புதன், 9 மார்ச், 2022

#குறுங்கதை 032 #தாய்ப்பால்

 

உலகைப் பார்த்து ஒரு வாரமே ஆன குழந்தையை அணைத்துப் பிடித்துக் கொண்டு வீட்டின் மூலையில் பதுங்கிக் கொள்கிறாள் அவள். வெளியே வெடிச் சத்தம் காதைப் பிளக்க கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். மிஞ்சியிருக்கும் ஒரு உயிரையாவது காப்பாற்றியாக வேண்டும். கதவைத் திறந்து வெளியேற முடிவு செய்கிறாள். குழந்தையைத் துணியால் சுற்றி நெஞ்சோடு வைத்து மேலும் பிடியை இறுக்கிக் கொள்கிறாள்.

கண்கள் அரக்கர்களைத் தேட, இடது காலை அவசரமாய் வெளியே எடுத்து வைக்கப் போனவள் கால் தடுக்கி குழந்தையோடு கீழே விழுகிறாள். மூத்த மகனின் சிதைந்த உடம்பு அவளையும் பச்சிளங்குழந்தையும் அடிபடாமல் தாங்கிப் பிடிக்கிறது. வீறிட்டு அழுகிறாள். கதறுகிறாள். வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்க அவளுக்குத் தோன்றவில்லை. அதற்கு நேரமுமில்லை. தன் மகனை அள்ளி அணைக்க வாய்ப்புத் தராத மிருகக் கூட்டத்தைப் பெரிதாய்ச்  சபிக்கிறாள்.

    தூரத்தில் குண்டுமழை சராமாரியாகப் பெய்யத் தொடங்குகிறது. மண்டியிட்டு மேலே எழுகிறாள். அடுத்து நடக்கப் போவதைப் பற்றி அவளுக்குக் கொஞ்சமும் கவலையில்லை. குழந்தையைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அவளை ஆட்கொள்ள, ஓட்டத்தை வேகப்படுத்துகிறாள். மனத்தில் இருந்த வேகம் கால்களில் இல்லை. குழந்தையை ஈன்றெடுத்த ரணம் இன்னும் ஆறவில்லை. திணறிப் போகிறாள். ஆனால், துவண்டு போகவில்லை. அவளின் பிடி மேலும் இறுகுகிறது.

நம்பிக்கையை மனத்தில் சுமந்து கொண்டும் குழந்தையைக் கைகளில் சுமந்து கொண்டும் சின்னஞ்சிறு உயிருக்கு அடைக்கலம் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறாள். பசியால் வாடும் குழந்தையின் அழுகுரல் அவள் ஓட்டத்தைத் தடை செய்கிறது. மறைவாய் ஓரிடத்தில் ஒதுங்க நினைத்தவள் எண்ணத்தைக் கைவிடுகிறாள்.  வெடிச் சத்தம் நின்றபாடில்லை.

இன்னும் ஒரு சில அடிகள் ஓடினால் குழந்தையைக் காப்பாற்றி விடலாமென்ற அபரிமித நம்பிக்கை தோன்ற, ஓட்டத்தைத் தொடர்கிறாள். இன்னும் கொஞ்ச நேரம் போராடினால் காப்பாற்றி விடலாமென மூளை தீர்க்கமாய்ச் சொல்ல வைராக்கியத்தோடு ஓடுகிறாள். குழந்தையில் அழுகை அதிகரிக்கத் தொடங்குகிறது. இதோ இங்கே பதுங்கிக்கொள் எனப் புத்தி சொல்ல,  அடுத்த அடியை நம்பிக்கையோடு அருகிலிருந்த புதரை நோக்கி எடுத்து வைக்கிறாள்.

கண் சிமிட்டும் நேரத்தில் குண்டுகள் பின்பக்கமாய் உடலைத் துளைக்க குழந்தையோடு மண்ணில் சுருண்டு விழுகிறாள். அவள் நெஞ்சின் மேல் குழந்தை. குழந்தையின் அழுகுரல் இப்பொழுது கேட்கவில்லை.  குழந்தையின் பசி அடங்கத் தொடங்கி விட்டது.  குடிப்பது தாய்ப்பால் அல்ல தனை ஈன்றவளின் இரத்தமென அந்தப் பச்சிளங்குழந்தைக்குத் தெரியவா போகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...