நண்பன்
அனுப்பிய புலனச் செய்தியைப் பார்த்ததிலிருந்து வரதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இளம்பெண்கள் சிலர் பண்ணும் அட்டூழியங்களைப் பார்க்கப் பார்க்க அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.
புகை பிடிப்பதில் வல்லவர்களாகி
விட்டார்கள். மதுவைத் தைரியமாகப் பொது இடத்தில் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். திக்
தோக்கில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட அசிங்கம் தாங்கள் செய்கின்ற
அட்டகாசங்களைக் காணொலிகளாக முகநூலில்
போட்டு பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள்.
காலத்தை
நொந்துகொண்டான் வரதன். இவர்களால் இந்தியர்களுக்கே அவமானம். காரணமேயில்லாமல் தலையில்
அடித்துக் கொண்டான். தன் உடன்பிறப்பாக இருந்திருந்தால் நடப்பதே வேறு, கண்ட துண்டமாக வெட்டிப் போட்டிருப்பான். அத்துணைக் கோபம் அவனுக்கு.
முகநூலிலும் அந்தக் காணொலி வைரலாகிக் கொண்டிருந்தது. அதை
மீண்டும் வெறுப்போடு திறந்து பார்த்தான். கண்களில் தீ ஜுவாலைகள்.
“மிகவும் வேதனையாக உள்ளது. கொஞ்சமாவது பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்.
கலாச்சாரத்திற்கு மதிப்புக் கொடுங்கள். இனத்திற்கு அவமானத்தைத் தேடித் தராதீர்கள்.
திருந்துங்கள்! திருந்துங்கள்! திருந்துங்கள்” கருத்துகளைப் பதிவு செய்தான். இருந்தாலும், அவன் கோபம் அடங்குவதாய் இல்லை. வேறு ஏதாவது செய்தாக வேண்டுமென மனம்
துடித்தது. கலாச்சாரத்திற்கு எதிராக
நடந்து கொள்ளும் பெண்கள்மீது அந்நியன் படம் விக்ரம் போல் பயங்கரமான தண்டனை கொடுக்க
வேண்டும். கற்பனை செய்து பார்த்துக்
கொண்டான். பரம திருப்தியாக இருந்தது.
தமிழனென்று சொல்லிக் கொள்ளவே அவனுக்கு அவமானமாய்
இருந்தது. மற்ற இனத்தவர்கள் இதைப் பார்த்தால் நம் இனத்தை இழிவாக நினைக்க
மாட்டார்களா? பிள்ளைகளைப் பெற்று இப்படிப் பொறுப்பில்லாமல் நடக்க
விடும் பெற்றோர்கள் மீதும் அவன் கோபம் பாயத் தொடங்கியது. மீண்டும் தலையில்
அடித்துக் கொண்டான். அவனால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. அறையில் குறுக்கும்
நெடுக்கும் நடந்தான். அவன் மனத்திற்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
தன் பங்குக்கு அந்தக் காணொலியை
நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தான். புலனக்குழு,
முகநூல் என அனைத்திலும் பதிவு செய்தான் “கலிகாலம்” என்ற வார்த்தையோடு. தன் கோபம் ஓரளவு அடங்குவதாய் உணர்ந்தான். மெத்தை
மேல் உட்கார்ந்து கொண்டான். அலைபேசி அலறியது. நெருங்கிய நண்பன் சத்தியாவின்
அழைப்பு அது.
“மச்சான்,
சீக்கிரம் வாடா. இன்னைக்கு நவீனோட பேர்த்டேய், மறந்திட்டீயா? இன்னைக்குப்
போத்தல பூகா பண்றோம், என்ஜோய் பண்றோம். படத்த பிடிக்கிறோம்,
பேஸ்புக்குல ஏத்துறோம். மாஸ் காட்டுறோம். ஓகேவா!”
செய்தி
கிடைத்த அடுத்த நொடி சிட்டாய்ப் பறந்து போனான் வரதன். கலிகாலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக