பைரவிக்கு இன்றோடு வயது ஐம்பது நிறைவு பெறுகிறது. ஐம்பது
ஆண்டுகால வாழ்க்கை வெறுமையாய்த் தோன்றியது. வெளியே எத்தனையோ பெண்கள் ஏதேதோ
சாதித்துக் கொண்டிருக்க, தான் மட்டும் சமையலறையில் சிறைபட்டுக் கிடப்பதை அவளால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை காலம்? மனம் யோசிக்கத்
தொடங்கியது.
ஆழ்ந்த சிந்தனையில்
மூழ்கப்போனவளை அலைபேசி அழைப்புத் தடுத்து நிறுத்தியது. ‘ஜே
எண்ட் டீ’ ஊழியரின் அழைப்புதான் அது. இரண்டு நாட்களாய் இந்த ஓர்
அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள். இன்னும் சில நிமிடங்களில்
வரவிருப்பதாகச் சொன்னபோது மனத்தில் ஏதோ பரிதவிப்பு,
எதிர்பார்ப்பு. நேரம் மிக மிக மெதுவாய் நகர்வதாக உணர்ந்தாள். அடிக்கடி சுவர்
கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறாள். ஆமை வேகத்தில் நகரும் முட்களைக் கடிந்து
கொள்கிறாள்.
மோட்டார் ஹார்ன் சத்தம் வெளியே கேட்க நொடியும் தாமதிக்காமல்
வாசலை நோக்கி ஓடுகிறாள். வாசலில் தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘ஜே
எண்ட் டீ’ ஊழியர். சிவப்பைக் கண்டால் முகம் சுழிக்கும் பைரவி
அன்று ஏனோ அந்த ‘ஜே எண்ட் டீ’ சிவப்பை அதிகமாய் இரசித்தாள்.
அந்த ஊழியர் காட்டிய இடத்தில் கையொப்பமிட்டாள். அவர்
கொடுத்த பொட்டலத்தை வாங்கிக் கொள்கிறாள். மார்போடு அணைத்துக் கொள்கிறாள். துள்ளலுடன்
வீட்டிற்குள் நுழையப் போனவளை அந்த ஊழியர் மீண்டும் கூப்பிட, உச்சுக் கொட்டிக்
கொண்டே மீண்டும் வாசலுக்குச் செல்கிறாள்.
“புவான்
போலே சயா அம்பில் பேன் சயா”
பிறர் சொத்துக்கு ஆசைப்படுபவளா அவள்?
வீராப்பாய்ப் பேனாவை நீட்டுகிறாள். அவர் புன்னகையோடு அதனை வாங்கிக்கொள்ள ஓட்டமும்
நடையுமாய் வரவேற்பறைக்குச் செல்கிறாள்; பொட்டலத்தைப் பிரிக்கிறாள். பதற்றத்தில் கைகள் நடுங்க, பல ஆண்டுகளாக
அவள் நேசிக்க மறந்த புத்தகம் அவள் காலடியில் விழுகிறது. காலடியில் கிடந்த
புத்தகத்தை பவ்வியமாய் எடுக்கிறாள்.
‘உலகிலேயே
சிறந்த புத்தகம்’ என்ற தலைப்பு மனத்தை நெருட முதல் பக்கத்தைப் புரட்டுகிறாள். ‘அம்மா…. தொடர்ந்து எழுத வேண்டும் என விரும்பும் மகனின் அன்பு
பரிசு‘ என்ற வரிகள் கண்களில் பட பார்வை மங்குகிறது. கண்ணீரைத்
துடைத்துக் கொள்கிறாள்.
அடுத்த பக்கங்களைப் புரட்டுகிறாள். வெள்ளைக் காகிதங்கள்.
அந்த வெள்ளைக் காகிதங்கள் ஒரே நொடியில் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லத் தொடங்குகின்றன.
அவற்றை இருவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒன்று அவள் அன்பு மகன்,
மற்றொன்று அவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக