“ப்பா... வாங்கப்பா இன்னைக்காவது வோக்கிங் போலாம்,” தூங்கிக் கொண்டிருந்த பாத்திபனைக் கையைப் பிடித்துத் தூக்க முயன்றான் சுட்டிப்பையன் கதிர்வேலன்.
“அப்பாவுக்கு ரொம்ப
அசதியாக இருக்குடா! வேணும்னா நாளைக்கு போலாமா?” சோம்பல்
முறித்துக்கொண்டு பேசியவனைக் குண்டு விழிகளை உருட்டி முறைத்துப் பார்த்தான் மகன்.
“நவீனோட அப்பா அம்மா
எல்லாம் வோக்கிங் போறாங்க. நீங்க ரொம்ப லேசிப்பா!” முகத்தை வேறு பக்கமாய்த்
திருப்பிக் கொண்டான்.
மகனின்
செல்லக் கோபம் சிரிப்பை வரவழைக்க மெத்தை மேல் எழுந்து உட்கார்ந்து கொண்டான். விறைத்துக்
கொண்டிருந்த மகனை அருகில் இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
திமிறிப்பார்த்தான் மகன். அப்பாவின்
கைக்குள் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.
“ப்லீஸ்பா...
வோக்கிங் போலாம்... ப்லீஸ்!” கழுத்தை
வளைத்துத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கேட்டான். முகத்தில் ஆயிரமாயிரம் எதிர்பார்புகள்.
கழுத்து வலித்திருக்க வேண்டும். உடனே திரும்பிக் கொண்டான். செல்ல மகனின்
கெஞ்சல் அப்பாவின் சோம்பல்தனத்தை வென்றது.
முகத்தை
அலம்பி, உடையை மாற்றிக் கொண்டு கிளம்புவதற்கு முன் தனக்காக வாசற்படியில் காத்திருந்த
மகனை ஆச்சரியமாய்ப் பார்த்தான். அருகில் சென்று அவன் தலை முடியைக் கோதி விட்டான்.
தன் பிறந்தநாளுக்கு அம்மா வாங்கிக்கொடுத்த
விளையாட்டுக் காலணிகளை அணிந்துகொண்டான். காலில் அணிந்து கொண்டாலும் மனத்தில் ஏதோ
ஓர் அற்புத உணர்வு தோன்றி மறைந்தது.
மகனின்
கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். கைகளை உடனே உதறிவிட்டுத் தன் அப்பாவை
முந்திக்கொண்டு நடக்கத் தொடங்கினான் கதிர்வேலன். அவன் துள்ளல் நடையை இரசித்தவனாய்
அவனைப் பின்தொடர்ந்தான் பார்த்திபன்.
எதிரே முகமெல்லாம்
புன்னகையுடன் ஓர் அழகிய குடும்பம் தரிசனம் தந்தது. கணவன், மனைவி, மகன், மகளென இறைவன்
கொடுத்த உறவுகளோடு அன்றைய காலைப் பொழுதைக் கழிக்க அவர்கள் எடுத்த முடிவை அவனால்
பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சின்னவன் கைகளில் அழகிய வெள்ளை நாய்க்குட்டி. அனைவரது
செல்லமாய் இருக்க வேண்டும். கைமாறிக் கொண்டே இருந்தது. அதற்கு மூச்சு திணறியதோ என்னவோ.
கைகளிலிருந்து எகிறிக் குதித்துத் தப்பித்தோம் பிழைத்தோமென முன்னால் ஓடியது. லொள்
லொள் எனச் சன்னமாகக் குரைக்கத் தொடங்கியது. பிள்ளைகள் விடுவதாய் இல்லை. அதை
வளைத்துப் பிடித்து மீண்டும் பாசமழையில் நனையச் செய்தனர்.
அவர்களுக்குப்
பின்னால் சக்கர நாற்காலியில் வயது முதிர்ந்த அம்மா. எப்படியும் எழுபதை
நெருக்கியிருக்க வேண்டும். வேற்று இனத்துப் பெண்ணொருவள் சக்கர நாற்காலியைத்
தள்ளிக் கொண்டு வந்தாள். அவள் கவனம் போவோர் வருவோர் மீதிருந்தது. ஆனால், எழுபது வயது அம்மாவின் பார்வை நாயோடு முன்னால் சென்றுகொண்டிருந்த தன் குடும்பத்தின்
மேல் இருந்தது. கதிர்வேலனின் நடை திடீரென தடைப்பட்டது.
தன் அப்பாவைத் திரும்பிப் பார்த்தான். நொடிப்பொழுதில் ஓடி வந்து அவன் அப்பாவின் கைகளைப் இறுக்கமாய்ப்
பிடித்துக் கொண்டான். அவன் பார்வை அந்த
வயோதிக அம்மாவின்மேல் முழுமையாய்ப் பதிந்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக