“அப்பா…! உங்களுக்கு என்னதான் பிரச்சன? ஏன் சும்மா சும்மா போன் பண்ணி வேலை நேரத்தில தொந்தரவு பண்றீங்க” அலுத்துக் கொண்டான் மணிமாறன்.
“ஐயோ! மன்னிச்சிக்க ஐயா. நேத்துலேர்ந்து உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு! அதான் போன் பண்ணேன்!” அப்பாவின் குரலில் வருத்தம் இழையோடியது.
“உடம்பு வலின்னா மருந்து
சாப்பிடுங்கப்பா! என்கிட்ட சொன்னா நான் என்ன செய்ய முடியும்? போன முறை வந்தப்ப அவ்வளோ மருந்து
வாங்கிக் கொடுத்தனே, என்ன பண்ணீங்க?” வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
கேட்டான் மணிமாறன்.
அம்மாவின்
இறப்பிற்குப் பிறகு அப்பாவின் தொல்லையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவன் தவித்துப்
போனான். உடன்பிறந்தோர் யாராவது இருந்தாலாவது
அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். அதற்கும் வழியில்லாமல் போனதை எண்ணி அவன் வருந்தாத நாளில்லை. தன் வீட்டில் வந்து தங்கச் சொன்னபோதெல்லாம் முடியாது எனக் குழந்தை போல் அடம்
பிடித்த அப்பாவை நினைக்கும்போது இப்போதும்கூட அவனுக்குக் கோபம் கோபமாய் வருகிறது.
ஒரு
நாளில் நான்கைந்து முறையாவது அலைபேசியில் அழைத்துப்
பேசிவிட வேண்டும். ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு காரணம். வேலை நேரத்தில் அழைக்க வேண்டாமென எத்தனையோ முறை சொல்லி
விட்டான். ஆனால், அப்பா கேட்பதாய் இல்லை. அவன் கடிந்துகொள்ளும்போது புதிதாய்ச்
சொல்வதுபோல் வருத்தப்படுவார். மீண்டும் அதையே செய்வார்.
சில
வேளைகளில் காரணமே இல்லாமல் அழைப்பதும், அழைத்த பின் எதற்கு அழைத்தோமெனத் தெரியாமல் திணறுவதும் அப்பாவிற்கு
வழக்கமாகிப் போனது. இன்னும் சில வேளைகளில் ஒன்றும் பேசாமல் அழுது தீர்த்துவிட்டு
அலைபேசியை வைத்து விடுவதும் உண்டு. இதோ இன்றும் அப்படித்தான். இது நான்காவது முறை. இதற்கு மேல் அழைத்தால் எடுக்கக் கூடாதெனத் தீர்மானித்துக் கொண்டான்.
நினைத்தது
போலவே ஐந்தாவது முறையாக அழைப்பு வந்தது. சொல்வது ஒன்று செய்வது ஒன்றென இருப்பவன்
அல்ல மணிமாறன். சொன்னது போலவே அழைப்பை எடுக்காமல் வேடிக்கை
பார்த்தான். அழைப்பை எடுக்கா விட்டால், எப்பொழுதும் இரண்டு மூன்று
முறையாவது முயற்சி செய்யும் அப்பா, இந்தத் தடவை ஒரு முறையோடு நிறுத்திக்
கொண்டது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக