அன்பு மகளின் பட்டமளிப்பு விழா. நான்கு ஆண்டு
உழைப்பிற்கான பலனைக் கண்னிறைய கண்டு மகிழும் நாள். காலையிலேயே குடும்ப உறவுகளோடு
பல்கலைக்கழக வளாகத்தை அடைந்து விட்டதில் மகிழ்ச்சி. மகளுக்குப் பளபளக்கும் தங்கச்
சங்கிலியைப் பரிசாக அணிவிக்கும் நேரத்திற்காக ஆர்வமாய்க் காத்திருந்தேன். வீட்டின்
முதல் பட்டதாரி. கௌரவப்படுத்துவது எங்கள் கடமையல்லவா!
எங்களுக்கு முன்னே கூட்டம் கூடத் தொடங்க்யிருந்தது.
மனமெல்லாம் விவரிக்க முடியாத உணர்வு பரவிக் கிடந்தது. மகிழ்ச்சியா, பூரிப்பா,
பெருமிதமா என அறுதியிட்டுக் கூற முடியவில்லை. கணவரின் முகத்தில் ஆயிரம் கோடி சூரிய
பிரகாசம். தாத்தாவின் செல்லம் என்பதால் அப்பாவோடு தாத்தாவும் மண்டபத்திற்குள்
சென்றுவிட நான் வெளியே பிள்ளைகளோடு அமர்ந்துகொண்டேன்.
பிள்ளைகள் கைப்பேசியில் மூழ்கிப் போக, நான்
என்னைச் சுற்றியிருந்த கூட்டத்தின் ஆரவாரத்தில் திளைத்துப் போனேன். எத்துணை
மகிழ்ச்சி! எத்துணை ஆர்ப்பரிப்பு. பிள்ளைகளின் வெற்றியைக் கொண்டாட ஏக்கமாய்
காத்திருக்கும் பார்த்தறியா முகங்கள்! இந்த ஒரு நாளுக்காக, இந்த
ஒரு வெற்றிக்காக இந்தப் பிள்ளைகள் எப்பேர்ப்பட்ட தியாகங்களைச் செய்திருக்க
வேண்டும்! பெற்றோர்கள் எவ்வளவு இழந்திருக்க வேண்டும்! மனம் எங்கெங்கோ அலைந்து
விட்டு வர, நீண்ட பெருமூச்சு அழைப்பின்றி வந்து போனது.
“சுசி... நீ இங்கயே இருக்கிறீயா? நான்
போயி மகளுக்குப் பூவு வாங்கிட்டு வரேன்!” பக்கத்திலிருந்து குரல் வர திரும்பிப்
பார்த்தேன். மெலிந்த தேகம். ஒட்டிய முகம். மிகச் சாதாரணமான நீல நிறச் சட்டை,
கருப்புக் காற்சட்டை, காலில் கருப்பு நிற சிலிப்பர். காட்டன் சேலை அணிந்திருந்த
அவர் மனைவியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைத் தாண்டியிருக்க வேண்டும்.
“வெல கூட உள்ள பூவ வாங்கிற போறீங்க. பாத்து வாங்கிட்டு
வாங்க. பஸ்ஸுக்கு வேற காசு வேணும்!” நினைவுறுத்தி அனுப்பினார் அன்பு மனைவி.
பெரியவர் தலையைப் பலமாய் ஆட்டிக் கொண்டார். ஏனோ அவர்களும் உள்ளே போகாமல் வெளியே
காத்திருந்தனர். என் பார்வை அவர்களை விட்டு அகல மறுத்தது. பெரியவர் அங்கிருந்த
கடைகளை நோக்கி நடைபோட ஆரம்பிக்க, என் மனமும் அவரைப் பின் தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில்
பார்வையிலிருந்து மறைந்து போனார்.
அவர் மனைவியின் நினைவு வந்தது. பட்டெனத் திரும்பிப்
பார்த்தேன். உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. கணவன் சென்ற வழிமேல் அவர் பார்வை
ஆழமாய்ப் பதிந்திருந்தது. அவரது மிரட்சி கண்களில் தெரிந்தது. பத்து பதினைந்து
நிமிடங்களில் கணவர் முகம் காட்ட, மனைவி உற்சாகமானார். தன்னை அரண் அமைத்துப் பாதுகாக்கும்
காவலன் வந்துவிட்ட திருப்தி முகத்தில் தெரிந்தது. என் முகமும் சேர்ந்தே மலர்ந்தது.
வந்தவர் மனைவியின் பக்கத்தில் மெதுவாய் அமர்ந்துகொண்டார்.
“எல்லா
பூவும் ரொம்ப வெல சுசி. அறுபது வெள்ளி பூதான் கெடைச்சது. வாங்கிட்டு வந்திட்டேன்.
இந்தப் பூ முக்கியம் இல்ல. அடுத்து நம்ம பொண்ண மாஸ்டர்ஸ் படிக்க வைக்கனும். அதான்
ரொம்ப முக்கியம்,” சொல்லிவிட்டு பார்வையைக் கூடி நின்ற கூட்டத்தின் மேல்
ஓட விட்டார் பெரியவர்.
“பணத்துக்கு
எங்க போறது?” வருத்தமும் கவலையும் மனைவியின் குரலில் இழையோடின.
“என்னோட
இ. பி. எப். இருக்குல்ல. அத வச்சு படிக்க வைக்கலாம். பிள்ள ரொம்ப ஆசப்படுது, பாவம்”
கணவனையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கண்ணீர்த்துளிகள்
கன்னங்களை நனைத்தன. என் மனம் பாரமாவதை
உணர்ந்தேன். கையிலிருந்த தங்கச் சங்கிலியைப் பார்த்தேன். முன்பிருந்த பளபளப்பு
இப்பொழுது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக