சனி, 5 மார்ச், 2022

#குறுங்கதை 028 #கருப்புப் பை

 

#குறுங்கதை 028

கருப்புப் பை

கூட்ட நெரிசலைத் தாண்டி முண்டியடித்துக்கொண்டு பேரங்காடி உள்ளே எப்படியோ அவன் சென்று விட்டான்.  கையில் இருக்கும் பையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். கழிவு விற்பனையில் மதி மயங்கி மக்கள் கூட்டம் அந்தப் பேரங்காடியில் குவிந்து கிடந்தது அவனுக்குச் சாதகமாகிப் போனது. இன்னும் சில நிமிடம்தான் வாழ்க்கை என்பது தெரியாமல் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு பொருள்களை அள்ளிக் கொண்டிருந்தனர். அந்த  மனிதர்க் கூட்டத்தை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தான்.

அடிக்கடி தன் கையில் இருந்த கருப்புப் பையைப் பார்த்துக் கொண்டான். தவற விட்டால், அவ்வளவுதான். திட்டமெலாம் நாசமாகிப் போய்விடும். உயிரே போனாலும் இந்தப் பையைப் பத்திரமாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட வேண்டும். தன் சமூகத்திற்காக அவன் செய்யப் போகும் இந்தக் காரியத்தை எண்ணிப் பெருமைபட்டுக்கொண்டான். நாளை அவன் சமூகம் அவனைப் போற்றப் போவது நிச்சயம்.

 முதலில் முதல் மாடிக்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள கூட்டத்தை வேவு பார்க்க வேண்டும். எசக்கலேட்டரில் ஏறிக் கொண்டான். முகமெல்லாம் வியர்வைத் துளிகள். சட்டைக் காலரைச் சற்றே இழுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஆண்கள் பகுதியில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. மீண்டும் கீழே முதல் மாடிக்கு விரைந்து வந்தான்.

இடது பக்கத்தில் வித விதமாய் வாசனைத் திரவியங்கள். இன்னும் சில நிமிடங்களில் ரத்த வாடையால் இந்தப் பேரங்காடியே மூழ்கப்போகிறது என்று தெரியாமல் பேரம் பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. வலது புறத்தில் பெண்களுக்கான கைப்பைகள். ஒவ்வொரு பையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு வேலைப்பாடு, ஒவ்வொரு விலை.  ஆனால், தன் கருப்புப் பைக்கு அது ஈடாகாது என்ற நினைப்பில் அவன் இதழோரத்தில் வன்மப்   புன்னகை. எத்தனையோ உயிர்களைப் பலி வாங்கப் போகும் பை. காலனின் மறு உருவமாய்த் தன் கைவிரல்கள் இடுக்கில் பத்திரமாய் இருந்த கருப்புப் பையை மீண்டும் பிரமிப்போடு பார்க்கிறான். நினைத்த காரியம் நிறைவேற இன்னும் சில நிமிடங்களே உள்ளன. அந்தப் பையை வைக்கச் சரியான இடம் அதுதான். முடிவெடுத்து விட்டான்.

அந்த இடத்தை நோக்கி மெதுவாய், கவனமாய் நகர்கிறான். அதிகரிக்கும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த அவன் முயற்சிக்கவில்லை. கருப்புப் பையைக் கீழே வைக்கக் குனிந்தபோது பின்னால் யாரோ சட்டையைப் பிடித்திழுக்க, அவசரமாய்த் திரும்புகிறான். தவமாய்த் தவமிருந்து பெற்ற மகள். அவள் அருகில் அவனருமை மனைவி. இருவர் முகத்திலும் பரவசம். அவன் இதயத்தில் மரண ஓலம்.

“ப்பா, எப்பப்பா வந்தீங்க”?

கழுத்தில் கைகளைக் கோர்த்துத் தொங்கிய மகளை அதிர்ச்சியாய்ப் பார்க்கிறான். அவள் கைகளைப் பிடித்து இழுத்துத் தூரத் தள்ளி விடுகிறான்.

“இங்க என்ன பண்றீங்க. போயிடுங்க!” அவன் அலறல் வெடிச் சத்தத்தில் அடங்கிப்  போனது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...