வெள்ளி, 4 மார்ச், 2022

குறுங்கதை 027 # துப்பாக்கி

 

இருவர் கைகளிலும் துப்பாக்கிகள். எதை தன் வாழ்வில் பார்க்கக்கூடாது என நினைத்திருந்தானோ அது தன் கண் முன்னாலேயே  நடந்து கொண்டிருந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இடது பக்கத்தில் கருப்புச் சட்டைக்காரன். வலது பக்கத்தில் சிவப்புச் சட்டைக்காரன். முகத்தில் கருப்பு நிறக்கோடுகள். இடுப்பில் ரேம்போ கத்திகள்.  கையில் மாட்டுபவனைப் பதம் பார்த்துவிடத் துடிக்கும் கத்திகள். இந்த ஆயுதங்கள் அல்லவா உலகைக் கூறுபோடக் காத்திருக்கின்றன! இவற்றிடமிருந்து தப்புவது எப்படி?

கண்களை உருட்டிக் கொண்டும் முகத்தைக் கொடூரமாய் வைத்துக் கொண்டும் கழுகுப் பார்வையோடு பதுங்கியிருந்தவர்களைப் பார்க்கப்  பார்க்க மனத்தில் அச்சம் குடி கொண்டது. நடுவில் வசமாய் மாட்டிக் கொண்டு விட்டதை ஊகித்துக் கொண்டவன் பத்தடி பின்னால் சென்று மறைந்து கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது.

பசியில் இருக்கும் சிங்கங்களாய் இறைக்காகக்  காத்திருக்கும் இருவரின் கண்களிலும் மண்ணைத் தூவுவது அவ்வளவு சுலபமல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருவரும் அயர்ந்த நேரம் இடதும் வலதும் பார்த்தான். தன்னுடைய மறைவிடத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்தான்.  காலடி சத்தம் கேட்காமல் மிக மிகப்  பதுசாய் நடந்தான்.

“ஹேன்ஸ் ஆப்!

அதிர்ந்து போனான். தப்பிக்க வழியில்லை என்பது தெளிவாய்த் தெரிய, கைகளைத் தூக்கிச் சிலையாய் நின்றான்.

“நல்லா மாட்டிக்கிட்டீங்களாப்பா!” கருப்புச் சட்டைக்காரன் வெற்றிக் களிப்போடு உரக்கச் சிரித்தான்.

“அப்படியே இருங்கப்பா. நகர்ந்தா சுட்டிடுவோம்!” சிவப்புச் சட்டைக்காரன் தன் பங்குக்குக் கர்ஜித்தான்.

இருவரும் அவனை கீழே சாய்த்து மேலே ஏறி  உட்கார்ந்து கொண்டனர். திமிரிப் பார்த்தான். முடியவில்லை.

“ஏதுடா துப்பாக்கி?

“தாத்தா வாங்கிக் கொடுத்தாரு!” மகிழ்ச்சியாய்ச்  சொன்னார்கள்.

“வாங்கிகிட்டு வந்த சாக்லெட்டை வெளிய எடுங்கப்பா. இல்ல இந்தத் துப்பாக்கிக்கு நீங்க பதில் சொல்லணும்!”

பாக்கெட்டில் இருந்த சாக்லெட்டை எடுத்துக் கொடுத்தான். சாக்லெட் கிடைத்ததும்   துப்பாக்கியை அப்படியே போட்டு விட்டு வெற்றிக் களிப்போடு வெளியே ஓடினார்கள்.

துப்பாக்கிகளைக் கைகளில் எடுத்தான். திருப்பித் திருப்பிப் பார்த்தான். வெளிநாட்டுத் தயாரிப்பு. எங்கோ இருந்து கொண்டு ஒருவன் தம் பிள்ளைகளைப் போருக்குத் தயாராக்கிக் கொண்டிருக்கும் வன்மம் நெருடலை ஏற்படுத்தியது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...