நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்த வெடிச் சத்தம்
இப்பொழுதுதான் அடங்கத் தொடங்கியிருந்தது. தோட்டாக்களின்
பாய்ச்சல் குறைந்திருந்தது. இது நிரந்தமில்லை.
வீட்டுக்குள்ளிருந்த சின்னவன் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்க்க,
பெற்றவர்கள் பதறிப்போய் அவனை உள்ளே இழுத்துத் தூங்கச் சொல்கின்றனர். அவனும்
தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறான். சுற்றிலும் ஒரே நிசப்தம். அந்த நிசப்தமும்
அச்சமுறுத்துவதாகவே இருக்க, கண்களை இறுக்க மூடித் தூங்கப் பார்க்கிறாள் மனைவி. அவளை ஆதரவாய் அரவணைத்துக் கொள்கிறான் கணவன்.
வீட்டின் தரையில் ஒடுங்கிப் படுத்திருந்த அக்காளைத்
தட்டி எழுப்புகிறான் சின்னவன். வீட்டுக்கு வெளியே இருக்கும் வெள்ளைப் பந்து வேண்டுமென
அடம் பிடிக்கிறான். அவன் முதுகைத் தட்டிக்கொடுத்துக் கொண்டே சமாதானப்படுத்தித்
தூங்கச் சொல்கிறாள். தம்பியின் பிடிவாதம் கெஞ்சலாய் உருவெடுக்கிறது. அவன் கண்கள்
ஈரமாகின்றன. மீண்டும் அவனைச் சமாதானப்படுத்துகிறாள். அவன் எண்ணமெல்லாம் அந்தப்
பந்தின் மேலேயே இருக்க, தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுக்கிறான் தம்பி.
முயன்று முயன்று தோற்றுப் போனவன் அப்படியே உறங்கிப்
போகிறான். பரிதாபமாய்த் தூங்கும் தம்பியின் முகத்தை அவள் கூர்ந்து பார்க்கிறாள்.
வாடிய அவனது முகம் இவள் உள்ளத்தையும் வாடச் செய்கிறது. அவள் தலைமுடியைத் தன்
பிஞ்சு விரல்களால் கோதி விடுகிறாள். இன்னொரு மூலையில் தூங்கிக் கொண்டிருக்கும்
அப்பா அம்மாவை வெறுமையாய்ப் பார்க்கிறாள். ஒரு வாரமாய்த் தங்கள் இருவர் உயிரையும்
காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடியது அவள் கண்முன் நிழலாடுகிறது.
பயத்தில் உடல் நடுங்கத் தொடங்குகிறது.
மெதுவாய் எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள். இரண்டு
கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொள்கிறாள். நடுக்கம் கொஞ்சமாய்க் குறைய எழுந்து
நிற்கிறாள். நாளைய வாழ்வு நிரந்தரம் இல்லை. இன்று தன் தம்பி விரும்பிக் கேட்டதைக்
கொண்டு வந்து கொடுக்க மனம் துடிக்கிறது.
சந்தடியில்லாமல் கதவைத் திறக்கிறாள். மெதுவாய் வெளியே
செல்கிறாள். பயத்தில் இப்பொழுது உடல் அதிகமாய் நடுங்கத் தொடங்குகிறது. தம்பி கேட்ட
பந்தைத் தேடுகிறாள். பத்துப் பதினைந்து அடி தூரத்தில் பந்து இருப்பது தெரிய
வேகமாய் ஓடுகிறாள். தன் உயிர்த் தம்பிக்காக மேலும் உற்சாகத்தோடு ஓடுகிறாள். குனிந்து
பந்தை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்.
அதுவரை மயான அமைதியாய் இருந்த அவள் ஊரில் மீண்டும்
வெடிச் சத்தம். அரக்கர்களின்
வெறியாட்டம் ஆவேசமாய்த் தொடங்குகிறது. அலறியடித்துக் கொண்டு வீட்டை நோக்கி
ஓடுகிறாள். வெடிச் சத்தம் மிக அருகில் கேட்கிறது. உடல் அதிகமாய் நடுங்கத்
தொடங்குகிறது. பந்தை இறுக்கி அணைத்துக் கொள்கிறாள். தம்பியின் கைகளில் அதை ஒப்படைத்துவிட
அவள் மனம் துடிக்கிறது. அவள் தலைக்கு மேல்
போர் விமானம் கழுகுப் பார்வையுடன் வட்டமடிக்கிறது. இரை கிடைத்த மகிழ்ச்சியில்
குண்டு மழை பொழிகிறது. அவள் பிஞ்சு
உடல் குண்டுகளின் வீரியத்தைத் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறுகிறது. வெள்ளை நிறப்
பந்தோடு சிவப்பு நிறப் பந்து ஒன்றும் அவள் தம்பியின் கால்களுக்கு அருகில் உருண்டு போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக