புதிய பள்ளி, புதிய சூழல், புதிய மனிதர்கள். இந்த ஒரு மாதத்தில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாத்திபனுக்குப் பழகிப் போனது. குறைந்த இந்திய மாணவர்களைக் கொண்ட இடைநிலைப்பள்ளி என்பதால் அவ்வளவு சவால்கள் இருப்பதாக அவன் உணரவில்லை. அதற்காக அவன் அவன் கடவுக்கு நன்றி சொல்ல மறக்கவில்லை. அதுவும் அமைதியான ஒரு சிறு பட்டணத்தில் அப்பள்ளி அமைந்திருந்தது அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரவே செய்தது.
இளம் ஆசிரியர் என்பதால் பதின்ம வயது மாணவர்களோடு பழகுவதிலும்
எந்தச் சிக்கலும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. நண்பர்களைப் போன்று அவர்களோடு
பழகத் தொடங்கி விட்டதால் மாணவர்களுக்கும் மகிழ்ச்சி. அவனோடு நெருங்கிப் பழகத்
தொடங்கினார்கள். அவன் தமிழ்மொழி வகுப்புக்காகக் காத்திருந்தார்கள். கட்டொழுங்கு பிரச்சனைகள
ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும் அவை யாவும் தீர்க்கக்கூடியவையாகவே இருந்ததில் அவனுக்கு
திருப்திதான். ஆனால், படிவம் இரண்டில் கடைசி வகுப்பில் பயில்கின்ற சுந்தரமூர்த்தி
மட்டும் அவனுக்குப் பெரும் சவாலாக இருந்தான்.
வீட்டுப் பாடங்களைச் செய்து அனுப்பவதிலோ,
வகுப்பில் கலந்துரையாடலில் கலந்துகொள்வதிலோ அவன் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
பாட புத்தகத்தை அடிக்கடி எடுத்து வராத அவனை எத்தனையோ முறை கண்டித்து விட்டான்.
பயிற்சி புத்தகமும் அப்படித்தான். ஒரு முறை அவன் புத்தகப்பையை ஆராய்ந்தபோது ஒரு
நோட்டுப்புத்தமும் ஒரு பேனாவும் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானான்
பார்த்திபன்.
வற்புறுத்திக் கேட்டால் மட்டும் கேள்விகளுக்குப் பதில்
சொல்லும் ரகம் என்பதால் அவனைப் பேச வைக்க பல உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. சமயங்களில்
வற்புறுத்தினால்கூட பதில் வராது. அந்த நேரத்தில் பார்த்திபன் பொறுமையின் சிகரமாய்
இருக்க பட்ட பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்.
சுந்தரிமூர்த்தியின் போக்கு மனக்குழப்பத்தைத் தர, பட்டணத்தின்
மையத்தில் அமைந்துள்ள இந்திய உணவகத்திற்குச் சென்றான். சூடாக ஒரு மசாலா டீ ஆர்டர் செய்தான். பொதுவாக
மனம் குழப்பத்தில் இருக்கும்போது மசாலா டீ குடிப்பதுதான் அவன் வழக்கம். கொஞ்சம்
கொஞ்சமாய் வாயில் வைத்து உறிஞ்சி, அதன் நறுமணத்தை நாசியில் இழுத்து, கண்களை
மூடி அது உள்ளே செல்லும் அழகை அணு அணுவாய் உணர்ந்து இரசிப்பதில் இருக்கும் சுகத்தை
அவன் பல முறை அனுபவித்திருக்கிறான். இன்றும் அப்படித்தான். ஆனால்,
அதற்கும் தடையாய் வந்தது தன்னைத் தேடி வந்து அருகில் அமர்ந்து அந்த முகம் அறியா
ஆடவரின் பேச்சு.
“வணக்கம்
சார். நீங்க செக்கோலா மெனாங்காவுக்கு வந்திருக்கிற புது சாரா?
பிள்ளைங்க சொன்னாங்க... நீங்க ரொம்ப நல்லா படிச்சுக் கொடுக்கறீங்கன்னு,” அவரே
ஆரம்பித்தார்.
“வணக்கங்க.
ஆமா, புதுசாதான் வந்திருக்கேன். நீங்க சொல்றத கேட்க சந்தோசமா
இருக்கு. ரொம்ப நன்றிங்க,” பார்த்திபன் பூரிப்போடு பேசத் தொடங்கினான்.
“நல்ல
வேள சார் நீங்க வந்தீங்க. அந்த சாரு மட்டும் இருந்திருந்தா பிள்ளைங்க படிப்பு
அதோகதிதான். ஒழுங்கா படிச்சே கொடுக்க மாட்டாரு. பிள்ளைங்க மேல கொஞ்சம்கூட அக்கறை
இல்ல. ”
பிள்ளைகளுக்காக
வருத்தப்பட்டான். வந்தவர் ஏதோ கொஞ்சம் தெளிவாய்ப் பேச, இந்திய
மாணவர்களின் பிரச்சனைகளை ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டான்.
“நீங்க
சொல்றது உண்மதான் சார். இந்தக் காலத்துல பெத்தவங்களுக்குப் பிள்ளைங்க மேல எங்க
அக்கறை இருக்கு! சம்பாதிச்சு போட்டா மட்டும் போதும்னு நினைக்கிறாங்க. நம்ப
சொன்னாலும் திருந்த மாட்டாங்க சார்! எப்படியாவது போகட்டும் விடுங்க சார்!”
நாட்டாமை தோரணையில் பேசிய அவரை கண்ணாலேயே அளவெடுக்கத் தொடங்கினான் பார்த்திபன். நடுத்தர
வயதிருக்கும். சுருட்டை முடி. மாநிறம். பெருத்து இல்லாத மெலிந்தும் இல்லாத உடல்
வாகு. படிப்பு வாசனை உள்ளவர் என அவர் பேச்சில் தெரிந்தது.
“உங்கள
மாதிரி விவரம் தெரிஞ்ச ஆளுங்கத்தான் எங்களுக்கு உதவியா இருக்கணும்” எதிர்பார்ப்புடன்
பேசினான் பார்த்திபன்.
“சொல்லுங்க
சார். நாங்க செய்யாம வேறு செய்யப் போறா? கூச்சப்படாம சொல்லுங்க” உற்சாகத்துடன் பேசியவரை எண்ணிப்
பெருமைபட்டுப் போனான் பார்த்திபன்.
“இல்லைங்க. போர்ம்
டூல சுந்தமூர்த்தின்னு ஒரு பையன். அப்பா பேரு ஆறுமுகம். படிப்பில கொஞ்சம்கூட
அக்கறை இல்ல. அவங்க அப்பா அம்மாவ நேரா பார்த்துப் பேசனும். நீங்க கொஞ்சம் கூட
வந்தீங்கன்னா நல்லா இருக்கும்,” தயங்கி தயங்கிப் பேசியவனை நிறுத்தினார அந்த மனிதர்.
“என்ன
பேரு சொன்னீங்க சார்?”
“பார்த்திபன்
ஆறுமுகம்”
பேசிக்கொண்டிருந்தவர் அவசர அவசரமாய் எழுந்தார்.
ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார். குழப்பத்தில் மீண்டும் மசாலா டீயைக் குடிக்கத் தொடங்கினான்
பார்த்திபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக