வியாழன், 10 மார்ச், 2022

#குறுங்கதை 33 # பயணம்

 


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில்  ஏறியதோ, விமானப் பணிப்பெண்கள் வரவேற்றதோ, இருக்கையில் அமர்ந்து கொண்டதோ எல்லாமே முகிலனின் சுய நினைவுக்கு அப்பாற்பட்டே நடந்தன. சுற்றிலும் முகமறியா மனிதர்கள். தன் சோகத்தைச் சொல்லி அழ, இல்லாத சொந்தத்தைத் தேடினான். தொண்டை வரை வந்த அழுகையை அடக்க முயன்றான். கண்கள் பனித்தன. ஆண்கள் கண்ணீர் சிந்த உரிமையற்றவர்கள் என்று யாரோ சொல்லி வைத்த அடையாளத்தை உடைக்காமல் பார்த்துக் கொண்டான்.

காலை எட்டு மணிக்குப் புறப்பட்டால் பத்து மணிக்குள்ளாக கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்து விடலாம்.  பிறகு அங்கிருந்து என். யூ. சென்ட்ரல் போக வேண்டும். அங்குத் தனக்காகக் காத்திருக்கும் நண்பனின் காரில் ஏறிச் சென்றால் மதியம் மணி ஒன்றுக்கெல்லாம் வீட்டை அடைந்து விடலாம். ஒரு மணிக்கு அவன்ருமை அப்பாவின் இறுதி ஊர்வலம் தொடங்கி விடும்.

வீட்டை அடைந்தவுடன் முதலில் நிற்கதியாய் நிற்கும் அம்மாவைச் சமாதானப்படுத்த வேண்டும். தனக்காகவே வாழ்ந்த அப்பாவின் உயிரற்ற உடலை கட்டிப் பிடித்து அழ வேண்டும். பிறகு சோகத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு அப்பாவை முழு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா என்று அவனுக்குத் தெரியவில்லை.

குறித்த நேரத்தில் என். யூ. சென்ட்ரலை வந்தடைந்தான். அவன் கால்கள் அவன் கட்டளைக்காகக் காத்திராமல் விரைந்து நடை போட்டன. தனக்காகவும் தன் தாய்க்காகவும் உழைத்து உழைத்துத் தேய்ந்து போன அப்பாவின் முகம் அடிக்கடி மனக்கண்ணில் வந்து போனது. அப்பாவின் குழி விழுந்த கன்னம், ஒளியிழந்த கண்கள், மெலிந்த தேகம் அவனுக்குள் அடக்கி வைத்திருந்த துன்பத்தைத் தோண்டி வெளியே கொண்டு வந்தன. இதற்கு மேலும் கண்ணீர் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை. ஆறாய்ப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. சட்டையை இழுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். “அப்பா!” வாய் விட்டு அழுதான்.

இரு வருடங்களாக பார்க்கத் தவித்த அப்பாவின் முகத்தை இறுதியாய்ப் பார்க்க வேண்டும். அவர் கன்னத்தை வருடி நெற்றியில் முத்தமிட வேண்டும்.  “நான் உங்க மகன் வந்திருக்ககேன்பா” என்று கதறி அழ வேண்டும். மனம் தவியாய்த் தவித்தது.

இந்நேரம் நண்பன் வந்திருப்பான். மனத்தில் பாரம் தாங்காமல் நடை ஓட்டமாக மாறத் தொடங்கியது. சாலையோரத்திலேயே அமைந்துள்ள காவலர் அறையை நோக்கி ஓடினான்.  நண்பன் கண்ணில் தென்படவில்லை. வேறு எங்காவது காத்திருக்கிறானோ? அல்லது வர மறந்து போனானோ? தேவையற்ற கேள்விகள் மண்டையைக் குடையத் தொடங்கின. நண்பனின் அலைபேசியில் அழைத்துப் பார்த்தான். பதில் இல்லை. அடுத்து அம்மாவின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்தான். அவன் நினைத்தது போல் யாரும் எடுக்கவில்லை. நண்பனுக்காகக் காத்திருந்து காத்திருந்து கால்கள் கடுக்கத் தொடங்கின.

“அப்பா என்ன பாக்காம போயிடாதீங்கப்பா. இன்னும் கொஞ்ச நேரம்தான். நான் சீக்கிரம் வந்திடுவேன், ப்லீஸ்பா!”

அவன் வார்த்தைகள் மின்சுடலையில் தீ ஜூவலைக்குள் பயணித்துக்கொண்டிருக்கும் அப்பாவிற்குப் போய்ச் சேர்ந்திருக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...