திங்கள், 28 பிப்ரவரி, 2022

#குறுங்கதை 023 #கனவு பலிக்குமா?

 


காலை எட்டு மணிக்கெல்லாம் வகுப்பு தொடங்கிவிடும். முதல் ஆளாக விரிவுரையாளர் வகுப்பில் ஆஜராகி விடுவார். முதலில் சிற்றுண்டி எடுக்க வேண்டும். பின்னர் வகுப்புக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பசியில் வாட வேண்டியதுதான். உடம்பு தாங்காது. 

 

அவசரமாய் வகுப்பிற்குக் கிளம்பிக்கொண்டிருந்த எனக்குக் கோகிலாவின் புலனச்செய்தி கவனத்தை ஈர்க்க, அப்படியே உட்கார்ந்து கொண்டேன். அதுவும் எங்களின் இளையோர் எழுத்தாளர் குழுமத்தில் இச்செய்தி வந்திருந்ததால் ஆர்வம் மேலோங்கியது. அவசரத்திலும் அச்செய்தியைப் படிக்கத் தோன்றியது

 

வணக்கம். காலையில கனவு கண்டா பலிக்குமா?”

 

கிண்டலாய் ஒரு கேள்வி.

 

அப்படித்தான் சொல்லிக்கிறாங்க!” நானும் கிண்டலாய்ப் பதில் அனுப்பினேன். 

 

நம்ப தோழர் தில்லைநாதன் கனவுல வந்தாரு. நம்பவே முடியல!” 

 

அப்படின்னா முக்கியமான கனவாத்தான் இருக்கனும். சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்!ஆர்வமுடன் கேட்டேன். 

 

நாதன் தொடர்ந்து நிறைய கத எழுதற மாதிரியும், அவர சுத்தி இரசிகர் கூட்டம் குழுமி இருக்கிற மாதிரியும் கனவுல வந்திச்சி!சிரிப்பு ஈமோஜியோடு வந்தன கோகிலாவின் வார்த்தைகள். இடையிடையே மற்றவர்களும் இணைந்துகொள்ள கிண்டல் பேச்சுக்கும் நையாண்டிக்கும அளவில்லாமல் போனது தில்லைநாதன் அன்றைய பேச்சுப் பொருளாகிப் போனான்.

 

அந்தக் கலகலப்பில் என்னைத் தொடர்ந்து கலந்துகொள்ள விடாமல் ஏதோ ஒன்று என்  ஆழ்மனத்தைப் பிசையத் தொடங்கியதுகோகிலாவின் வார்த்தைகளில் கிண்டலைவிட எதிர்பபார்ப்பும் ஏக்கமும் இருப்பதாய் உணரத் தொடங்கினேன். ஓராண்டிற்கு முன் சிறுகதை மீது ஆர்வம் கொண்ட இளையோருக்காகக் கோகிலாவின் தலைமையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புலனக் குழுமம். இந்த ஓர் ஆண்டில் எத்தனை எத்தனை பயிலரங்குகள், கலந்துரையாடல்கள். உள்நாட்டு எழுத்தாளர்களோடு சந்திப்புகள். எத்தனை விதமான முன்னெடுப்புகள். நினைத்துப் பார்க்கும்போதே பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.

.   

செய்தியைப் படித்து விட்டு பதிலேதும் சொல்லாத தில்லைநாதன் மீது வருத்தம் தோன்றியது. அலைபேசியை எடுத்தேன் 

 

ன்டா... குழுவில என்னன்னமோ நடக்குது. நீ என்னடான்னா ஒன்னுமே சொல்லாம ஒதுங்கியே நிக்கிற!குரலை உயர்த்தினேன். 

 

இல்லடா... விடிய விடிய கண்ணு முழிச்சி இப்பத்தான்  என்னோட சிறுகத தொகுப்புக்காகப் பத்தாவது கதைய எழுதி முடிச்சேன். அதான்...”

 

“காலையில கனவு கண்டா நிச்சயம் பலிக்கும்”  நம்பிக்கையாய் ஒரு குறுஞ்செய்தியைக் குழுவில்  அனுப்பிவிட்டு  உற்சாகமாய் வகுப்புக்குக் கிளம்பினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...