“என்னங்க!
உங்கள என்ன சொல்றதுன்னே தெரியல? கிரகப்
பிரவேத்த எட்டாந்தேதி போயி வச்சிருக்கீங்க! தெரிஞ்சி செய்றீங்களா? இல்ல
தெரியாம செய்றீங்களா? உங்கள நெனைச்சாலே தல வலிக்குது போங்க!” வானத்துக்கும்
பூமிக்கும் தாண்டிக் குதித்தாள் கற்பகம்.
எதிர்த்து
ஒரு வார்த்தை கூட பேச்சாமல் சேகர் மௌனமாய்ப் சோபாவில் அமர்ந்து கொண்டான். இன்றல்ல
நேற்றல்ல கற்பகத்தைக் கைப்பிடித்த நாள் முதல் இவனுக்குப் பிரச்சனையாய் அமைவது இந்த
எட்டுதான். இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளை இவளுக்காக
மாற்றியிருக்கிறான்.
கற்பகம்
நல்லவள்தான். சேகரைப் புரிந்து நடப்பவள்தான். அவன் வார்த்தையை மதிப்பவள்தான்.
ஆனால், இந்த ஒரு விசயத்தில் மட்டும் அவள் விட்டுக் கொடுப்பதில்லை.
“போயும்
போயும் நகை வாங்க உங்களுக்கு
எட்டாந்தேதிதான் கிடைச்சதா? நல்ல நாளா பாத்துப் போலாம். பொறுமையா இருங்க!”
“ஐயோ
சும்மா இருக்கீங்களா. கூட்டு எண்ணு எட்டுன்னா முடியவே முடியாது. காடிக்கு வேற
நம்பர் பாருங்க”
சேகருக்குக்
கேட்டுக் கேட்டுப் பழகிப்போனது. அதனால், முடிந்த வரை மனைவிக்குப் பிடிக்காத எட்டைத் தவிர்க்கப்
பார்த்தான். இதற்கெல்லாம் அவள் சொல்லும் ஒரே காரணம் இரண்டாம் எண்ணான அவளுக்கு
எட்டு ஒத்துப் போகாதாம்.
கிரகப்பிரவேசப் பேச்சில் வாதாடி அயர்ந்து சோபாவில் சாயப்
போனவள், தலை கிறுகிறுக்க அப்படியே சேகர் மேல் விழ, சேகர்
பதறிப் போனான். அதிகப்படியான அலட்டல், இரத்த அழுத்ததைக்
கொண்டு வந்து விட்டதோ என்ற பயத்தில் கொஞ்சம் பயந்தும் போனான். மருத்துவமனையில் அரை
மணி நேர சோதனைக்குப் பின் கிடைத்த செய்தியால் பயம் மகிழ்ச்சியாய் மாறிப் போனது. இரண்டாண்டு
இல்லற வாழ்க்கையிம் பரிசாக இன்னும் ஒன்பது மாதங்களில் தாயாப் போகும் கற்பகத்தை
வாஞ்சையுடன் பார்த்தான் சேகர். வெட்கத்தால் முகம் சிவந்து போனாள் கற்பகம்.
“சரிம்மா, எட்டாம் மாசம் முதல் வாரத்தில குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கு.
மறக்காம செக் ஆப் போங்க. கொடுக்கிற வைட்டமின் எல்லாத்தையும் சரியா சாப்பிடுங்க!”
மருத்துவர் சொன்ன செய்தி இடியாய் விழ பேச்சற்று நின்றான் சேகர். கற்பகத்தைப்
பரிதாபமாய்ப் பார்த்தான். கற்பகம் முகமெல்லாம் மலர, கற்பனை
உலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக