சனி, 26 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 021 #மசாலா டீ

 

“பாட்டி..! ஏன் அப்பாவும் பெரியப்பாவும் எப்ப பாத்தாலும் சண்ட போட்டுக்கிட்டே இருக்காங்க? இப்பவும் அதான் நடக்குது,” கேட்டு விட்டு உச்சுக் கொட்டினான் செல்வம்.

“அதெல்லாம் ஒன்னு இல்ல... நீ மனச போட்டுக் குழப்பிக்காதடாய்யா!”

“இல்ல பாட்டி, நீங்க பொய் சொல்றீங்க. நான்தான் டெய்லி  பாக்கிறனே!” மீண்டும் அதே சலிப்புடன் கூறியவன் பாட்டியின் பக்கம் வந்து நின்று கொண்டான்.

“சரி,  அத விடு. ரொம்ப நாளா மசாலா டீ கேட்ட இல்லீயா. இன்னிக்கு பாட்டி  உனக்குப் போட்டு தரேன். ஆனா, ஒரு கண்டிஷன். நீ பாட்டிக்கு உதவி செய்யனும், சரியா?” பாட்டி சொல்ல தலையைப் பலமாய் ஆட்டிக்கொண்டான் செல்வம்.

பட்டை 2, கிராம்பு 2, ஏக்காய் 4, சின்ன துண்டு இஞ்சி, மூன்று புதினா இலை, பால்  ஒரு கப், சக்கரை 3  தேக்கரண்டி, தேத்துள் 2 மேசைக்கரண்டி  ஆகியவற்றைப்  பாட்டி சொல்ல சொல்ல, மசாலா டீக்குத் தேவையான பொருட்களை உற்சாகமாய் எடுத்து வைத்தான்.

“பாட்டி..!  எல்லாம் ரெடி. வாங்க டீ கலக்கலாம்!” முந்திக் கொண்டு அடுப்பருகே  நின்று கொண்டான். 

வரவேற்பறையில் மூத்தவனுக்கும் இளையவனுக்கும் சண்டை தீர்ந்த பாடில்லை. பாட்டி அதைப் பொருட்படுத்துவதாகவும் இல்லை.

“முதல்ல பட்ட, கிராம்பு, ஏலக்கா, சின்ன துண்டு இஞ்சி எல்லாத்தையும் இடி கல்லுல போட்டு இடிச்சிக்கனும். அளவுக்கு அதிகமா போட்டா கசக்கும் ஐயா!”

“சரி பாட்டி, புரியுது,”

“அப்பறம் அடுப்ப தட்டணும். சின்ன பாத்திரத்தில ஒரு கப் தண்ணீய ஊத்தி அடுப்பு மேல வைக்கணும். இடிச்சி வச்ச எல்லாத்தையும் போட்டு வேக வைக்கணும், புதினா இலையும் இப்ப போட்டுக்கலாம். புதினா போடலனா,  டீ அவ்வளவு நல்லா இருக்காது, சரியா,

“பாட்டி, வாசம் வீட்டையே தூக்குது இல்ல!” வாசத்தை உள்ளே ஆழமாய் இழுத்து இரசித்தவனைப் பார்த்தார் பாட்டி. அடுத்துத் தேத்தூளை எடுத்துப் போடப் போன பாட்டியை அவசரமாய்த்  தடுத்தான் செல்வம்.

“என்ன(னை) ஏன் ஒன்னும் செய்ய விடமாட்றீங்க?” முகத்தைத் திருப்பிக்கொண்ட செல்வத்தைப் பார்த்ததும் பாட்டிக்குச் சிரிப்பு வர,  அதை அடக்கிக் கொண்டார்.

“சரி வாடா செல்லம்,  நாம சேர்ந்தே செய்யலாம். இந்தத் தேத்தூள போட்டு நல்லா கொதிக்க விடு. அப்பறம் சீனிய போடலாம். கடைசியா பால ஊத்திக் கொதிக்க வச்சுட்டா மசாலா டீ ரெடி! அடுப்ப மெதுவா வச்சி பால நல்ல கொதிக்க விட்டுப் பாரு, மசாலா டீ அப்படித்தான் இருக்கும்!”

பாட்டியுன் பூரிப்பைப்  பார்த்துப் சின்னதாய்ப் புன்னகைத்தான் செல்வம்.

“மசாலா டீ சூப்பரா வந்திருக்கு இல்ல பாட்டி!”

“ஆமாய்யா,”

மசாலா டீயின் சுவையில் வரவேற்பறையில் நடந்துகொண்டிருக்கின்ற சண்டையை மறந்து போனான் செல்வம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...