“சார்... நீங்கள் சொல்றது கொஞ்சங்கூட
நம்பற மாதிரி இல்ல. என் தம்பி அப்படியெல்லாம் செய்றவன் கிடையாது! அவன் ஒழுங்கா
ஸ்கூலுக்குப் போறான் வறான். எல்லா கிலாஸுக்கும் நுழையிறான். இதுவரைக்கும்
ஸ்கூலுக்கு ஒரு நாளுகூட லீவு போட்டதில்ல! சும்மா பழி போடாதீங்க சார்!” மூச்சு
விடாமல் பேசினான் காளி என்கிற காளியப்பன்.
“இங்க பாருங்க மிஸ்டர் காளியப்பன்.
உங்க தம்பி மேல பலி போடுற எண்ணமெல்லாம்
எனக்கில்ல. ஒரு மாசமா உங்க தம்பி பள்ளிக்கு ஒழுங்கா வருவது இல்ல. சேர்க்க
சரியில்ல. ரொம்ப தப்பு பண்றான். அவன் நல்லதுக்காகச் சொல்றேன். கண்டிக்க வேண்டிய
நேரத்தில கண்டிச்சாதான் அவன் வாழ்க்க நல்லாயிருக்கும். அப்புறம் உங்க விருப்பம்!”
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானனமாய்ப் பேசினார் ஆசிரியர் ரமணன்.
“சார்,
ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு அவன பிடிக்காது. அது எனக்கு நல்லா தெரியும்.
அதனாலதான் எப்ப பாத்தாலும் அவன் மேல கொற கண்டுபிடிக்கிறீங்க. மத்த வாத்தியாருங்க
யாரும் அவனப் பத்தி ஒன்னும் சொன்னதில்ல!” காட்டமாய் வந்தன காளியின் வார்த்தைகள்.
“இதோ பாருங்க
மிஸ்டர் காளி. உங்க தம்பிக்கு படிவம் ஒன்னுலேர்ந்து நான்தான் தமிழ் சொல்லிக் கொடுத்துகிட்டு வரேன். இந்தப்
பள்ளியில டிசிப்பிலின் வாத்தியாராவும் இருக்கேன்.
அவன் மேல எனக்கு எந்தக் கோபமோ
காழ்ப்புணர்ச்சியோ இல்ல. அவன் நல்லா படிக்கக்கூடிய பையன். அவன் நல்லா
படிக்கனும், அதுதான் என் ஆச. கொஞ்சம் அக்கறை காட்டினீங்கன்னா, அடுத்த வருஷம் அவன் எஸ். பி. எம்.ல நல்லா பாஸ்
பண்ணுவான்! தமிழ்ப்பாடத்தில மட்டுமில்ல.... எல்லா பாடத்திலேயும் அக்கறை காட்டனும்!”
எதிர்பார்ப்பு அவர் வார்த்தைகளில்
தாண்டவமாடின.
“பரவாலீங்க சார், இனிமே அவன் தமிழ் எடுக்க மாட்டான். உங்க
கிலாஸுக்கு வர மாட்டான். அவன தொந்தரவு பண்ணாதீங்க!” நாற்காலியை விட்டு அவசரமாக
எழுந்தான். ஆசிரியரின் முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்கு விருப்பமில்லை.
“நில்லுங்க
மிஸ்டர் காளி. உங்களுக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன். வாங்கிக்கீங்க!”
“என்ன சார்.
என்னப் பாத்தா கிண்டலா இருக்கா? சீண்டிப் பாக்கிறீங்களா? நான்
ரொம்ப கோபக்காரன் சார். வாத்தியாருன்னு பொறுமையா பேசிகிட்டு இருக்கேன்!”
வார்த்தைகள் அனலாய்ச் சுட்டன.
தன் கையிலிருந்த பொட்டலத்தை நீட்டினார் ஆசிரியர். வாங்க மறுத்தான் காளி.
அவன் கைகளில் அந்தப் பொட்டலத்தைத் திணித்தார். வேறு வழியின்றி வாங்கிக் கொண்டான்.
பிரித்துப் பார்த்தான். அவனுடைய கைப்பேசி அவனைப் பார்த்துச் சிரித்தது. காளியின்
புகைப்படத்தைச் சட்டையாய் போட்டுக் கொண்ட
கைப்பேசி. அவன் ஆசை மனைவியின் அன்பர் தினப் பரிசு. ஒரே வாரத்தில் காணாமல் போனது.
ஆனால், அது எப்படி இங்கே? ஆசிரியரைப் பார்த்தான். அவன் பார்வையில் ஆயிரம் குழப்பங்கள்.
புரிந்து கொண்டார் ஆசிரியர் ரமணன்.
“ஓன் பண்ணி
பாருங்க. நான் சொல்ல நினைக்கிறது உங்களுக்கு நல்லாவே புரியும்,” மறுபேச்சு
பேசவில்லை அவன். திறந்து பார்த்தான். தலை சுற்றிப் போனது. ஒன்றும் பேசாமல் அந்த
இடத்தை விட்டு அகன்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக