ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 022 #நன்றி

 

 

நேற்றிலிருந்தே பாஞ்சாலிக்கு நிலைகொள்ளவில்லை. நல்லவர் போல நாடகமாடிய  முதலாளி அம்மாவின்  பேச்சைக் காதுபட கேட்டதிலிருந்து அவர் மேல் இருந்த அன்பு, நம்பிக்கை எல்லாம் தூள் தூளாகிப் போனது. ஐந்து வருடங்களாகச் சொந்த குடும்பமாக நினைத்து மகிழ்ந்ததெல்லாம் அர்த்தமில்லாமல் போனதாய் உணர்ந்தாள்.

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இரவு வரைக்கும் மாடாய் உழைத்திருக்கிறாள்.  அம்மா, அப்பா பிள்ளைகள் என ஒருவர் விடாமல் அனைவருக்கும் சேவகம் செய்திருக்கிறாள். இது நாள் வரை கணக்குப் பார்த்து வேலை செய்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக இருந்தாலும்கூட முதலாளி அம்மாவிற்குத் துணையாக இருந்திருக்கிறாள். முதலாளி அம்மாவைத் தன் தாயாக நினைத்திருக்கிறாள். நடத்தியிருக்கிறாள்.

      சென்ற மாதம் தாய்நாட்டிற்குப் போய் வந்தபோதுகூட  மாமியார் தன் கைப்பட தயாரித்த சமையல் பொடி, வத்தல் என இந்தக் குடும்பத்திற்காக அள்ளிக்கொண்டு வந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் தான் கர்ப்பம் எனத் தெரிவித்தபின் முதலாளி அம்மாவிடம் மாற்றத்தைக் காணத் தொடங்கிய பாஞ்சாலிக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“மது, பஞ்சாலி இங்க இருக்க வேணாம். நான் வேலைக்கு வேற ஆள  பாத்துக்கிறேன். அவகிட்ட இதப் பத்தி எதுவும் கேக்க வேணாம், புரியுதா?” போனில் தன் மகளுடன் கிசுகிசுத்த முதலாளி அம்மாவை நினைத்து நொந்து போனாள். 

இனித் தனக்குப் பாரமாகி விடுவாள் என்ற முதலாளி அம்மாவின் பயம்தான் இந்த முடிவுக்குக் காரணமென அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் இன்று தன்னை வேண்டாமெனக் ஒதுக்கித் தள்ளும் குடும்பத்தை நினைக்க நினைக்க அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. தாங்கிக் கொண்டாள்.

      மறுநாள் வீட்டிற்கு வந்ததும் அவசர அவசரமாய் அம்மாவின் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள் முதலாளி அம்மாவின் மகள் மது.

“பாஞ்சாலி..! கொஞ்ச நாளு அக்கா வீட்டில போயி இரு.  அக்கா பேச்ச கேட்டு நடந்துக்கோ. நான் கூப்பிடற வரைக்கும் அங்கயே இரு, புரியுதா?” அறையிலிருந்து வெளியில் வந்ததும் வராததுமாய்ப் பெரிதாய் ஆணையிட்டார் முதலாளி அம்மா.

“ஏம்மா, நான் என்னம்மா தப்பு பண்ணேன். ஏன் இந்த வீட்ட விட்டு அனுப்பறதுல இவ்வளோ  தீவிரமா இருக்கீங்க. உங்கள அம்மா மாதிரிதானே பாத்துக்கிட்டேன், உங்க பிள்ளையா இருந்தா பிள்ளத்தாச்சின்னுகூட பாக்காம இப்படி அலைய விடுவீங்களா, சொல்லுங்கம்மா!” பொங்கி எழுந்தாள். ஓவெனக் கதறி அழுதாள்.

“உன்ன பிள்ளையா நினைக்கிறதாலதான் அனுப்பி வைக்கிறன்! என் பேரப்பிள்ளையோட திரும்பி வா!”

முதலாளி அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போனாள் பாஞ்சாலி.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...