திங்கள், 14 மார்ச், 2022

#குறுங்கதை 37 # தவம்

 

காலையிலேயே பூனைகளின் தொல்லையைத் தாங்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டான் சன்னாசி. அதுவும் இந்த இரண்டு நாட்களாய் வாசலிலே தவம் கிடக்கும் குட்டிப்பூனையின் மியாவ் மியாவ் சத்தம் வெறுப்பைத் தந்தது. கதவைத் திறந்தவன் கால்களை உரசிக்கொண்டிருந்த குட்டிப்பூனையைப் பலமாய் ஓர் எத்து விட்டான். அது சுருண்டு போய் மூலையில்  விழுந்தது.

வெளியில் செல்ல காலணிகளை அணியத் தொடங்கியவன் காலருகில் மீண்டும் அதே குட்டிப்பூனை. கண்கள் கனல் கக்க அதன் கழுத்தின் பின் பகுதியை இரண்டு விரல்களால் பிடித்துத் தூக்கி வெளியே போட்டான். அது அடங்குவதாய் இல்லை. மீண்டும் வாசலில் வந்து நின்று கொண்டது. நேற்று வீட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்திய தன் தாயைப் பார்க்கச் செல்வதா அல்லது இதனோடு போராடிக் கொண்டிருப்பதா? வெறுப்பின் உச்சத்தில் இருந்தவன்  காரை நோக்கி விரைந்து நடைபோட்டான்.

      ஞாயிற்றுக்கிழமையில்கூட நிம்மதியாய் ஓய்வெடுக்க முடியாத வாழ்க்கையை எண்ணி நொந்து கொண்டான். ஆறு நாட்கள் ஒன்பது மணி நேர வேலை. முடித்து வீட்டிற்கு வந்தவுடன் டியூசன், கராத்தே வகுப்புகள் எனப் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு அலைய வேண்டும். யோசித்துப் பார்த்தால் சலிப்புதான் மிஞ்சியது. இருக்கும் ஒரு நாளில் அம்மாவின் நச்சரிப்பு. ஒரு வாரம் போய்ப் பார்க்காவிட்டால், சினிமாப் பட பாணியில் வகை வகையாய் வசனங்கள் அவன் காதுகளை ரணப்படுத்தும்.

      கார் கதவைத் திறந்து உள்ளே நுழையப் போனவன் காலருகில் பிடிவாதம் பிடித்த அதே குட்டிப் பூனை. கொஞ்சம் தவறியிருந்தால் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டிருக்கும். வேறு வழியின்றி காரை விட்டுக் கீழே இறங்கியவன் அதை லாவகமாய்க் கைகளில் தூக்கினான்.  முரண்டு பிடித்தது. வீட்டின்  ஓரத்தில்  கொண்டு விட்டான். இம்முறை அது அவனைத் தேடி வரவில்லை. அவன் கால்களில் உரசி நிற்க விரும்பவில்லை. மியாவ் மியாவ் சத்ததுடன் மெதுவாய் நடந்து சென்று அங்கிருந்த பூச்சாடியின் பின்னால் போய் நின்றுகொண்டது.

      தன்னைத் திடீரென அலட்சியப்படுத்திய பூனை மீது சன்னாசிக்குக் கோபம் தாளவில்லை. அதன் அருகே நடந்து சென்றான். பூச்சாடியின் பின்னால் தாய்ப்பூனை மல்லாந்து படுத்துக் கிடந்தது. குட்டிப்பூனை தன் சிறிய நாக்கால் தாய்ப்பூனையின் உடலை நக்கத் தொடங்கியது. அதன் மேல் சாய்ந்து கொண்டது. இரண்டையும் கால்களால் உதைத்து விரட்டப் பார்த்தான் சன்னாசி. குட்டிப்பூனைக்குக் கட்டாயம் வலித்திருக்க வேண்டும். மியாவ் என அலறியது.  தாய்ப்பூனை மட்டும் அசைவதாய் இல்லை. குட்டிப்பூனையும் தாயை விட்டு நகர்வதாய் இல்லை. சன்னாசியின் மனம் கனக்கத் தொடங்கியது. அதே நேரம் அவன் அலைபேசி அலறத் தொடங்கியது.

“டேய் சன்னாசி, ஏன்டா இன்னும் வரல!” மறுமுனையில் தாயின் பரிதாபக் குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...