சில மணி
நேரங்களாக என்னைப் பற்றிய பேச்சில் ஆழ்ந்திருந்தவர்களைப் பார்க்க வேடிக்கையாய்
இருந்தது. என் வாழ்க்கையை யார் யாரோ முடிவு செய்வது எந்த வகையில் நியாயம் எனத்
தெரியவில்லை. உரிமைகள் பறிக்கப்படும் இடத்தில் இருப்பதில் அர்த்தமில்லை எனத்
தோன்றியது.
வெற்று மனத்துடன் அறைக்குள் புகுந்து என்னை நானே சிறைப்படுத்திக் கொண்டேன்.
எப்பொழுது
என் குடும்பத்திற்குப் பாராமாகத் தோன்றத் தொடங்கினேன் என யோசித்துப் பார்க்கிறேன்.
பதில் தெரியவில்லை. வறுமை எனும் கொள்ளிவாய்ப் பேயின் பசிக்கு என் குடும்பம் இரையாகிக் கொண்டிருப்பதற்கு
நான் எந்த வகையில் காரணமாவேன்? புரியவில்லை.
“செல்லக்குட்டி, நம்ம குடும்ப நிலம பத்தி உனக்கே நல்லாவே தெரியும். உங்கப்பாவோட சம்பளத்தில்
குடும்பத்த ஓட்ட முடியல! உங்க நாலு பேரையும் நல்லா படிக்க வைக்க முடியல...
அதனால...”
“அதனால?”
“அதனால...
உன்ன ஹோம்ல சேர்த்திடலாம்னு இருக்கோம்!”
இரண்டு
மூன்று நாட்களுக்கு முன் அம்மா சொன்ன வார்த்தைகள் தோட்டாக்களாய் நெஞ்சைத்
துளைத்தன. இரண்டு அண்ணன்களும் தம்பியும் இருக்கும்போது நான் ஏன் பலிகடா ஆக்கப்பட்டேன்? பெண்
பிள்ளை என்பதுதான் பிரச்சனையா? வெளியில்தான் பெண்களுக்கு மதிப்பில்லையென்றால்,
குடும்பத்திலுமா? இதற்கெல்லாம் பெற்ற அம்மாவே மூலக்காரணமாய் இருப்பதுதான்
மனத்திற்குள் பெரும் வலியைத் தந்தது. அவரும் பெண்தானே. ஒரு பெண்ணே மற்றொரு
பெண்ணைத் துச்சமாக நினைத்தால் எப்படி?
மனத்திற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள்,
போராட்டங்கள்.
அறைக்கதவு
தட்டப்படும் சத்தம் எரிச்சலை வரழவழைத்தது. திறக்கத் துளிகூட விருப்பமில்லை.
மீண்டும் மீண்டும் அதே சத்தம். மண்டைக்குள் குடைச்சல் தாங்க முடியவில்லை. நான் கதவைத்
திறந்து பார்ப்பதற்கும் அம்மா மீண்டும் கதவைத் தட்ட கையைத் தூக்குவதற்கும் சரியாய்
இருந்தது. அம்மாவின் முகத்தைப் பார்க்க விரும்பாமல் அறைக்குள்
நுழைந்து கொண்டேன். அம்மா நிழலாய்ப் பின் தொடர்ந்து உள்ளே வந்தார். என் முகத்தைத்
தன் இரு கரங்களால் தாங்கிப் பிடித்தார்.
“செல்லக்குட்டி...! இந்த வீட்டிலேயே நீதான் ரொம்ப நல்லா படிக்கிற. எங்களோட இங்க இருந்தீன்னா, உன் வாழ்க்கை வீணாப் போயிடும். நீயாவது நல்ல சாப்பாடு சாப்புடு! நல்லா
படி. உனக்காக, உன் எதிர்காலத்துக்காக நான் இத செஞ்சித்தான்
ஆகணும், புரிஞ்சிக்கோடா செல்லம்!” ஓவெனக் கதறி அழத் தொடங்கிய
அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக