புதன், 16 மார்ச், 2022

குறுங்கதை 039 #சரியா தவறா?

 

ஜாலியாய் விசில் அடித்துக் கொண்டே பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் முகிலன்.  நாளை அவன் வாழ்வின் புதிய  அத்தியாயத்தின் தொடக்கம். மனமெல்லாம் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. வண்ண வண்ணக் கனவுகள் கண்ணயராமலேயே வந்து போயின.  அடுத்த சில நொடிகளில் அலைபேசியின் அலறல் அவன் வண்ணக் கனவுகளுக்குத் தடையாய் வர, வேண்டா வெறுப்பாய் அலைபேசியை எடுத்தான்.

புதிய எண் என்பதால் பதிலளிக்க அவன் விருப்பம் காட்டவில்லை. மீண்டும் துணிகளை அடுக்கத் தொடங்கினான். தன் முடிவைப் பற்றி இன்று இரவு குடும்பத்தாரின் பேசிவிட முடிவெடுத்து விட்டான். யாரைப் பற்றியும் அவன் கவலைப்படுவதாய் இல்லை. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன்னால் சமாளித்து விட முடியும் என்பதில் முழு நம்பிக்கையோடு இருந்தான்.

மீண்டும் அலைபேசி அலறத் தொடங்கியது. சிந்தனை தடைப்பட்டது. அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அதே எண். இந்தத் தொல்லை விடாது கருப்பு என்பது போல் நீடிக்குமென ஊகித்துக் கொண்டான். வேறு வழியின்றி பதிலளிக்க முடிவு செய்தான்.

“ஹலோ...வணக்கம். ”

“வணக்கம் தம்பி. நான் சுந்தரேசன் பேசறேன்!”

“சோர்ரி, நீங்க யாருன்னு சரியா தெரியல!

“நான்தான் சாலினியோட அப்பா! உங்க கேர்ல் பிரண்ட் சாலினி. இப்ப தெரியுதுங்களா?”

“ஓ... நீங்களா அங்கள். சொல்லுங்க அங்கள்... என்ன விசயம்?”

மறுமுனையில் மௌனம் நிலவ அவனே பேசத் தொடங்கினான்.

“அங்கள் நீங்க ஏன் போன் பண்ணீங்கன்னு எனக்குத் தெரியும். மன்னிச்சிருங்க அங்கள். நீங்க என்ன சொன்னாலும் எங்களால முடிவ மாத்திக்க முடியாது!”

“தம்பி நாங்க ரொம்ப ரொம்ப சாதாரண குடும்பத்த சேர்ந்தவங்க. உங்கள மாதிரி யோசிக்கிற தைரியமெல்லாம் எங்களுக்கு இல்ல. மான அவமானத்துக்குப் பயந்து வாழ்றவங்க நாங்க. ப்லீஸ் தம்பீ! உங்க முடிவ மாத்திக்கீங்க. என் பொண்ண விட்டிடுங்க தம்பீ!” குரலில் நடுக்கம் தெரிந்தது.

முகிலன் அசருவதாய் இல்லை. கல் நெஞ்சக்காரன் அல்லவா  அவன்.

“அங்கள் நாங்க எடுத்த முடிவினால யாருக்கும் நஷ்டம் வரப்போறதில்ல. பார்க்கப் போனா எல்லாருக்கும் லாபம்தான். கல்யாணச் செலவு, விருந்து செலவு எதுவும் கெடையாது. முக்கியமா வரதட்சண கெடையாது. தெரியாமத்தான் கேக்கிறேன்... நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுல உங்களுக்கு என்ன பிரச்சன அங்கள்? இன்னைக்கு எத்தனையோ பேரு இப்படித்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. விருப்பம்ன்னா தொடர்ந்து ஒன்னா இருப்போம். பிடிக்கலன்னா பிரிஞ்சிடுவோம். அவ்வளவுதான்!” ஏற்கனவே மனப்பாடம் செய்து விட்டதால் வார்த்தைகள் அருவியாய்க் கொட்டின.

“தம்பீ... கெஞ்சி கேட்டுக்கிறேன். இந்த முடிவ கைவிட்டுடுங்க... ப்லீஸ் தம்பீ! வேணும்னா என் பொண்ண உங்களுக்கே கல்யாணம் செஞ்சி கொடுத்திடுறேன்!”

அதற்கு மேல் பேச விரும்பாதவனாய் அழைப்பைத் துண்டித்தான். சுந்தரேசனின் பழமைவாதத்தை எண்ணி நொந்து கொண்டான்.

“தெங்கஸ் அண்ணே!”

திடுக்கிட்டுப் போனான் முகிலன். பின்னால் திரும்பிப் பார்த்தான். தங்கை அகிலா கதவில் சாய்ந்துகொண்டிருந்தாள்.

“அண்ணே... உன் பிரச்சனையில என் பிரச்சனைக்கும் முடிவு கெடைச்சிருச்சி. இத நான் எதிர்பார்க்கவே இல்ல. நானும் கிஷோரும் இதத்தான் யோசிச்சு வச்சோம். ஆனா, எப்படி உங்ககிட்ட எல்லாம் பேசறதுன்னு தெரியாம பயந்துகிட்டு இருந்தோம்! இப்ப அந்தப் பயம் போன இடம் தெரியலண்ணே!” ஓடி வந்து அண்ணனைப் பூரிப்போடு கட்டிப் பிடித்துக் கொண்டாள் அகிலா.

“இதச் சொல்ல உனக்கு வெக்கமா இல்ல!” அவளைப் பலமாய்த் தள்ளி விட்டான்.

அவள் நிலை தடுமாறிப் போனாள். குழப்பத்துடன் மீண்டும் அவனை நெருங்கி வந்தாள். பலத்த அறை ஒன்றைப் பரிசாய்க் கொடுத்தான். அவள் சுருண்டு தரையில் விழுந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...