புதன், 23 மார்ச், 2022

#குறுங்கதை 046 #அன்னதானம்

 


நூறு பேருக்கு அன்னதானம் என்றபோது அவனுக்குப் பெருமையாய்தான் இருந்தது. சிறியதாய் முதல் போட்டு வியாபாரத்தைத் தொடங்கியபோது அவனுக்கு அவன் மேலேயே நம்பிக்கை இல்லை. ஆனால், இன்று பெரிய லாபத்தைப் பார்த்தபோது பிரமித்துப் போனான். இந்த வெற்றிக்குக் கடவுள்தான் காரணம். அதற்கு நன்றிக் கடனாகத்தான் இன்று இந்த அன்னதானம்.

வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆளைத் தேடிப் பிடித்து அன்னதானம் கொடுக்க வேண்டிய நிலை இல்லை. கோயில் பூசை முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் நிற்க, ஒவ்வொரு பொட்டலமாக எடுத்துக் கொடுத்தான். சிறியவர் பெரியவர், இளைஞர்கள், வயதானவர்களென உணவுப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டனர். அன்னதானம் செய்யும் முன்பே தனக்கும் தன் மனைவிக்கும் மறக்காமல் இரண்டு பொட்டலங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டான். அது ஏனோ தெரியவில்லை, கோயில் சாப்பாடு என்றாலே அது தனி ருசிதான். இந்த கோயில் உணவுக்காக அவன் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்ற நினைவு மனக்கண்ணில் வந்து போனது.

மும்முரமாய் உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் சில பொட்டலங்களே மிஞ்சி இருந்தன. வரிசையில் நிற்பவர்களுக்குப் போதுமானதாக இருக்குமென மனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டான்.

“தம்பி... இன்னொன்னு கெடைக்குமா?” தன் முன் நின்ற பெரியவர்  கெஞ்சி கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“முடியாது தாத்தா. ஒரு ஆளுக்கு ஒன்னுதான்!” தெளிவாய்ச் சொன்னான். பெரியவரின் முகம் சுருங்கிப் போனது. புன்னகை மறைந்து போனது. ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூடுதலாகக் கொடுத்தால், மற்றவர்களுக்குப் இல்லாமல் போய் விடாதா?

அடுத்து ஒவ்வொருவராக அவனிடம் உணவுப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டனர். வாங்கியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவனுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. அன்னதானத்தைச் சிறப்பாய்ச் செய்து முடித்து விட்டதில் பூரண திருப்தி. தொடர்ந்து தன் வியாபாரம் பெருகி, லாபம் கூட வேண்டுமென மனதார வேண்டிக் கொண்டான். மூலவர் முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

மணியாகிக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி பசியோடு காத்திருப்பாள். விரைந்து சென்று விபூதியை இட்டுக் கொண்டான். கொஞ்சம் விபூதியை தாளில் மடித்து எடுத்துக் கொண்டான். கோயில் வாசலை வந்தடைந்தான்.  சற்று முன் கூடுதல்  உணவுப் பொட்டலம் கேட்ட பெரியவர் மீண்டும் அவன் முன் வந்து நின்றார்.

“தம்பி... சாப்பாடு ஏதும் மிச்சம் இருக்கா!” கேட்டுக்கொண்டே அவனைக் கூர்ந்து பார்த்தார். அவனும் பார்த்தான். அவரது ஒட்டிப் போன முகம் அவனை ஏதும் செய்யவில்லை.

“அதான் மொதல்லேயே சொன்னனே தாத்தா. சாப்பாடு முடிஞ்சு போச்சு!”

“ம்ம்ம்... அப்படியா! பரவாயில்ல தம்பி, என் பொண்டாட்டிக்குக் கொடுத்து வைக்கல!” வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பிச் சென்றார் பெரியவர்.

வீட்டிற்குக் கிளம்பும் முன் கடைசியாய்க் கடவுளுக்கு பெரிய குப்பிடு போட மனம் எண்ணியது. வாசலில் இருந்துகொண்டே கைகளை மேலே தூக்கி ஓம் சரவண பவ  என உச்சரித்துக் கொண்டே மூலஸ்தானத்தைப் பார்த்தான். சற்று முன் கம்பீரமாய்க் காட்சியளித்த முருகப் பெருமானின் திருவுருவம் அவன் கண்களுக்கு ஏனோ புலப்படவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...