இங்கு
வந்து இன்றோடு நான்கு நாட்களாகி விட்டன.
முதல் நாள் அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப் போக செல்வநாயகி மேடம் பயந்துதான்
போனார். யார் யாரெல்லாமோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அனைத்தும் செவிக்கு
வெளியே காற்றோடு காற்றாய்க் கலந்தனவே தவிர எதுவும் என் சிந்தைக்குள் புகவில்லை. பிரிவு
எத்துணைக் கொடியது என்று அன்றுதான்
முழுமையாக உணர்ந்து கொண்டேன்.
பெற்ற மகனிடம்
ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வந்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி இன்றும் என்னை வாட்டி வதைக்கிறது. அவனிடம்
மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். ஆனால், எப்படி
என்றுதான் தெரியவில்லை. பாவம் அவன், அப்பாவி. என்னைக் காணாமல் எப்படியெல்லாம் துடித்துப் போயிருப்பான். எங்கெல்லாம்
தேடியிருப்பான்?
அவன் திருமண
வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், நான் வீட்டிற்கு வந்த மருமகளிடம் வன்மம் கொண்டேன். அன்பைப் பங்கு போட்டு விட்டாள் எனக் குற்றம்
சாட்டினேன். எத்தனை நாள் அவள் மனம் நொந்து
அழுதிருப்பாள். வெளியே சொல்ல முடியாமல் தவித்திருப்பாள். தெரிந்தே வினை விதைத்து
விட்டேன். வினையை அறுப்பதுதானே நியாயம்.
ஒரே ஒரு
வருத்தம் மட்டும்தான். என் மகன் என்னை எப்படியாவது தேடி வந்திருக்கலாம். மன்னித்து
வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். கட்டாயம் வீம்புக்காக முதலில் மறுத்திருப்பேன்.
முறுக்கிக் கொண்டு நின்றிருப்பேன். கண்டபடி பேசியிருப்பேன். ஆனால், இறுதியில் பிடித்தும் பிக்காததுபோல் அவர்களோடு சேர்ந்திருப்பேன்.
பிரிவைச் சந்திக்க முடியாத கோழை நான் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
இதோ
இன்னும் சில நொடிகளில் இந்த மூச்சு எனக்குச் சொந்தமில்லாமல் போகப் போகிறது. ஆதரவற்றோர்
இல்ல உறவுகள் பிரிவால் வாடப் போகின்றன. செல்வநாயகி மேடம் கண்ணீர் வடிக்கப்
போகிறார். எனக்கு மூச்சடைக்கிறது. மெல்ல
மெல்ல உடல் லேசாகிறது. ஏதோ வெந்நிற ஒளி என்னை ஆட்கொள்கிறது. மகனைத் தேடுகிறேன். இப்பொழுதாவது
அவனிடம் சொல்லிவிட்டுப் போக மனம் ஏங்குகிறது. தூரத்தில் என் மகன். எனக்குக்
கையசைக்கிறான். நானும் கையை வேகமாய் அசைக்கிறேன்.
“ம்மா... தயவு செஞ்சு கைய
கால ஆட்டாம இருங்க. இப்படிச் செஞ்சிங்கன்னா
எம்.ஆர். ஆய். ஸ்கேன் எப்படிச்
செய்யிறது? ப்லீஸ்
கோஓபெரட் பண்ணுங்க!” சலித்துக் கொண்டார்
மருத்துவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக