்பாவோட பேசி பொணத்த இங்க கொண்டு வந்தோம். நாங்க கூட்டாளிங்க எல்லாம் இருந்த பணத்தில பெட்டி வாங்கிட்டோம். ஆனா, இன்னும் அமரர் வண்டிக்கு காசு கட்டல. அதனால இன்னும் வண்டி வரல. மணியாயிகிட்டு இருக்கு! நீங்கதான் முடிவு சொல்லனும்?”

இறந்து போன அப்பாவின் பிரதிநிதியாக நிற்பதாய் உணர்ந்தேன். அரை மணி நேரத்தில் பணத்தை ஏற்பாடு செய்தேன். மின்சுடலையில் குமாரின் உடல் தீயிக்கு இரையாகிக் கொண்டிருந்ததை மௌனமாய்ப் பார்த்தேன். மனம் அதிகமாய்க் கனத்தது.

“ரொம்ப நன்றிங்கண்ணே. பிறந்ததும் ஊர கூட்டிக் கொண்டாடறோம். ஆனா, இறந்த பிறகு...? அதுவும் ஒன்னுமில்லாம இறந்தா...? நெனைச்சாலே கஷ்டமா இருக்குண்ணே! கண்களைத் துடைத்துக்கொண்டே விடை பெற்றான் அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன்.  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...