வாழ்க்கையில் துன்பம் வருவது இயல்புதான். ஆனால், துன்பமே வாழ்க்கையாகும்போது யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும். அடிக்கு மேல் அடி விழும்போது மனம் ரணமாகிப் போகாதா?
அந்நேரத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறென்ன சிந்திக்கத் தோன்றும்! பார்த்திபனும் அப்படித்தான்.
நல்ல படிப்பில்லை. பணம் இல்லை. இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள நல்ல குடும்பமும் இல்லை. வாழ்க்கை
முழுக்க தோல்விகளைச் சந்தித்து
அலுத்துப் போனதுதான் மிச்சம். உருகி உருகிக் காதலித்த பெண்ணும் அவன் இயலாமையைப் பார்த்துக் அவனைக் கைவிட்டபோது முழுவதுமாய் உடைந்து போனான். இன்று அவளுக்குத் திருமணம். கட்டாயம் போயாக வேண்டுமென முடிவு செய்தான். அவளை மணக்கோலத்தில் பார்த்துவிட்டு வாழ்வை முடித்துக்கொள்வதுதான் அவன் திட்டம். சினிமா போன்று தன் வாழ்க்கையும் அமையும் என அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
காதலிக்கும்போது அவள் ஆசையாய் வாங்கிக் கொடுத்த நீல நிறச் சட்டையை அணிந்து கொண்டான். தலைமுடியை அழகாய் வாரிக்கொண்டான். அவள் வாங்கிக் கொடுத்த ‘செண்டை’ அடித்துக் கொண்டான். அறையே மணக்கத் தொடங்கியது. அறையெல்லாம்
அவள் நினைவு பரவத் தொடங்கியது. மூச்சை நன்கு இழுத்து விட்டான். அவன் மனமும் அவள்
நினைவால் நிரம்பியது. கண்ணாடியில் தன்னைப் பார்த்தான்.
“எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?” சுய இரக்கம் தோன்றி கண்களில் கண்ணீர் பெருகியது.
அரை மணி நேரத்தில் திருமண மண்டபத்தை அடைந்தான். பெரிய வீட்டுச் சம்பந்தாக இருக்க வேண்டும். உயர் ரக வண்டிகள் மண்டத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தன்னை வேண்டாமென அவள் முடிவெடுத்தது ஒரு வகையில் சரியெனப் பட்டது. மோட்டாரை ஓரமாய் நிறுத்தினான். சட்டையைச் சரி செய்து கொண்டான். மீண்டும் தலைமுடியை வாரிக் கொண்டான். தயக்கத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்தான்.
மணவறை பக்கம் அவன் பார்வை சென்றது. காதலியின் பக்கத்தில் யாரோ ஒருவன் உரிமையாய் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடியவில்லை. மனம் கனத்தது. விழியோரங்களில் கண்ணீர். யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.
“என்ன இருந்தாலும் நீ என்ன(னை) இப்படி ஏமாத்தியிருக்க வேணாம். தவிக்க விட்டிருக்க வேணாம். ஒரு விசயம் மட்டும் தெரிஞ்சிக்கோ. நான் செத்த செய்தி கேட்டதும் நீ துடிதுடிப்ப பாரு! அதுதான் நான் உனக்குக் கொடுக்கப்போற தண்டன!” பார்வையாலேயே சொன்னான்.
கெட்டி மேளம் முழங்குகிறது. காதலியின் கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் முகத்தை வேறு பக்கமாய்த் திருப்பிக்கொள்கிறான். ஆனால், பாழாய்ப் போன மனம் கேட்கவில்லை. அ`டுத்த நொடி வாஞ்சையோடு அவளைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் பார்வை அவன்மேல் ஆழமாய்ப் பதிந்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக