அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து மாதவனின் மனப்போராட்டம்
கூடிக்கொண்டே போனது. அலை பாயும் தன் சிந்தனையை அடக்கப் பார்த்தான். அதற்கு
வாய்ப்பில்லையெனத் தெள்ளத் தெளிவாய்த் தெரிய,
தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அப்படியே சாய்ந்து கொண்டான். நேற்று தன்
முதலாளி சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் இன்னும் இடைவிடாது ஒலித்துக்
கொண்டிருந்தன. தனக்குக் கல்வித் தகுதி இருந்திருந்தால் நேற்றே வேலையைத்
தூக்கியெறிந்து விட்டுச் சென்றிருப்பான். வழியற்றவனுக்கு மானம் எதற்கு?
மரியாதை எதற்கு?
தன்மானத்தை அடகு
வைத்து விட்டு இன்று வழக்கம்போல் வேலைக்கு வந்து விட்டான். நேற்று அவன் பட்ட
அவமானத்தை எத்தனை பேர் வேடிக்கை பார்த்தனர்! நினைத்தாலே அவன் உடம்பெல்லாம்
கூசியது. பொறுப்பில்லாதவன், திறமையில்லாதவன் என முதலாளி வசை பாடியபோது, சிலர்
முகத்தைச் சுளித்துக் கொண்டதை அவன் கவனிக்கத் தவறவில்லை. சிலர் அவனைப் பார்த்து ஏளனமாய்ச்
சிரித்ததை நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது.
இன்னும்
எத்தனை நாளுக்கு இப்படிக் கூனிக் குறுகிச் சேவகம் செய்வது?
முதுகெலும்பு வளைந்து போகும் வரை அவன் வளைந்து கொடுத்து விட்டான். இனியும்
முடியாது, நிமிர்ந்து நில்லெனத் தன்மான உணர்வு சொல்ல மனத்தில்
பெரும் யுத்தம் நடக்கத் தொடங்கியது. தாக்குதல்
நிமிடத்திற்கு நிமிடம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. ஈட்டிகளால் யாரோ
இதயத்தைக் கிழித்துப் பதம் பார்ப்பதாய் உணர்ந்தான். வலி தாங்க முடியாமல் மௌனமாய்
அழுதான்.
முதலாளியின் ஆணவம் அவனை ஆழம் பார்ப்பதை
அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று ஒரு முடிவெடுத்தாக வேண்டும். நாற்காலியை
விட்டு ஒரு முடிவோடு எழுந்தான். முதலாளியின் அறைக்குச் சென்றான். முகத்திற்கு
நேராக பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. நாற்காலியை இழுத்துப் போட்டு முதலாளியின்
முன் கம்பீரமாய் அமர்ந்துகொண்டான். முதலாளியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.
அவன் சுட்டெரிக்கும் பார்வையைத் தாங்க முடியாமல் முதலாளியின் பார்வை தாழ்ந்து
போவதை அவன் கவனிக்கத் தவறவில்லை..
“இதோ
பாரு கயல். நீ சொல்றதுக்கு எல்லாம் இனி மேல என்னால தல ஆட்ட முடியாது. அடிமை மாதிரி
கையைக் கட்டி நிக்க முடியாது. ஒன்னு உன்
புருஷனா, ஒரு குடும்பத் தலைவனா இங்க நான் வேல செய்யறேன். இல்ல ஒரு
முதலாளியா நீ இங்க வேல செய். இதுல ஏதாவது ஒன்னுதான் நடக்கனும். அதுதான் எனக்கும்
மரியாத. உனக்கும் மரியாத. முடிவு பண்ணி சொல்லு. நான் கெளம்பறேன்!” பதிலுக்குக் காத்திராமல்
முதலாளியின் அறையை விட்டு வெளியேறினான் மாதவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக