சுகுமாறனால் அம்மாவைக் கோபித்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இது முதல் முறையாக இருந்தாலாவது மன்னித்து விடலாம். இரண்டாவது முறையும் இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயமென அவனுக்குத் தெரியவில்லை. நல்ல காலம் இன்று வேலை முடிந்து கொஞ்சம் சீக்கிரம் வீடு திரும்பி விட்டான். இல்லையென்றால் இது எப்படிச் சாத்தியமாகும்.
திருமணம் இரவு மணி ஏழு இருபத்தைந்திலிருந்து ஒன்பது மணி
வரையாம். எட்டு மணிக்கு அலைபேசியில் அழைத்துத் திருமணத்திற்கு போய் வரச் சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது. அரை மணி
நேரத்தில் குளித்து விட்டு, மளமளவெனக் கையில் கிடைத்த சட்டையை அரைகுறையாக இஸ்திரி
போட்டு, மாட்டிக்கொண்டு புறப்படுவதற்குள் போதும் போதும்
என்றாகிவிட்டது.
மாப்பிள்ளை வீட்டார், அப்பா
பக்க உறவாம். பார்த்திராத முகங்கள். பழகியிராத உறவுகளை நினைத்தவுடன் அவனுக்குத்
தலை சுற்றிப்போனது. மாப்பிள்ளை பார்த்திபன் என்ஜீனியராம். தூரம் என்பதால் கோலாலம்பூரில்
இருக்கும் அம்மா அப்பாவால் வரமுடியவில்லையாம். வர விருப்பமும் இல்லை என்று அம்மா கிசுகிசுத்தது
அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஈப்போவில் வேலை செய்யும் தன்னைப் போய் வரச் சொல்லலாமெனத்
தம்பதி சகிதமாய் முடிவெடுத்துத் தாமதாய்ச் சொன்னபோது முடியாதென்று தட்டிக்
கழித்தான் சுகுமாறன். ஆனால், அம்மாவின் புலம்பல் தாங்க முடியாமல் இறுதியில்
ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அம்மாவின் பலமே அதுதான். நினைத்ததைச் சாதித்து
விடுவார்.
கார் நிறுத்துமிடம் கிடைக்காமல் காரைத் தூரத்தில்
நிறுத்திவிட்டு மூச்சிரைக்க நடந்து வந்தான். திருமண மண்டபத்தை வந்தடைந்தபோது மணி சரியாக
எட்டு ஐம்பது. வாசல் வரை கூட்டம். நச நச உடம்பு எரிச்சலை ஏற்படுத்த மீண்டும் அவன்
கோபம் அம்மா மேல் திரும்பியது. முட்டி மோதி மண்டபத்திற்குள் அவன் நுழைவதற்கும் கெட்டி
மேளம் முழங்குவதற்கும் சரியாக இருந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எப்படியோ மொய்யை
மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டதில் திருப்தி.
“வாழ்த்துகள்
மிஸ்டர் பார்த்திபன். விஸ் யூ அ ஹெப்பி மேர்ரிட் லைவ்,” மாப்பிள்ளையின்
கைகளைக் குலுக்கி மனதார வாழ்த்தினான் சுகுமாறன்.
“தெங்ஸ்
பிரதர். ஆனா என் பேர தப்பா சொல்றீங்கன்னு நெனைக்கிறேன்,” எனப் புன்னகையோடு
சொல்லிவிட்டு அடுத்து வந்தவர்களைக் கவனிக்கக் தொடங்கினார் மாப்பிள்ளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக