மருமகளின் உபசரிப்பில் ஆடித்தான் போனாள் மருதம்மாள். கணவனின் இறப்பிற்குப் பின் ஏனோ தெரியவில்லை மருமகளின் நடவடிக்கைகளில் இமாலய மாற்றம். இதுவரை தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதவள், இப்பொழுதெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறாள். எல்லா வேலைகளையும் தலைமேல் போட்டுக் கொண்டு செய்கிறாள். சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அவள் தனிமைப்படுத்திக்கொள்ளும் வேளைகளில் தேடி வந்து பேச்சுக் கொடுக்கிறாள். மருமகளின் திடீர்ப் பாசத்தின் பின்னால் மறைந்திருக்கக் கூடிய வஞ்சகத்தை அவளால் ஊகிக்க முடியாமல் எல்லாம் இல்லை.
தன்னைச் சுற்றிப்
பின்னப்படும் வலையில் சிக்கி விடக் கூடாது. சுதாகரிக்கொள்ள வேண்டும். தனக்குத் தானே நினைவூட்டிக் கொண்டாள் மருதம்மாள்.
தன் மகள் கவிதாவின் காதில் இதைப் போட்டுக் வைக்க வேண்டுமெனத் தீர்மானித்துக்
கொண்டாள். காலையிலேயே எழுந்ததும் முதல் வேலையாக அலைபேசியில் அழைத்துப்
பேசியவளுக்கு, மகள் சொன்ன வார்த்தைகள் பேரிடியாய் வந்து விழுந்தன.
தன் மருமகள் தன் சொத்துக்கு அடி போடுவதை அவளால்
ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து தப்பிப்பது சாமானியமான காரியமல்ல
என்பது மருதம்மாளுக்குப் பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
மகனிடமும் நாசுக்காகப் பேசிவிட வேண்டும். அவன் மனைவியின்
முகத்திரையைச் சரியான நேரத்தில் கிழித்து விட வேண்டும். அவள் அவமானப்படுவதைக் கண்
குளிரப் பார்க்க வேண்டும். எத்தனை பேரைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பாள். தானும்
அவர்களுள் ஒருவராக ஆகிவிடக்கூடாது. மாமியார்களும் புத்திசாலிகளாகி விட்டார்கள்
என்பதை நிருபிக்க வேண்டுமென்ற எண்ணம் மனத்தில் தீயாய்ப் பற்றிக் கொண்டது.
மூட்டைப்பூசிகளாய் உறவுகளின் இரத்தத்தை உறிஞ்சிச் சுகம்
காணும் நயவஞ்சகர்களின் பட்டியலில் தன் மருமகளும் இருப்பது ஏமாற்றத்தைத் தந்தது. “இவளுக்கு
நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்டம் எல்லை மீறிப் போய்விடும்.
சுதாகரித்துக் கொள் மருது” மனசாட்சியின் குரல் எச்சரிக்கை விட்டுக் கொண்டிருந்தது.
காலையில் தன்னை வங்கிக்குச் செல்லத் தயாராகச் சொன்ன
மருமகளின் சுயரூபம் இன்று தெரிந்து விடும். மகளை இரகசியமாய் வங்கிக்கு வரச் சொன்ன
தன் திறனை எண்ணி உள்ளுக்குள் பூரித்துப் போனாள்.
“அத்த...!
உங்க ஐ.சி. தேவைப்படுது. கொஞ்சம் எடுத்துத் தாங்களேன்”
“எதுக்கு?”
புருவங்களை உயர்த்தினாள் மருதம்மாள்.
“அது
வந்து அத்த, உங்களுக்கு எக்கவுண்ட் திறக்கணும். மாமா இல்லன்னு
கவலப்படாதீங்க. துணி தைக்கிற காசுலலேர்ந்து மாசம் முந்நூறு வெள்ளி உங்க எக்கவுண்டல
போறேன். அத உங்க கைச்செலவுக்கு வச்சிக்குங்க. அவருகிட்ட சொல்ல வேணாம் அத்த, சரியா!”
விக்கித்து
நின்றாள் மருதம்மாள். மறைந்து நிற்கும் மகளிடம் அவளுக்கு எதையும் சொல்லத்
தோன்றவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக