இந்த மருத்துவமனையில் மட்டும் ஏன்தான் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து வழியுமோ தெரியாது. ஒவ்வொரு முறையும் உட்கார இடம் கிடைக்காமல் அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும். ஏதோ இன்று அதிஷ்டவசமாய் இடம் கிடைத்துவிட சந்தோசமாய் உட்கார்ந்து கொண்டான்.
“ம்மா... ரொட்டி தா… ரொட்டி... ரொட்டி வேணும்...!”
“அழாதடா... பேசாம
ஒக்காரு!”
“ரொட்டி வேணும்...!
தாம்மா... ரொட்டி தாம்மா”
பின் இருக்கையிலிருந்து வந்த சிறுவனின் அழுகை எரிச்சலை மூட்டியது. வெறுப்புடன் திரும்பிப் பார்த்தான். நடுத்தர வயது பெண்ணொருவள் சிறுவனைச் சமாதானப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தாள். மெலிந்த
உடல், கருத்த மேனி. கசங்கிய உடை.
பையிலிருந்த பால் போத்தலை எடுத்துச் சிறுவனிடம் நீட்டினாள். அதில் பாலுக்குப் பதிலாகக் கருப்பாய் ஏதோ ஒன்றை நிரப்பி வைத்திருந்தாள். வறக்காப்பியாக இருக்க வேண்டும். சிறுவன் போத்தலை வாங்க மறுத்தான். முரண்டு பிடித்த சிறுவனை இறுக
அணைத்து அவன் வாயில் போத்தலைத் திணித்தாள். சிறுவன் கோபமாய்த்
தட்டி விட,
போத்தல் தூரப் போய் விழுந்தது. பால் தரையில்
சிந்த சுற்றி இருந்த கூட்டம் முகத்தைச் சுழித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தது.
“நம்ம இனமே இப்படித்தான். எந்த எடத்தில எப்படி நடந்துக்கனும்னு தெரியாது!'” வாய்க்குள்ளே முணுமுணுத்தான்.
“ஏம்மா... அவன் கேக்கிற ரொட்டிய வாங்கித்தான் கொடுத்திடேன். சத்தமா இருக்குல” சலிப்புடன் சொன்னான். அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தாள்.
“காசு இருக்கா இல்லையா? இல்ல... நான் தரட்டுமா?” அவன் வார்த்தையில் இரக்கத்தை விட இறுமாப்புத் தெரிந்தது.
“அதெல்லாம் வேணாங்கண்ணே!” சுருக்கமாய்ப் பதில் சொன்னாள்.
“திமிர்
கொஞ்சம் அதிகம்தான்!” மீண்டும் முணுமுணுத்தான்.
சிறுவன் கீழே விழுந்து கைகால்களை
உதைத்து அழ ஆரம்பித்தான்.
“ஏம்மா...! ஒரு ரொட்டிகூட வாங்கித் தர முடியாதா?” அவள் முகத்திற்கு நேராகவே கேட்டு விட்டான்.
“வர வழியில் வயசானவரு ஒருத்தரு பசிக்குதுன்னு சொன்னாருங்கண்ணே. இருந்த மூனு வெள்ளியில ஒரு வெள்ளிக்கு ‘பன்னு’ வாங்கிக் கொடுத்திட்டேன். மிச்சம் ரெண்டு வெள்ளிதான் இருக்கு. பஸ் டிக்கட்டு வாங்கனும். அதோட பசியெல்லாம் எங்களுக்குப் புதுசு இல்லங்கண்ணே. இப்பவே பசிய தாங்க கத்துக்கிட்டாதான் இந்த உலகத்தில வாழ முடியும்!” இயல்பாய்ச் சொன்னவள் பதிலுக்காகக் காத்திராமல் சிறுவனைத் தூக்கிக் கொண்டு ஓரமாய் ஓர் இடத்தைத் தேடி உட்கார்ந்து கொண்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக