வியாழன், 3 மார்ச், 2022

#குறுங்கதை 026 #இனிய காலை வணக்கம்

 


“போதும்டா மதி. இன்னும் எத்தனை நாலு, எத்தன வாரம் பொறுக்கிறது. வேலை வெட்டி இல்லாமையா காலையில எழுந்து, அர மணி நேரம் இவனுங்களுக்காகச் செலவழிச்சி இந்தக் கால வணக்கத்தை அனுப்பிக்கிட்டு இருக்கே? உன்னோட உழைப்ப கொஞ்சமாவது மதிக்கிறானுங்களா!” புலம்பித் தீர்த்தான் மதி.

காலையில் சமையலறையில் போராடிக்கொண்டிருக்கும் மனைவிக்கு உதவக்கூட அவனுக்கு நேரம் இருந்ததில்லை. எழுந்ததும் முதல் வேலையாய் எல்லா நண்பர்களுக்கும் காலை வணக்கத்தை அனுப்பி விட வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் அன்றெல்லாம் மதிக்கு மனத்தில் ஏதோ குறையாக இருந்துகொண்டிருக்கும். மனைவி சமைத்து வைத்திருக்குக் காலைச் சிற்றுண்டியைக்கூட பல நாட்கள் சாப்பிட நேரமில்லாமல் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போயிருக்கிறான்,

விதவிதமாய் வார்த்தைகளைக் கோர்த்து அவற்றை அழகாய் வடிவமைத்துக் காலை வணக்கமாய் நண்பர்களுக்கு அனுப்புவதில் வல்லவன் இந்த மதி. அதற்கு அவனுக்கு குறைந்தது  அரை மணி நேரமாவது தேவைப்படும். பல வேளைகளில் இதற்காக நண்பர்களிடம் பாராட்டுகளை வாங்கியிருக்கிறான்.

முகநூலில் அறிமுகமாகி கடந்த சில மாதங்களாக நண்பர்களாகிவிட்ட நிலையில் பரந்தாமனுக்கும் காலை வணக்கத்தை அனுப்பத் தொடங்கினான் பரந்தாமன். முதல் மூன்று மாதங்கள் உடனே பதில் வணக்கம் அனுப்பி வந்தவன், அடுத்து சில வாரங்கள் தான் அனுப்பியவற்றைப் படித்துவிட்டுப் பதிலளிக்காமல்  இருந்தது கோபத்தை  உண்டு பண்ணியது என்னமோ உண்மைதான். 

ஒரு சில நாட்களுக்கு முன் அனுப்பிய செய்திகள் பார்க்கப்படாமலேயே இருந்தன. தன்னை மதிக்காதவனை, தன் தியாகத்தை மதிக்காதவனை இனி தானும் மதிக்கப்போவதில்லை என்பதில் தீர்க்கமாய் இருந்தான். இருந்தாலும் மனம் பொறுக்கவில்லை. நேரடியாகக் கேட்டுவிட முடிவெடுத்தான். அவனிடம் பேச மனம் ஏனோ மறுத்தது. இருந்தாலும் கேட்க நினைத்ததைக் கேட்காமல் விட்டால் மனம் நிம்மதி பெறாது என்பது அவனுக்கே தெரியும். தன் மனத்தாங்கலைச் சொல்லி விட வேண்டுமென நினைத்தவன் மேலே யோசிக்காமல் அவன் அலைபேசி எண்ணில் அழைத்தான். நீங்கள் தொடர்புகொண்ட எண் சேவையில் இல்லை எனப் பதில் வந்தபோது கோபம் தலைக்கேறியது.

இனி அவனைப் பற்றி நினைப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தான். இனி அவனே அழைத்தாலும் பேசக் கூடாதென்பதில் தெளிவாய் இருந்தான். ஆனால், அதிசயமாய் இன்று காலையிலேயே குரல் பதிவு ஒன்று பரந்தாமனிடமிருந்து வந்திருந்தது.

“நான்தான் மைதிலி. உங்க வைவ். காலையில எழுந்தா என்கூட பேசவோ குட் மோர்னிங் சொல்லவோ உங்களுக்கு நேரம் இருந்தது இல்ல. அதான் உங்க பிரண்டா ஆயிட்டா வாட்ஸ்ஏப் மூலமாவது கூட் மோர்னிங் சொல்லுவிங்களேன்னு ஆசைப்பட்டேன். ஆனா, அப்படி ஒரு குட் மோர்னிங் தேவ இல்லன்னு பிறகு தோனுச்சு. அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...