காலையிலேயே தன் மகளை மோட்டாரில் ஏற்றிக்கொண்டு தமிழ்ப்பள்ளி வாசலை வந்தடைந்தான்
வசந்தன். இன்று வேலை நாள்தான். விடுமுறை எடுத்தால் சீனத் தவுக்கே காட்டுக் கத்து
கத்துவான் என்பது தெரியும். வேறு வழியில்லை. மகளுக்காக ஒரு நாள் விடுமுறை
எடுப்பதில் தவறேதும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.
தமிழ்ப்பள்ளி அருகில் இருந்த சீனப்பள்ளியிலும் இன்றுதான்
முதலாம் ஆண்டு மாணவர்ப் பதிவு போலும். கூட்டம் நிறைந்து வழிந்தது. மோட்டாரை
வெளியில் இருந்த பெரிய மரத்தடியின்கீழ்
நிறுத்தி விட்டு மகளின் பள்ளிச் சீருடையைச் சரி செய்தான். தன் அன்பு மகள் பின்னால்
மாட்டியிருந்த புத்தகப்பையைக் கைகளில் வாங்கிக் கொண்டான்.
“ப்பா...
பேக்க நான் மாட்டிக்கிறேன்... தாங்கப்பா!” மகள் சிணுங்க மீண்டும் புத்தகப்பையை அவள் தோள்களில் மாட்டி விட்டான். முதல் அனுபவம்
என்பதால் மகளை விட அவன் அதிக பூரிப்பாய்க் காணப்பட்டான். மகளின் கைகளைப்
பத்திரமாய்ப் பிடித்துக் கொண்டு
பள்ளிக்குள் காலடி எடுத்து வைத்தான். பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்ட முதலாம் ஆண்டு
மாணவர்களைப் பதிவு செய்யும் இடத்திற்குச் சென்றான்.
“வணக்கம்
டீச்சர். இவங்க என்னோட மக பாரதி. ஒன்றாம் வகுப்புக்குப் பதிவு செய்ய
வந்திருக்கேன்!” அவன் வார்த்தைகளில் பெருமிதம் தெரிந்தது. அவனுக்குப் பின்னால் ஏதோ
சலசலப்பு. திரும்பிப் பார்த்தான். மேலும் இருவர் பிள்ளைகளோடு வந்து
கொண்டிருந்தனர்.
“உட்காருங்க.
உங்க மகளோட பிறந்த சூரா, உங்க ஐ.சி., உங்க மனைவியோட ஐ.சி. எல்லாத்தையும் எடுத்திட்டு
வந்திருக்கீங்களா?” கேட்டு முடிக்கும் முன்பே எல்லா ஆவணங்களையும் மேசை மேல்
எடுத்து வைத்தான் வசந்தன்.
“டீச்சர், இவங்கள
எந்த வகுப்புல போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“எந்த
வகுப்பா? இருக்கிறதே ஒரு வகுப்புதாங்க. இந்த வருஷம் மொத்தம் பத்து
பிள்ளைங்கதான் முதலாம் ஆண்டுக்குப் பதிஞ்சிருக்காங்க! மத்த பிள்ளைங்க எல்லாம்
பக்கத்துச் சீனப் பள்ளியில பதிஞ்சிருக்கிறதா கேள்விப்பட்டேன்!” ஆசிரியரின் குரலில்
வருத்தம் இழையோடியது.
மனத்தில் ஏதோ நெருடல். சம்மட்டியால் யாரோ அடித்தது போன்ற
உணர்வு. பதிவு முடிந்ததும் ‘கோப்பராசியில்’
புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். மனத்தில் ஏதோ கலவரம். முதலில் இருந்த
பூரிப்பு போன இடம் தெரியவில்லை. மோட்டாரில்
ஏறிக்கொண்டான். மகளைத் தூக்கி முன் இருக்கையில் அமர்த்தினான். சீனப்பள்ளியைத் தாண்டும்போது ஆசிரியர் சொன்னது
நினைவுக்கு வர மோட்டாரை ஓரமாக நிறுத்தினான். பள்ளியை நோட்டமிட்டான். அந்த ஆசிரியர்
சொன்னது சரிதான். சீனப்பள்ளி வளாகத்தில் சீனர்களோடு நம்மினத்தவர்களும் குழுமியிருந்தனர். மனம்
வேதனைப்பட்டது.
“டேய்
வசந்த்... இங்க என்னடா பண்றே?
உன் பிள்ளையையும் இங்கதான் சேக்கப்போறீயா? சூப்பர்! கூட் டெசிஷன்!” தன் தோள் பட்டையில் தட்டிக் கொடுத்த பால்ய
நண்பனைக் கூர்ந்து பார்த்தான்.
பரத்
என்கிற பரதன். பார்த்து எத்தனை வருடங்களாகி விட்டன. வசந்தன் போல அல்ல அவன்.
பிரபலமான தொழிலதிபர். தமிழ்ப்பள்ளியில் வசந்தனோடு படித்தவன். திருமணத்திற்குப்
பிறகு ஒரு முறை எங்கோ பார்த்த ஞாபகம். அவன் வளர்ச்சியைப் பற்றி மற்ற நண்பர்கள் அடிக்கடி
பேசக் கேட்டிருக்கிறான்.
“அப்படின்னா...
உன் பிள்ளைய இங்கதான் சேர்த்திருக்கியா பரத்?”
“ஆமாண்டா,
சீனப்பள்ளியில போட்டா அவன் வாழ்க்க வேற லெவலுக்குப் போயிடும். சீனனோட பழகனாத்தான்
பிசினஸ் மைண்ட வரும். வேல கெடைக்கிறதும் ஈசி!” சீனனுக்கே இல்லாத இறுமாப்பு அவன்
பேச்சில் தெரிந்தது.
“ஏன்டா
சீனன்கிட்ட வேலைக்குப் போகனும்? நீ தமிழன்தான? உன்ன மாதிரி பிசினஸ்மேன் எல்லாம் தமிழனுக்கு வேல
கொடுக்கலாம்தான! எப்படா திருந்த போறீங்க?”
பதிலுக்குக்
காத்திராமல் வசந்தன் மோட்டாரை முடுக்கி விட்டான். காற்றாய்ப் பறந்து சென்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக