பிணக்காடாய்க் காட்சி தரும் ஊரில் தன்னைப் பெற்றவர்களைத் தேடிக் களைத்துப் போனதுதான் மிச்சம். சிதறிய உடல்களிடையே அவர்களைத் தேடுவது சாத்தியமா என்ன! ஒரு பக்கம் குண்டுகளால் தாக்கப்பட்டு உருவிழந்து கிடக்கும் வீடுகள். மறுபக்கம் உருகுலைந்து போன மனிதச் சதைக் குவியல்கள். அவற்றின் வாடை மூச்சடைக்கச் செய்கிறது. அவனுக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது.
அடுத்த கணம் என்ன செய்தென்று
தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவனுக்கு ஆறுதல்
சொல்ல யாருக்கும் நேரம் இல்லை, தெம்பும் இல்லை. மனத்தில்
விரக்தி குடிகொள்ள நிலை குலைந்து போகிறான். ஓவெனக் கதறத் தொடங்குகிறான். கல்லையும் கரையச் செய்யும் அந்த அழுகை அன்று ஏனோ
யாரையும் ஒன்றும் செய்து விடவில்லை. இன்னும் எத்தனை நாள் இந்த அரக்கர்களின் வேட்டை
தொடரும் எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்து
நிற்பது எந்த வகையில் நியாயம்? உறவுகளில் உயிரற்ற உடல்களைப் பார்த்துப் பார்த்து மனம் மருத்துப்
போய்விட்ட பிறகு மற்றவர்களின் கண்ணீர் அவர்களை என்ன செய்து விடும்?
வீட்டிற்குள் நடக்கப்
பழகிக்கொண்டிருக்கும் தம்பியின் அழுகுரல்
வீதி வரை கேட்கிறது. தேற்றும் வகை தெரியாமல் தவித்துப் போகிறான். தம்பியின் அழுகுரல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் தேடலும் நீண்டு கொண்டே போகிறது. பிணக்குவியல்களைத்
தேடிப் தேடிப் புரட்டுகிறான். கையெல்லாம் இரத்தம். பிசிபிசுத்த கைகளைச் சட்டையில்
துடைத்துக் கொள்கிறாள். பின்வாங்கி விடாதே, தொடர்ந்து
தேடு என மனம் கட்டளையிட அதற்கு அடிபணிகிறான். கண்கள் ஈரமாவதைத் தடுக்க
முடியவில்லை.
நேரம் அதிவேகமாய் நகரத்
தொடங்குகிறது. தம்பியின் நினைவு வர வீட்டை நோக்கிப் பதற்றத்துடன் ஓடுகிறான்.
காணவில்லை. கூப்பிட்டுப் பார்க்கிறான். பதில் இல்லை. பக்கத்து வீட்டினுள் அனுமதியின்றி
புகுந்து பார்க்கிறான். சிவப்புச் சோற்றைப் பிஞ்சு விரல்களால் அள்ளி வாயில் திணித்துக்
கொண்டிருக்கிறான் தம்பி. பெரியவன் வார்த்தையின்றி மௌனித்து நிற்கிறான்.
இனி பெற்றவர்களைத் தேடுவது
மட்டும் உன் வேலை இல்லையெனப் புத்தி சொல்கிறது. தம்பியைத் தூக்கிக் கொண்டு
வாசலில்லாத வீட்டினுள் நுழைகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக